18/07/2026

கத்தாரில் நான் - 17

 









இதுவரையிலும் அதிகபட்சமாகத் தொடர்ந்து ஏழு வருடங்கள் பணிபுரிந்த, பாகிஸ்தானியர்கள் மிகுந்த சௌதி நிறுவனத்தை விட்டுவிட்டு கன்சல்டன்ட் வேலைக்குச் செல்லத் தயாரான சூழலில்தான், எனக்கு 'ஆபரேஷன் மேனேஜர்' என்னும் புதிய பதவியையும் தர இருந்தார்கள். "யாருமே இல்லாத இடத்தில் எதை ஆபரேஷன் செய்வது?" என்று சிரித்துக்கொண்டே ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தேன். என் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, அந்தப் பாகிஸ்தானிய மேலாளர் எனக்காகப் பல சலுகைகள் செய்தார். அதை நான் வாழ்க்கையில் மறக்கவே கூடாது. அதாவது, நான் ராஜினாமா செய்தால் ஒரு மாத கால அவகாசம்; அதுவே அவர்கள் என்னை நீக்குவதுபோல் இருந்தால் இரண்டு மாத கால அவகாசம் என்றார்கள். அதன் பொருள் புரியாமல் கேட்டேன். அவர்கள் இரண்டு மாதங்கள் எனப் போட்டுவிட்டு, மொத்த இரண்டு மாதச் சம்பளத்தையும் தருவதாகக் கூறினர். அது அவர்களின் கருணை மிகுந்த செய்கை. அதுமட்டுமின்றி, முந்தைய ஏழு வருடங்களாகப் பக்ரீத், ரம்ஜான் தினங்களில் (அரசாங்கம் போலவே விடுமுறை நாட்கள் அதிகம்) 10 முதல் 14 நாட்கள் வரை வேலை பார்த்த கணக்கின்படி, ஏழு வருடங்களுக்கும் சேர்த்து ஒரு தொகை கொடுத்தனர். பிறகு இறுதி ஓய்வுத்தொகையென கைநிறைய, மனம் நிறையக் கொடுத்த அந்த உதவியால்தான் காரைக்குடியில் ஒரு இடம் வாங்கி வீடுகட்ட ஆரம்பித்தேன். அதற்கு முழுக்க முழுக்கக் காரணம் அந்த மத, இன பேதம் பார்க்காத மனிதநேயம் மிகுந்த மகத்தான அந்த மனிதரே. நன்றி முகமது ரியாஸ் சார்.
​மேலும் ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேன். நான் புதிய நிறுவனத்திற்குப் போனாலும், வாடகை வீடு கிடைக்கும் வரை ஒரு இரண்டு-மூன்று மாதங்கள் என்னைப் பழைய வீட்டிலேயே இலவசமாகத் தங்கவும் அவர் அனுமதித்தார். இப்படியெல்லாம் இருந்த ஒரு நல்ல நிறுவனத்தை விட்டுவிட்டு (அதன் பின் கத்தாரில் வேலை எடுக்கவில்லை) புதிய
Consultant நிறுவனத்திற்குப் போனேன். சென்ற நாள் முதலாகவே ஒரு 'டாபர்மேன்' (அவரை அப்படியே அழைப்போம்) என்னைப் பகைவராகவே பார்த்தார். பற்பல சோதனைகளைக் கொடுத்தார். அது என்னிடம் மட்டுமல்ல, சிலரைத் தவிர பெரும்பாலும் அனைவரிடமும் அப்படித்தான் இருந்தது. குறிப்பாக என்னைக் கண்டாலே அதுக்குப் பிடிக்காது. துரதிர்ஷ்டவசமாக, அந்த டாபரின் உறவினர் ஒருவர் மேலிடத்தில் அசைக்க முடியாத இடத்தில் இருந்தார். அவரின் மூலமாக இரவில், "ஒழுங்கு மரியாதையா ஊரைவிட்டு ஓடிடு... இல்லையென்றால்........." என்கிற ரீதியில் மிரட்டல் வந்தது. "அது ஏன் எனக்கு வரணும்?" என்று நீங்கள் கேட்கலாம். காரணம் இல்லாமல் இல்லை... நேர்மை, நியாயம் என்று இருந்தால் (சிலருக்கு) பிடிக்காதுதானே. "ஏன் நிறுவனத்திடம் முறையிடக் கூடாது?" எனலாம். அப்படியெல்லாம் பெரிய நிறுவனங்கள் யாரையும் யாருக்காகவும் பகைத்துக்கொள்ளாது; டிப்ளமாட்டிக்காகத்தான் ஓட்டுவார்கள். அதைச் சமாளிக்க உண்மையில் நிறையவே சிரமப்பட்டேன். இருப்பினும், வேலையில் நான் காட்டிய முனைப்பால் 'டாபர்' இல்லாத இடத்திற்கு என்னை மாற்றி மாற்றிப் போட்டார்கள் (அதுதான் எனக்காக செய்ய முடியும்).
​அந்தக் காலகட்டத்தில்தான், அதுவரையிலும் களப்பணியே பார்த்த நான், வெறும் அலுவலகப் பணி மாத்திரமே பார்க்கும் சூழல் வந்ததால் உடல் எடை 100 கிலோவிற்கு அருகே (97 கிலோ) வரை சென்றுவிட்டது. எங்கே போனாலும் கேலியும் கிண்டலும்தான். பேண்ட் சைஸ் 42-ஐத் தாண்டியது. நண்பர் குழுவில் இருந்த ஒரு தெரியாத நபர், "யாரடா இவரு... மதுரை கட்டப்பஞ்சாயத்து ஆளு மாதிரி இருக்காரே!" என்று கமெண்ட் அடித்தார். அந்த வார்த்தை டாபர்மேனின் டார்ச்சரைவிட வலி தந்தது. அன்று முடிவெடுத்தேன்; எப்படியாவது உடல் எடையைக் குறைத்தே ஆக வேண்டுமென்று. நடந்தேன், நடந்தேன்... கத்தாரெங்கும் நடந்தேன். உடல்எடைதான் குறையவே இல்லை. (அதுக்கு வாயையும் கட்டுப்படுத்தனும்😊😊😃)
அப்புறம் 'நமக்கு நாமே' திட்டம் போல் எனக்கு நானே ஒரு வழியைக் கண்டுபிடித்தேன் (கலோரி கணக்கு வைத்து சாப்பிடும் முறை அது). நானும் என் மனைவியும் அந்த முயற்சியில் சேர்ந்தே இறங்கினோம். நான்கே மாதங்களில் 25 கிலோவைத் தூக்கி எறிந்துவிட்டு 72 கிலோவிற்கு வந்துவிட்டேன். அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள்... எப்படி என்று கேள்வி கேட்டார்கள். ஒரே நைட்டில் ஒபாமா ஆனது போல்... எங்கு போனாலும் டயட்டீஷியன் மாதிரி வகுப்பெடுக்க ஆரம்பித்தேன். சிலர், "என்ன சுகரா?" என்று நக்கலும் செய்ய முயன்றார்கள். என் தோற்றமே இளமையாக மாறியதாக உணர்ந்தேன். உடல் எடையை எப்படி குறைப்பதென்று, கத்தார் மனவளக்கலையில் எனது முதல் சிந்தனை வகுப்பும் கொடுத்தேன்.
இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் அலுவலகத்தில் டாபர்மேன் குழுவினர் தொல்லை மேல் தொல்லை கொடுத்தனர். வெவ்வேறு தந்திரங்களைக் கையாண்டு என் பெயரைக் கெடுக்க முயற்சித்தனர். நான் மனவளக்கலையில் பயணித்ததால், தவம் முடித்தவுடன் அவர்கள் அனைவரையும் தினமும் நினைத்து மனதார "வாழ்க வளமுடன்" என்று வாழ்த்த ஆரம்பித்தேன். ஆகா... அதன் விளைவுதான் எவ்வளவு அற்புதம்?!!

No comments: