19/07/2026

கத்தாரில் நான் - 18

 



ஏதோ ஒரு ஆர்வக்கோளாறில் கன்சல்டன்ட் நிறுவனத்தில் பேரம் பேசத் தெரியாமல் பொறியாளர் பணிக்குச் சேர்ந்தாலும், அது முற்றிலும் புதிய பரிமாணம் கொண்ட அலுவலக வேலை. களப் பணியில் (Field work) அடியேன் கில்லியாக இருந்தாலும், இங்கே நிறைய வரைபடங்களைப் பார்த்து, குறைகளைச் சுட்டிக்காட்டித் திருத்த வேண்டும். தேவையெனில் கள ஆய்வும் செய்ய வேண்டும். இங்கே என்ன சவால் என்றால்... எல்லாவற்றையும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய வேண்டும். பேசுவது வேறு... எழுதுவது வேறுதானே? அதுவும் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்கிறோம். அப்போது இத்தகைய AI செயலிகள் எல்லாம் இல்லை. ஏதோ முயற்சி செய்து தட்டச்சு செய்தேன். நிர்வாகத்தின் துணை மேலாளர் (மேலாளர் இருந்தாலும் இவர்தான் எல்லாம்) என்னிடம் வந்தார். என்னை விட வயதில் சிறிய அந்த ஊர் பையனிடம், ஒரு மணி நேரம் எப்படித் தட்டச்சு செய்ய வேண்டும் என்று கற்றுக்கொள்ளச் சொன்னார். அவனும் நல்ல பையன்... எனக்குப் பாடம் நடத்தினான். "Must, will be completed" என்றெல்லாம் போடக்கூடாது, "Contractually, Shall" என்றே போட வேண்டும் என்று நிறையவே கற்றுக்கொண்டேன். மின்னஞ்சல் முறையாக எழுதவும் இங்கேதான் பழகினேன். வீட்டில் 'Repidex Spoken English', 'Repidex Drafting Course' என எல்லாம் படித்துதான் என் ஆங்கிலத்தை ஓரளவு மேம்படுத்தினேன் என்று சொல்லலாம்.
​நம்ம இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் வேலையில் கில்லிகள். ஆனால், சம்பள விஷயத்தில் பெரும்பாலும் கோட்டை விட்டுவிடுவோம். நமக்கெல்லாம், "பணத்தை நாமாகவே கேட்கக்கூடாது, அவர்களாகவே செய்ய வேண்டும்" (நல்லா செய்வாங்க வாங்க) என்ற எண்ணம். மேலும், சம்பளச் சந்தை நிலவரத்தை ஆய்வு செய்வதில்லை. இந்த மாதிரியான விஷயங்களால் நான் ஆரம்பத்தில் கோட்டை விட்டுவிட்டேன். பத்து மாதத்தில், அதிக ஆவணங்களைச் சரிபார்த்ததற்கான புள்ளி விவரங்களுடன் துணை மேலாளரை அணுகி, 2000 ரியால் சம்பள உயர்வு வாங்கினேன். அடுத்த ஓரிரு ஆண்டுகளில் மீண்டும் 1000 ரியால் உயர்த்திக்கொண்டேன். அது போக, எப்போதும் கிடைக்கும் ஊக்கத்தொகைகளும் வரவே செய்தது. (இதைக் குறிப்பிடுவதன் நோக்கம், என்னைப்போல் பின்புலம் கொண்டவர்கள் தயங்க வேண்டாம் என்பதே).
​அப்புறம் சொல்ல மறந்துவிட்டேன், அந்த டாபர் மேன் என் வளர்ச்சியைப் பொறுக்காமல் என்னென்ன செய்தான் தெரியுமா?
நான் நிர்வாகம் கேட்டதன் பேரில் சிபாரிசு செய்பவர்களை வராமல் விடுவது, வந்தாலும் அவர்களை சீக்கிரமே வீட்டுக்கு அனுப்புவது, எப்போது பார்த்தாலும் முறைப்பது, சாப்பிடும் அறையில் என்னைப் பார்த்தபடியே இருக்கையைத் தூக்கிப்போடுவது, கழிப்பறைக் கதவைக் காலால் உதைப்பது, மிகவும் கடினமான சூழல் என நினைத்து என்னை அங்கே அனுப்புவது அவருடைய ஆட்களை வைத்து மிரட்டல் விடுவது, நிர்வாகத்தில் இல்லாததையும் பொல்லாததையும் கூறுவது என இருந்தான். (நாமதான் எந்தப் பந்து போட்டாலும் சிக்ஸர் அடிப்போமே!) நானோ ஒவ்வொரு நாளும் தியானத்தில் இவனையும், இவன் சேர்ந்த குழுவையும் "வாழ்க வளமுடன்" என்று வாழ்த்திக்கொண்டே இருந்தேன். ஒரு சூழல் உருவானது. அவனைப் பற்றிப் பற்பல வேறு நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரும் புகார் அளிக்க... அந்த ஒட்டுமொத்த கும்பலும் ஒரே நாளில் யாரிடமும் சொல்லாமல் காணாமல் போனார்கள். இதுவே கர்மா என்பது!
இங்கே இன்னொரு கர்மாவையும் சொல்ல வேண்டும். முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேனே அந்த 'குபேரனைப்' பற்றி... ஞாபகம் இருக்கிறதா? என்னைக் கூட்டிவந்து வாடகைக்கு விட்ட அந்த நிறுவனர். வாங்க, அவரின் கர்மாவைப் பார்ப்போம். ​அவர் இந்த நாட்டின் பெயரில் நிறுவனம் ஆரம்பித்திருந்தார். ஆனால், அந்த நிறுவனம் இவர்கள் செய்த ஏதோ ஒரு வினையால் அரபியின் கைக்கே போனது. அருகிலிருந்த நாடுகளிலெல்லாம் கிளைகள் பரப்பி கோலோச்சினாலும், இங்கே கத்தாரில் மீண்டும் நுழைய முயன்ற குபேரன், ஓடாத குதிரையை வாங்கி அதோடு மேலும் ஓடாத சில குதிரைகளையும் சேர்த்து அதன்மேல் சவாரி செய்ய முயன்றார். நல்ல விடயம்தான். ஆனால் இம்முறை பல வழிகளில் நம்மூர் பசங்களை "இந்தியாவில் ஒரு ஒப்பந்தம், கத்தாரில் ஒரு ஒப்பந்தம்" எனப் போட்டுப் பிழிவதாகக் கூறி நிறைய பேர் வருத்தப்பட்டனர். இந்த நிலையில்தான், இவர் வாங்கிய நிறுவனம் என் மேற்பார்வையில் ஆய்வு செய்யும் சூழல் வந்தது. ​காங்கிரீட் போடச் சொன்னால் பிள்ளைத்தாச்சி வயிறுபோல் புடைத்துக்கொண்டிருந்தது. உடைத்துவிட்டுப் போடச் சொன்னேன் (சத்தியமாகப் பழிவாங்கும் மனநிலையில் எல்லாம் நான் இல்லை).‌ ஆனால் சூழல் அவரே என்னைப் பார்க்க வரவைத்தது. நான் இருந்த கேபினுக்கு வந்து, "சார்... வணக்கம்" என்றார். (மனதிற்குள் 'இன்னும் ஒருதபா சொல்லு' என்கிற உணர்வு! 😀). "தயவுகூர்ந்து நீங்க கொஞ்சம் ரெக்கமெண்ட் (Recommend) செய்தால் நன்றாக இருக்கும்" என்றார். நான், "வேலை சரியாக இருந்தால் கண்டிப்பாகச் செய்யலாம் சார்" என்றேன். மீண்டும் மீண்டும் நன்றி கூறிவிட்டு, என் கழிப்பறையைப் பயன்படுத்தலாமா என்று அனுமதியெல்லாம் கேட்டார். என்னடா இது, மனிதனின் நிலைமை! ஓஷோ கூறியதுபோல், "இந்த நிலையும் மாறிவிடும்" என்கிற வார்த்தைதான் ஞாபகம் வந்தது. அதை மெய்யாக்கும் சூழல் அடுத்தடுத்து வந்து கொண்டே இருந்தது.

No comments: