
ஆட்குறைப்பு நடவடிக்கை தீவிரமாக இருந்த காலகட்டத்தில், வேலையும் குறைந்துவிட்டதால் ஏதேதோ சம்பந்தமில்லாத வேலைகளைச் செய்து கொண்டிருந்தேன். ஏறக்குறைய நிர்வாகத்திற்கு கிடைக்க வேண்டிய வழிகள் எல்லாப் பக்கங்களிலும் அடைபட்டது போன்ற சூழல் அது. இறுதியில் ஒரு சிலர் மட்டுமே ஈடுபட்டிருந்த ஒரு வேலையில், ஊருக்குப் போன அந்த நபர் வராமல் போனதால் என்னைத் தற்காலிகமாக நியமித்திருந்தார்கள்.
அது நான் பார்த்த வேலையைவிட சற்றே குறைவான வேலைதான் (அந்த வேலை பார்க்கப் பொறியாளரே தேவையில்லை), இருப்பினும் அதை ஏற்றுக்கொண்டு போனேன் (அது நான் செய்த தவறு). அதில் முற்றிலும் சம்பந்தமே இல்லாத ஒரு அறிக்கை கேட்டார்கள். "அதெல்லாம் எங்கள் வேலையில்லையே" என்றேன். அதுபற்றி ஏற்கனவே கிளைன்டில் பணிபுரியும் ஒரு மூத்த அதிகாரியிடம் கேட்டபோது, "அதெல்லாம் நீங்கள் செய்யாதீர்கள் சார்... அந்த மின்னஞ்சலுக்குப் பதில் போடுங்கள். கேள்வி கேட்டவர் ஒன்னும் பெரிய ஆளெல்லாம் இல்லை" என்று வழிநடத்தினார். பொதுவாகப் பெரிய ஆள், சின்ன ஆள் என்றெல்லாம் நான் எப்போதும் பார்த்ததில்லை. எப்போதும் போலவே என் நிலைமையை விளக்கிப் பதில் போட்டேன். பெரிய நபர்களெல்லாம் CC-ல் (Copy) தான் இருந்தார்கள். ஆனால், அங்கே அந்த முன்னால் நபரின் நாட்டினர் கொண்ட லாபி அதைப் பெரிதாக்கி மாற்றி, அந்த வேலையையும் நிறுத்தி விட்டார்கள். இதைப் பற்றி விளக்க அப்பொழுது எமக்கு உதவி செய்ய யாருமே இல்லை (அனைவரும் விடுமுறையில் இருந்தார்கள்). இது என் பெரிய மேலாளருக்குத் தெரியவர, அவரிடம் என் விளக்கத்தைக் கொடுத்தேன். இருப்பினும் அவர் மிகவும் வருத்தப்பட்டு நகர்ந்து விட்டார்.
இந்நேரத்தில்தான் குடும்பத்தோடு ஊருக்குப் போய்விட்டு விடுமுறையில் திரும்பி வந்திருந்தேன். துணை மேலாளரிடம் இருந்து (சரியாக 2022 டிசம்பர் முதல் வாரத்தில்) அழைப்பு வந்தது. "ஆஹா... ஏதோ நடந்துவிட்டது" என்றே உள்மனது சொன்னது. பத்து வருடங்கள் நல்ல முறையில் வேலை பார்த்த நிறுவனத்திலிருந்து விடைபெறுவதற்கான கடிதம் கையில் கிடைத்தது.
வேலை இல்லாமல்தான் நீக்குகிறார்கள் என்றாலும், படித்துக் கொண்டிருந்த பிள்ளைகளின் நிலைமையை எண்ணி சற்றே கலக்கமடைந்தேன். ஒருவகையில் அது நல்ல முடிவு என்றும் மனசு கூறியது. காரணம், பிள்ளைகளை நம் ஊரில் வளர்த்தால்தான் அவர்கள் அங்கே உள்ள நல்லது கெட்டதைப் புரிந்துகொள்ள முடியும் என்று நானும் என் மனைவியும் அடிக்கடி பேசினாலும், முடிவெடுக்க முடியாத குழப்பத்திலேயே இருந்தோம். அதற்கான தீர்வாகவே இக்கடிதம் வந்ததாக மனமார ஏற்றுக் கொண்டோம்.
இருப்பினும் இன்னும் இரண்டு மாத கால அவகாசமே இருந்ததால் பிப்ரவரிக்குள் காலி செய்ய வேண்டும். நான் மார்ச் மாத இறுதிவரை சம்பளத்துடன் கூடிய நீட்டிப்பு வழங்குமாறு வேண்டினேன். அதை அந்த நிறுவனமும் ஏற்றுக்கொண்டதுடன் மட்டுமின்றி, "திரும்ப வேலை கிடைத்தால் வரலாமென்றும் வேலை கிடைக்கும்வரை விசாவை நீட்டிப்பதாகவும்" கூறியது (இதுவும் யாரும் அவ்வளவு எளிதில் செய்ய மாட்டார்கள்). இப்படியாக 2023 மார்ச்சில் மனைவி மக்களை முதலில் அனுப்பிவிட்டு, நானும் மாத இறுதியில் கிளம்பத் தயாரானேன்.
கடிதம் வந்த உடனேயே முதலில் தெரிவித்தது மரியாதைக்குரிய அந்த ஒரு முக்கிய நபருக்குத்தான் (பெயர் வேண்டாமென்று நினைக்கிறேன்). அவர் கூறிய வார்த்தைகள்தான் நான் இதுவரை வேலை பார்த்தமைக்கான அங்கீகாரம் என்று நினைக்கிறேன். "ராஜா கவலைப்படாதே... உன்னை இழந்தால் கத்தார் ஒரு நல்ல பொறியாளரை இழந்ததாக அர்த்தம். உன் CV-யை அனுப்பி வை" என்றார்.
இங்கே கத்தார் என்பது மிகச் சிறிய மார்க்கெட் உள்ள நாடு. அதிலும் நான் சார்ந்த வேலை என்பதில் போட்டி நிறுவனங்களும் வெகுக்குறைவே (இவரை விட்டால் அவர், அவரை விட்டால் இவர்). எனவே உள்ளுக்குள்ளேயே மாறுவதென்பது அவ்வளவு எளிதல்ல. பையன் ஒன்பதாவது போகப்போகிறான், இந்த நேரத்தில் இப்படி ஆகிவிட்டதே என்று எண்ணியே அங்கும் இங்குமாக விண்ணப்பித்துக் கொண்டே இருந்தேன்.
வேலை தேடும் முயற்சியில் நல்ல சம்பளத்தில் கிடைக்க வேண்டிய ஒரு வேலையும் கடைசி கட்டத்தில் வேறு யாருோ ஒருவருக்கு முக்கியமான நபரின் சிபாரிசால் கிடைக்கவில்லை. கண்டிப்பாக வருமென்று எதிர்பார்த்த மற்றுமொரு நிறுவனத்திலிருந்தே பதிலே வரவில்லை. கடைசியில் ஏதோ ஒரு துணிச்சலில் நானே அந்த நிறுவனத் தலைவருக்கு ஒரு ஐந்து நிமிடம் பார்க்க மட்டும் அனுமதி வேண்டி மின்னஞ்சல் செய்தேன். அவரும் வரச் சொன்னார். மிகுந்த தைரியத்தோடு என்னைப் பற்றியும் நான் செய்த வேலைகளைப் பற்றியும் விவரித்தேன். அவருக்கு மிகவும் பிடித்துப்போனது. இருப்பினும் சேர்வதற்கான கடிதம் மட்டும் வரவே இல்லை.
ஊருக்குப் போய் பசங்களுக்கான பள்ளிகளைத் தேடி, அதன் அருகிலேயே வாடகைக்குப் வீடு பார்த்து எல்லாம் செய்துவிட்டு, அம்மா, அப்பா, மனைவி, பசங்களென கடமைகள் பற்றிய பல சிந்தனைகளுடன் வேலைக்காகக் காத்திருந்தேன். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர், சாய்பாபா என்று ஒவ்வொரு கோவிலாகப் போய்வந்தேன்.
ஒரு நாள் சாயிபாபா கோவிலில் 200 பேர் வரிசையில் நின்றிருந்தனர். ஏனோ தெரியவில்லை, அந்தக் கூட்டத்தில் என்னை மட்டும் அழைத்து ஒரு சாமிக்குப் போட்டிருந்த ஆளுயர மாலையை அணிவித்தனர். அப்போதே மனைவியிடம் கூறினேன், "இன்று ஏதோ ஒரு நல்ல செய்தி வரப்போகிறது" என்று. சொன்னது போலவே அன்றே கத்தாரிலிருந்து வந்தது அந்த அழைப்பு. "எப்போது வருகிறீர்கள்?" என்றார்கள்.
இதோவென்று உடனேயே அடுத்தப் பயணத்திற்குத் தயாராகி, 20 மே 2023 அன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தேன்.மீண்டுமோர் புதிய பயணம் தொடங்கியது.
(
#கத்தாரில்_நான் என்னும் எனது இந்த முதல் பகுதி இத்தோடு முடிவடைந்தது உறவுகளே... இதுவரை எம்மோடு பயணித்த அனைவருக்கும் நன்றியைக் கூறிக்கொண்டு, தற்காலிகமாக இத்தொடரிலிருந்து விடைபெறுகிறேன்! நன்றி! நன்றி!!)
...... முற்றும் (தற்காலிகமாக)......

செ. இராசா