16/07/2026

கத்தாரில் நான் - 13

 






ஏதோ ஒரு வேகத்தில், ஜப்பானிய நிறுவனத்தில் இருந்து சிலரின் தொல்லைகளைத் தாங்க முடியாமலும், முறையான விசா இல்லாமல் (பிசினஸ் விசாவிலேயே) வேலை பார்த்து வந்ததாலும், திருமணம் செய்யும் வயது வந்தமையாலும் அடுத்தகட்ட நகர்வை நோக்கி அடியெடுத்து வைத்தேன். சரியாக காலை 10 மணி அளவில் சிரிய நண்பருக்கு எனது CV-ஐ அனுப்பி வைத்தேன். 11 மணி அளவில் சௌதி நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்தது. நிறுவனத்தின் கத்தார் நாட்டு மேலாளரே பேசினார். அவர்கள் சௌதியில் இருந்து கத்தார் வந்த ஒரு மிகப்பெரிய நிறுவனம். கிட்டத்தட்ட 90% பணியாளர்கள் பாகிஸ்தானியர்களாகவே இருந்தனர். என்னோடு நேர்முகத்தேர்வு செய்தவரும் ஒரு பாகிஸ்தானியரே. அவர்களிடம் வேலைக்கான விசா இருந்தது, ஆனால் கத்தார் அனுபவம் நிறைந்த ஆட்கள் கிடைக்கவில்லை. இதை நன்றாகப் புரிந்து கொண்டு நான் நேர்முகத்தேர்வுக்குச் சென்றேன்.
அவர்களுக்கு என்னைப் பிடித்துப்போய்விட்டது. கேட்ட சம்பளத்தைத் தருவதாகக் கூறினார்கள். உடனேயே பணியில் சேரச் சொன்னார்கள். நான் சில கோரிக்கைகளை மட்டும் முன்வைத்தேன்:
1. எனக்குப் பொறியாளர் விசா வேண்டும்.
2. ஆறு மாதங்கள் கழிந்தவுடன் 3 மாத இடைவெளியில் விடுமுறை வேண்டும் (பெண் பார்த்து திருமணம் செய்யும் நோக்கத்தில் கேட்டேன்).
3. திருமணம் ஆனவுடன் மனைவியை இங்கே அழைத்து வர Family Status வேண்டும்.
அனைத்திற்கும் அவர்கள் சம்மதம் தெரிவித்தார்கள். உடனேயே ஜப்பானிய நிறுவனத்திற்கு ஒரு மாத கால அவகாசம் கேட்டு ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டு, உடனடியாகப் புதிய நிறுவனத்தில் சேர்ந்தேன்.
உண்மையில், இதுவரை நான் பணிபுரிந்த அனைத்து நிறுவனங்களிலும் - நமது ஊர் நிறுவனங்களைத் தவிர - மற்ற அனைத்தும் மிகுந்த மரியாதையோடு நடத்தின. அது நான் செய்த பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும்.
அங்கே உள்ள அனைவரும் பாகிஸ்தானியர்கள் என்றாலும், "ராஜாஜி, ராஜா சகாப்" என்று அவ்வளவு மரியாதையோடுதான் அழைத்தார்கள். ஒரே ஒருவரைத் தவிர. அதற்குக் காரணம், அவரும் என்னைப் போலவே கட்டிடவியல் பொறியாளர். நம் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள் அல்லவா? "நாய்குணம்" என்று. அதாவது, நாம் விசுவாசமாக இருப்போம், ஆனால் தன் இனமான மற்றொரு நாய் அருகே வருவதைப் பொறுத்துக்கொள்ளாது. அதுபோலத்தான் அவரும் இருந்தார். இருப்பினும், அவரையும் சமாளித்து, கீழிருந்து மேல் வரை அனைத்து வேலைகளையும் நானே இழுத்துப் போட்டு செய்தேன்.
இந்தச் சமயத்தில்தான் என் கல்லூரி நண்பர்கள் சிலரும் புதிதாக வந்தார்கள். அவர்களில் ஒரு நண்பரைப் பற்றி ஏற்கனவே கூறுகிறேன் என்று சொல்லியிருந்தேன் அல்லவா? அதை இப்போது சொல்கிறேன். நான் அவரைவிட சம்பளம் குறைவாக வாங்கிய சமயத்தில் அவர் என்மேல் அக்கறை உள்ளதுபோல் நிறைய அறிவுரை கூறினார். இரண்டாம் நிறுவனத்தில் எப்போது அவருக்கு நிகராகச் சம்பளம் வாங்கினேனோ, அன்று முதல் அவருடைய பேச்சில் மாற்றம் தெரிந்தது. மூன்றாம் நிறுவனத்தில் எப்போது அவரைவிட அதிகமாக வாங்கினேனோ, அன்றுதான் அவருடைய சுயரூபம் வெளிச்சத்திற்கு வந்தது. திடீரென போனில் அழைத்து, "நீ இங்கே வருவது பிடிக்கவில்லை, ஆகவே வரவேண்டாம்" என்று கூறினார். தூக்கிவாரிப் போட்டது. பொதுவாகவே நான் யாரிடமும் சம்பளம் எவ்வளவு என்று சொல்வதில்லை. சொல்லவும் கூடாது. காரணம், குறைவாக வாங்கும்போது ஒரு மாதிரியும், அதிகமாக வாங்கினால் வேறு மாதிரியும், பணத்தை வைத்தே மனிதர்களை மதிப்பிடும் பலரும் உள்ளனர் என்பதை நான் உணர்ந்தேன். ஔவையார் கூட "உடையது விளம்பேல்" என்று கூறியுள்ளார் தானே?! ஆனால் இதில் ஒரு சிக்கலும் உள்ளது; மார்க்கெட் நிலவரம் தெரியாமலே போய்விடும். அதைப் பிறகு சொல்கிறேன்.
எனக்கு மேலேயும் சரி, எனக்குக் கீழேயும் சரி, அனைவருமே பாகிஸ்தானியர்கள் நிறைந்த அந்தப் புதிய நிறுவனத்தில், ஆறு மாதங்கள் கழிந்தும் பிசினஸ் விசாவை மாற்றாமல் விட்டதால், நிறுவனமே 12,000 ரியால் அபராதம் கட்டி, ஒத்துக்கொண்டபடி ஊருக்கு அனுப்பி வைத்தது (நல்லவர்கள் எங்கேயும் உள்ளார்கள் மக்களே)
நானும் அந்த மூன்று மாதங்களில் பெண் பார்த்து, திருமணமும் முடித்து, மனைவிக்குப் பாஸ்போர்ட்டும் தயார் செய்து, அதில் என் பெயரும் இடம்பெயர வைத்து (அதெல்லாம் தனியாக எழுத வேண்டும்) அவசர அவசரமாக முதன்முறையாகக் கிடைத்த பொறியாளர் விசாவில் 2008 செப்டம்பரில் கத்தார் வந்தடைந்தேன். ஆனால், மனைவியை அழைத்து வரமட்டும் ஒரு மாதமாகிவிட்டது. நான் தினமும் நிறுவனத்திற்குப் போய் நச்சரிக்க ஆரம்பித்துவிட்டேன் (புதுசா கல்யாணம் ஆனவன்சார்) ஒரு கட்டத்தில் நானே டிக்கெட் மற்றும் விசா ஏற்பாடு செய்து அழைத்து வந்துவிட்டேன். எனக்குக் கொடுத்திருந்த அந்த ஒற்றை அறையிலேயே அவரைத் தங்க வைத்தேன் (பக்கத்து அறையில் ஒரு சிரிய நண்பர். பாவம் அவரு). "ஆகா... பையன் ரொம்ப அவசரப்படுறானே" என்று சிரித்தபடியே, இரண்டு படுக்கையறை கொண்ட அபார்ட்மெண்ட்டை ஒதுக்கித் தந்தார்கள்.
வீடு கிடைத்துவிட்டது, மனைவியும் வந்தாச்சு, ஆனால் கார் ஓட்டத்தான் லைசன்ஸ் கிடைக்கவில்லை. மீண்டும் நிறுவனமே பணம் கட்ட, டிரைவிங் ஸ்கூல் போக ஆரம்பித்தேன். இம்முறையும் அவ்வளவு எளிதாக லைசன்ஸ் கிடைக்கவில்லை. மூன்று முறை தோல்வியடைந்தேன். மூன்று முறையும் 'பாக்கெட் பார்க்கிங்' எனப்படும் ஒரே இடத்தில்தான் தோல்வியடைந்தேன். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஆறு முறை தோல்வியடைந்துள்ளேன். இனி ஒரே ஒரு வாய்ப்புதான் இருக்கிறது. படபடப்போடு தேர்வுக்குச் சென்றேன்.

No comments: