முந்தைய பதிவில் நான் பகிர்ந்த விஷயத்திற்காக என் மனைவியார் மிகவும் கோபப்பட்டார். அதற்காகத் தார்மீக அடிப்படையில் பொதுவெளியில் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். I'm very sorry மனைவியாரே...(போதுமா
)
சரி... இப்போது நம் கதைக்கு வருவோம். நான் வேலை பார்த்த சவுதி நிறுவனத்தில் அதிக வேலை இல்லாமல் ஏதோ காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த தருணம் அது. இருப்பினும், வேலையை முடித்து இறுதிச் சான்றிதழ் வாங்கும் பொறுப்பில் இருந்தபடியே அடுத்த கட்ட நகர்வில் இருந்தேன். அப்போதுதான் என் சித்தி பையன் வினோத், பி.எஸ்.சி (B.Sc
) கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்திருந்தான். அவனுக்கு ஏதாவது ஒரு வேலை கத்தாரில் பார்க்க வேண்டும் என்று என் சித்தப்பா கேட்டார். அதற்கு நான், "சித்தப்பா, இங்கே அவன் படித்த படிப்புக்கு வேலை கிடைப்பது கடினம். வேண்டுமானால் அவன் 'சேஃப்டி கோர்ஸ்' (Safety Course) படித்தால், அதற்கான வேலையை நான் கட்டாயம் அமைத்துத் தருகிறேன்" என்றேன். அதற்கான முழுப் பொறுப்பையும் நானே ஏற்று அவனைப் படிக்க வைத்தேன். உறவுகள் அனைத்தும் என் முடிவைத் தவறென்று விமர்சித்தார்கள். காரணம், அவனது முந்தைய படிப்புக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றார்கள். இது என் காதில் விழுந்த அந்தக் கணமே, அவனுக்காக ஒரு வேலையை என் சப்-கான்ட்ராக்டரிடம் (Subcontractor) பேசி (இதுவே நான் செய்த முதல் சிபாரிசு) வாங்கிக் கொடுத்தேன். அவனை ஒரு தாய் ஸ்தானத்தில் இருந்து என் மனைவியார் பார்த்துக்கொண்டது, நாங்கள் செய்த பாக்கியம். என் அப்பா அடிக்கடி கூறுவார், "நீ மட்டும் நன்றாக இருந்தால் பத்தாது, நாலு பேருக்கு நன்மை செய்ய வேண்டும்" என்று. அந்த வகையில், அயல்நாட்டில் (இதற்கு முன் அஸ்ஸாமில் நிறைய செய்துள்ளேன்) நான் செய்த முதல் நன்மை இதுவென்றே நினைக்கிறேன் (இன்று அவர் குடும்பத்தோடு பஹ்ரைனில் உள்ளார்).
நிறுவனத்தில் வேலை இருக்கிறதோ இல்லையோ... அடுத்த குழந்தைக்கு நான் தயாராகிவிட்டேன் (எப்பூடி?!


) இரண்டாவது குழந்தை, முதலில் அபார்ஷன் ஆகிவிட்டாலும், அடுத்த முயற்சியில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. தங்கை இல்லாத வீட்டில் பிறந்தவர்களுக்குத்தான் தெரியும் பெண் பிள்ளையின் அருமை. ஆம்... முதல் குழந்தையே பெண் பிள்ளைதான் என்று எதிர்பார்த்தேன், இருப்பினும் இரண்டாவது குழந்தையாகப் பெண் பிள்ளை பிறந்தாள். எல்லாம் உறையூர் வெக்காளியம்மன் அருள். இந்தப் பிரசவத்திற்கு என் அம்மா வரவில்லை; அதற்குப் பதிலாக என் சித்தி, அதாவது தம்பி வினோத்தின் அம்மா வந்திருந்தார். பிரசவம் முடிந்து வந்த என் மனைவிக்கு, அந்த நேரம் பார்த்து கடுமையான நிமோனியா காய்ச்சல் வந்தது. மீண்டும் மருத்துவமனை செல்லும் நிலைமை. குழந்தை வீட்டில், அம்மா மருத்துவமனையில்... கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். பால்குடி மறவா குழந்தை வீட்டில் இருக்க, அம்மா மருத்துவமனையில் இருந்தால், அதுவும் வெளிநாட்டில் இருந்தால் அனைவரின் நிலைமையும் எப்படி இருக்கும்?! கடவுளே, அந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது. தாய் பால் கட்டிப்போட, பாப்பா பாலில்லாமல் தவிக்க, மூத்த மகன் தாய்க்காக ஏங்க... என ரொம்பவே கஷ்டப்பட்ட காலம் அது. எப்படியோ சமாளித்துக் கொண்டிருந்தபோது, நான் வேலை பார்த்த நிறுவனத்தின் நிலைமை படுமோசமாகச் சென்றது.
பொதுவாக, ஒப்பந்தக்காரர்கள் அனைவரும் கன்சல்டன்ட் (Consultant) அலுவலகம் சென்று ஒப்புதல் வாங்கித்தான் கிளைன்ட்டிடம் (Client) இறுதியாகச் சமர்ப்பிப்போம். அப்படி ஒருநாள் கன்சல்டன்ட் அலுவலகம் சென்றபோது, அங்கிருந்த மேலாளர் என்னை அறைக்கு அழைத்து, "எங்களோடு வேலை பார்க்க வருகிறாயா?" என்று கேட்டார். நானும் ஒரு வேகத்தில் "சரி" என்றேன். அழைப்பும் வந்தது. ஆனால், சம்பளம் மிகவும் குறைவாகச் சொன்னார்கள். "சார்.. கொஞ்சம் இப்போது வாங்கும் சம்பளமாவது கொடுங்கள்" என்றேன். "இல்லை... இது இன்ஸ்பெக்டர் (Inspector) பதவி, இதற்கு இவ்வளவுதான்" என்றார்கள். "எனில், இன்ஜினியர் வேலை இருந்தால் கூறுங்கள்" என்றேன். உண்மையில் அன்று நான் எடுத்த முடிவு சரியா தவறா என்று தெரியவில்லை. இருப்பினும், அது என் உள்மனம் கூறிய ஆலோசனை. அது சரியான முடிவென்று பின்னர் உணர்ந்தேன்..
ஒரு வாரம் கழித்து மீண்டும் அழைப்பு வந்தது. சம்பளம் குறைவுதான், ஆனால் ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் ஏற்றால் உடனே வருகிறேன் என்றேன். நான் கட்டிடவியல் பொறியாளர் என்பதால், எனக்குப் பிற்காலத்திலாவது கேபிளில் இருந்து விடுபட்டு, அது சார்ந்த வேலை வேண்டுமென்றேன். அதற்குச் சரி என்று சொன்னார்கள். உடனேயே ஒப்புக்கொண்டு, முதல்முறையாக ஒரு ஒப்பந்தக்காரர் பின்புலத்தில் இருந்து, கன்சல்டன்ட் என்கிற நிலையை அடையும் வாய்ப்பை நோக்கிச் சென்றேன்.
அப்படியே வேலையிலும் அடியெடுத்து வைத்தேன். இது ஒரு செர்பிய நாட்டு நிறுவனம். இங்கே வீடு தரமாட்டார்கள். எனவே, புதிய வீடு தேட ஆரம்பித்தேன். இதுவரையிலும் ஏழு வருடங்கள் தங்கியிருந்த அல்சாத்தை விட்டு, அபுஹாமரில் உள்ள ஒரு வீட்டிற்கு மாறினேன். அதிகாலை 6:30 மணிக்கே தொடங்கும், ஐரோப்பியக் கண்டத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தில், சாதாரண அம்மன்பட்டி என்னும் குக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவன் அடியெடுத்து வைக்கத் தயாரானேன். ஆனால்...அங்கே நம்மைப் பிடிக்கவே பிடிக்காத (நம்மை என்றால் நீங்க நான் அனைவரும்) ஒரு நபர் இருந்தார். அவரால்தான் பிரச்சினையே....











No comments:
Post a Comment