கத்தார் வாழ்க்கையில் மிக முக்கியமான மூன்று விஷயங்களைச் சொல்லியே ஆக வேண்டும். ஒன்று மருத்துவமனை அனுபவம், மற்றொன்று பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கும் அனுபவம், அடுத்து வாடகை வீட்டில் தங்கும் அனுபவம். காரணம், வெளிநாட்டில் குடும்பத்தோடு வசிக்கும் அனைவரும் இந்த மூன்றையும் சந்தித்தே ஆக வேண்டும் (சிலருக்கு மூன்றாவது அனுபவம் விதிவிலக்கு, கம்பெனி வீடு தருவதால்).
இங்கே கத்தாரில் உள்ள அரசு மருத்துவமனைகள் உலகத்தரம் வாய்ந்தவை என்பது மட்டுமல்ல, 'ரெசிடென்சி பெர்மிட்' (RP) உள்ள அனைவருக்கும் அவை இலவசமும்கூட (மருந்துக்கென்று சொற்ப அளவிலேயே கட்டணம் வசூலிப்பார்கள்). என் மனைவியின் இரண்டு பிரசவங்களும் சிசேரியன் என்றபோதும், நாங்கள் இலவசமாகவே சிகிச்சை பெற்றோம். படுக்கை வசதிக்கு மட்டும் நாள் ஒன்றுக்குச் சொற்பமாக 100 ரியால் வசூலித்தார்கள். நம் ஊரைப் போலன்றி, இங்கே முடிந்தவரை சுகப்பிரசவத்திற்கான அனைத்து முயற்சிகளையும் எடுப்பார்கள். 35,000 ரியால் மதிப்புள்ள ஊசி போட்டு முயற்சித்த பின்னரே அறுவை சிகிச்சை செய்தார்கள். மூன்று வேளையும் தரமான உணவு, எப்போதும் கவனித்துக் கொள்ள செவிலியர்கள், ஒரு நபர் கூடவே தங்க அனுமதி என அனைத்தும் மிகச் சுத்தமாக இருக்கும். இதில் குழந்தைகள் ஒருவேளை இன்குபேட்டரில் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் இருந்தால்கூட அதற்குக் கட்டணம் வசூலிப்பதில்லை (இதையெல்லாம் வேறெங்கும் நினைத்துக்கூட பார்க்க முடியுமா?!) இதேபோல்தான் மனைவிக்கு நிமோனியா காய்ச்சல் வந்தபோதும், பையனுக்குச் சிறு வயதிலேயே குடலிறக்க (Hernia) அறுவை சிகிச்சை செய்தபோதும் நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். இந்த வகையில் கத்தார் அரசுக்கு நாங்கள் மிகுந்த நன்றிக்கடன் பட்டுள்ளோம். நன்றி அரசே!
அடுத்து பள்ளியில் சேர்க்கும் அனுபவம்... அது இளம் பெற்றோர்கள் அனைவருக்கும் ஒரு பாடமே. நான் செய்த தவறு, முதல் வகுப்பிற்கு முன்னர் KG-1 & KG-2 வகுப்புகளை அருகில் இருந்த நர்ஸரியில் சேர்த்ததுதான். இதனால் ஒன்றாம் வகுப்பில் சேர்க்க மிகவும் கஷ்டப்பட்டேன். இங்கே தாங்கள் நினைத்த பள்ளியில் சேர்க்க வேண்டுமென்றால், ஒன்று மலையாளியாக இருக்க வேண்டும், இல்லையெனில் யாரையாவது தெரிந்திருக்க வேண்டும் அல்லது நல்ல யோகம் இருக்க வேண்டும். இது எதுவும் அமையாததால், பையனுக்கும் மகளுக்கும் பல பள்ளிகளில் தேடினேன். இதில் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு எனப் பல நடைமுறைகள் உண்டு. கொடுமை என்னவென்றால், ஒரு பள்ளியில் சேர்ந்துவிட்டால் அடுத்த பள்ளியில் சேர்ப்பதென்பது மீண்டும் பெரும் தலைவலியே. 13 பள்ளிகளுக்குமேல் விண்ணப்பம் வாங்கி ஒவ்வொன்றாகப் போய் வந்தேன். சில இடங்களில் அப்போது இரண்டாம் பாடமாகத் தமிழ் இல்லை, அதனாலேயே அந்தப் பள்ளிகளைத் தவிர்த்தேன். நல்ல பள்ளிகள் என்று சொல்லப்படும் இடங்களில் ஆன்லைன் விண்ணப்பத்திற்காக அரை மணிநேரம்தான் இணையம் திறந்திருக்கும். நாம் விண்ணப்பம் போடத் தொடர்ந்து முயற்சித்தால் 'பிஸி' (Busy) என்று வரும். பிறகு நேரம் முடிந்தது என்று வந்துவிடும் (அட போங்கடா..). இப்படிச் சிரமப்பட்டு, அதிகக் கட்டணம் வாங்கும் பள்ளியில் பையனைச் சேர்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். சரி, பிறகு பார்க்கலாம் என்று நினைத்தால், அவர்கள் பிள்ளைகள் வேறு பள்ளிக்குச் செல்வதைத் தடுக்கும் விதமாக டிசம்பரிலேயே அடுத்த வருடத்திற்கான ஒப்புதலும் 2,000 ரியால் முன்பணமும் வாங்கி விடுவார்கள். வாங்கும் சம்பளத்தில் பாதிப்பணம் வாடகைக்கும் பள்ளிக்குமே போய்விடும் (சில சொற்ப நிறுவனங்கள் பள்ளிகளின் கட்டணத்தைச் செலுத்துகின்றன என்பது கூடுதல் தகவல்).
வாடகை என்று சொன்னதுமே ஞாபகம் வருகிறது. இங்கே வாடகைக்கு வீடு தேடினால் பெரும்பாலும் 'மலையாளி ராஜ்யம்'தான். அதாவது, நாம் மலையாளி என்றால் ஒரு தொகை, தமிழ் என்றால் கொஞ்சம் கூடுதல், ஹிந்தி என்றால் இன்னும் கூடுதல், மற்றவர்களுக்கு மேலும் கூடுதல். நான் பெரும்பாலும் ஒரு வீட்டிற்குள் புகுந்தால், அவ்வளவு எளிதில் அடுத்த வீட்டை நோக்கி நகர்வதில்லை. இப்படித்தான், 7 வருடங்கள் முந்தைய நிறுவனம் தந்த கம்பெனி அல்சாத் (Al Saad) அபார்ட்மெண்டை விட்டு வெளியே வந்து, அபுஹாமர் (Abu Hamour) பகுதியில் கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஒரே வீட்டில் இருந்தேன். வீட்டின் பொறுப்பாளர்கள் (அரபியிடம் வாடகைக்கு வாங்கி மீண்டும் வாடகைக்கு விடுபவர்கள்) நான்கு பேர் மாறிவிட்டார்கள், நாங்கள் மட்டும் மாறவில்லை. இப்படி ஒரே வீட்டில் இருப்பதால் நமக்கும் சில லாபங்கள் உண்டு. அதாவது, 3,500 ரியால் வாடகைக்கு வந்த வீட்டை, மெல்லப் பேசி பேசி கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கடைசியில் 2,500 ரியால் வரை குறைத்துவிட்டேன். இந்த அபுஹாமர் வீட்டில் இருக்கும் போதுதான், என் மனைவியின் உறவுக்காரப் பையனையும் (என் சித்தி பையனை எடுத்ததுபோல்) அழைத்து வந்தேன். நாம் செய்யும் சில உதவிகள் நமக்கே கெட்ட பெயரையும் உருவாக்குவது உண்டு. அப்படி ஒரு சம்பவம் நடந்தது.





















No comments:
Post a Comment