21/07/2026

கத்தாரில் நான் - 20

 





































சரி, மீண்டும் கதைக்கு வருவோம். ​ஏற்கனவே குறிப்பிட்டது போல, சௌதி நிறுவனம் வழங்கிய இறுதித் தொகையைக் கொண்டு காரைக்குடியில் ஒரு இடம் வாங்கி, புதிய நிறுவனத்தில் கிடைத்த சம்பளத்தைச் சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக வீடு கட்டி குடிபுகுந்தோம். ஏற்கனவே மதகுபட்டியில் வீடு கட்டியபோது, பால்யகால நண்பர் என்ற நம்பிக்கையில் ஒரு தேவகோட்டை பொறியாளரிடம் வேலையைக் கொடுத்தேன். அந்த அனுபவம் எனக்கு ஒரு நல்ல (ஏமாற்றப்) பாடத்தைப் புகட்டியது. அதனால், "பணம் சற்று கூடுதலாகச் செலவானாலும் பரவாயில்லை, தகுதியான பொறியாளரிடமே வேலையைக் கொடுக்க வேண்டும்" என்று உறுதியாக இருந்தேன். அதன்படியே ஒரு சிறந்த பொறியாளரை அணுகினோம். அவர் எனது உறவினர் என்பது மட்டுமல்ல, 'வாழ்க வளமுடன்' SKY யோகாவின் ஆசிரியராகவும் இருந்தது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம். நாங்கள் கேட்ட அதே பட்ஜெட்டில், தரமான முறையில் வேலையை முடித்து சாவியைக் கையில் கொடுத்தார்.
​சரி, மீண்டும் கத்தார் பயணத்திற்கு வருவோம். இம்முறை என் மனைவி மூலமாக வந்த ஒரு இளைஞரை நல்ல வேலையில் அமர்த்தினோம். அவர் உண்மையில் நல்ல பையன்தான், ஆனால் இளமையின் வேகத்தில் காதலில் விழுந்திருந்தது எங்களுக்குத் தெரியவில்லை. அவர் பணி முடித்து ஊருக்குத் திரும்பியபோது, அவருக்குச் சேர வேண்டிய சம்பளம் உள்ளிட்ட அனைத்துத் தொகைகளையும் முறையாகக் கொடுத்துவிட்டே அனுப்பி வைத்தோம். ஆனால், அவர் சம்பளமே தராத நிறுவனத்தில் சேர்ந்துவிட்டதாக உறவினர்கள் மத்தியில் பேச்சுகள் கிளம்பின. "அடப்பாவிகளா..." என நொந்து கொண்டோம். சம்பளம் எங்கே சென்றது என்பது அந்தக் கடவுளுக்கே வெளிச்சம்! பரவாயில்லை, அவர் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும்.
​இந்தச் சமயத்தில்தான் என் கல்லூரி நண்பர் செல்வாவும் கத்தாருக்கு வந்தார். அவருக்குத் திரைப்படப் பாடல்கள் அத்துப்படி. அவரோடு நான் கத்தாரில் சுற்றாத இடங்களே இல்லை. வீட்டில் சிறு சிறு சண்டைகள் வரும்போதெல்லாம், அவர்தான் எனக்கு ஆறுதலும் அறிவுரையும் கூறுவார். "டேய் ராஜா... பொண்டாட்டிட்ட தோத்தவன் வாழ்க்கையில ஜெயிச்சவன்டா" என்று அவர் உதிர்க்கும் அனுபவ மொழிகள் எனக்குப் புத்துணர்ச்சி தரும். "குடும்ப அமைதியே ஆன்மீக முன்னேற்றத்தின் அளவுகோல்" என்று கத்தார் மனவளக்கலை மன்றத்தில் நான் கற்ற பாடங்கள், என் வாழ்வின் பிணக்குகளைக் குறைக்க உதவியது. மேலும், புதிய நிர்வாகத்தில் இருந்தபோது, மத்தியப் பிரதேசத்திலிருந்து ஓய்வுபெற்று வந்த குலாம் நபி கான் (லேட்) ஒரு உயர் அதிகாரி நண்பர், வாழ்க்கையைச் செதுக்கும் பல அறிவுரைகளை வழங்கினார். "வீட்டுப் பண நிர்வாகத்தை மனைவியிடமே ஒப்படைத்துவிடு; அவர்கள் திறமையாகக் கையாள்வார்கள்" என்று அவர் கூறியது சாதாரண விஷயம் அல்ல. அந்த அறிவுரைதான் இன்று சென்னையில் என் பிள்ளைகளின் எதிர்காலத்தை அவர்கள் சிறப்பாக வழிநடத்த உதவியாக இருக்கிறது. இப்படி எம் வாழ்க்கையைச் செதுக்கிய யாரையும் நான் என்றும் மறந்ததில்லை (இதை அவர்களுக்கு இதன்மூலம் நான் செலுத்தும் நன்றியாகக் கொள்க)
நிர்வாகத்தில் 'டாபர்மேன்' குழு வெளியேறிய பிறகு, வளர்ச்சியில் இருந்த தடைகள் நீங்கி நான் நல்ல முன்னேற்றம் கண்டேன். அந்த நேரத்தில் முகநூலில் 'தமிழ்ப் பட்டறை', 'தமிழ்ச் சோலை' போன்ற குழுமங்களில் கவிதைப் பயணம் சூடுபிடித்தது. என் வீட்டிலேயே ஒரு பகுதியில் தங்கிப் பாடல்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்த மலையாள நண்பர் காலின் தாமஸின் நட்பும் கிடைத்தது. அதன் மூலமாகப் பாடல்கள் இயற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்தப் பாடல்களில் ஒன்று, எனக்கு சினிமா வாய்ப்பையும் பெற்றுத் தந்தது. இப்படி வாழ்க்கை நன்றாகவே போய்க்கொண்டிருந்த நேரத்தில் தான், 'கொரோனா' என்னும் சூறாவளி மெல்ல மெல்ல சம்பளத்திலும் கை வைத்தது. ஏற்கனவே சலுகைகள் அனைத்தையும் சில வருடங்களாக நிறுத்தியும் குறைத்தும் வைத்திருந்த நிர்வாகம் Market நிலவரத்தால் புதிய வேலைகளும் கிடைக்காமல் (அல்லது குறைந்தும்) போனதால் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியது. ஒவ்வொரு லிஸ்ட் வரும்போதும் அனைவருக்குமே பக்..பக் என்றிருந்தது. ஒருநாள் மேலதிகாரியிடம் இருந்து அழைப்புவர மனதைத் திடமாக்கிக் கொண்டு அவரின் அறையை நோக்கிக் கிளம்பினேன்.

No comments: