14/07/2026

கத்தாரில் நான் - 10

 









நிறுவனத்தினர் என்னை ஓட்டுநர் உரிமம் (License) எடுக்கக் கட்டாயப்படுத்தினர். உரிமம் எடுத்தால் சம்பளத்தில் கூடுதலாக 250 ரியால் கிடைக்கும் என்று ஒப்பந்தத்தில் இருந்ததால் நிறுவனமே பணத்தைக் கட்டி என்னை பயிற்சிக்கு அனுப்பியது. ஆனால், முதல்முறை மட்டுமல்ல, தொடர்ந்து மூன்று முறையும் என்னால் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. நான்காவது வாய்ப்பு வந்தபோது, எனது மூன்று மாத வர்த்தக விசா (Business Visa) முடிவுக்கு வந்தது. அக்காலகட்டத்தில், தங்கும் உரிமைக்கான விசா (RP) பெறுவதில் சிக்கல்கள் இருந்ததால், பெரும்பாலானவர்களை வர்த்தக விசாவிலேயே எடுத்து வந்து ‘சப்ளை’ வேலையில் விடுவார்கள். அப்படி இருக்கும்போது, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இந்தியாவிற்கோ அல்லது அருகில் உள்ள நாடுகளுக்கோ சென்றுவிட்டு மீண்டும் வர வேண்டும். இந்தியா போனால் டிக்கெட் பணம் நம்முடையது. அருகாமையில் உள்ள நாடென்றால் அவர்களுடையது.
இப்படி என்னை மூன்று முறை பஹ்ரைன் அனுப்பி வைத்தார்கள். முதல்முறை பஹ்ரைன் சென்றபோது விசா தாமதமானதால், அங்கேயே எட்டு நாட்கள் தங்கும் சூழல் ஏற்பட்டது. அங்கே உள்ள ஹோட்டலில் தங்கி படங்கள் பார்த்துவிட்டு மீண்டும் கத்தார் வந்தது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. திரும்பி வந்தவுடன் ஏற்கனவே இருந்த இடத்திலிருந்து மாற்றிவிட்டார்கள். முதலில் கோபம் வந்தாலும், புதிதாகச் சென்ற இடம் கார்னிஷில் உள்ள 'டூரிஸ்ட் பிளாசா' என்னும் உயரமான அபார்ட்மெண்ட் என்பதாலும், கூட இருப்பவர்கள் நல்ல மனிதர்களாக அமைந்ததும் மகிழ்ச்சியைத் தந்தது. புதிதாக வந்த காரைக்குடியைச் சேர்ந்த இருவர் மற்றும் சென்னையைச் சேர்ந்த ஒரு நண்பர் என நாங்கள் நான்கு பேருமே வெவ்வேறு நிறுவனங்களுக்கு சப்ளையில் விடப்பட்டவர்களே. (அதெல்லாம் இங்கு வந்துதான் அனைவருக்கும் தெரியும்). இன்றும் அவர்களுடன் நல்ல நட்பு தொடர்கிறது என்பது கூடுதல் தகவல்.
இதற்கிடையில், நான் கத்தாரில் இல்லாமல் பஹ்ரைனில் இருந்த நாட்களுக்கும் சேர்த்து 'மெஸ்' (Mess) கட்டணம் தர வேண்டுமென கந்தன் கூறியனுப்பினார். நிறுவனமே நடத்தும் மெஸ்ஸில், நான் ஊரில் இல்லாததற்கு எதற்குப் பணம் கட்ட வேண்டும் என்று கேட்டதற்கு, "இங்கே இப்படித்தான்" என்று சொல்லிவிட்டார்கள். என்னால் லைசன்ஸ் எடுக்க முடியாததையும் சுட்டிக்காட்டி முருகன் கிண்டல் செய்தார். "நான் லைசென்ஸ் எடுத்தால் 250 ரியால் லாபம்யா, இல்லையென்றால் என்னால் டிரைவருக்கு ஒரு வேலை, போ போ...போய் வேலையைப் பாரு" என்று நான் கெத்தாகப் பேசினாலும், உள்ளுக்குள் தோல்வியடைந்த வருத்தம் இருக்கவே செய்தது.
இவற்றையெல்லாம் மறக்க, நண்பர்களுடன் சேர்ந்து அல்பர்தான் ஏரியாவில் கிடைக்கும் புதுப்பட சிடிக்களை வாங்கி வந்து படங்கள் பார்ப்போம். அல்லது கார்னிஷில் உள்ள படகில் சென்று அமர்ந்திருப்போம். நான் வந்த காலத்திலிருந்தே ஆன்மீகத் தேடலை விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் என் பிலிப்பினோ நண்பர் ரிக்கி, என்னை அவருடைய பெந்தகொஸ்தே சர்ச்சிற்கு அழைத்துச் செல்வார். நான் செல்வதற்கு மூன்று காரணங்கள் இருந்தன: ஒன்று, அனைத்து மதங்களும் கடவுளை அடையும் வழிகளே என்கிற ராமகிருஷ்ண மடத்தின் போதனைமீது எனக்கு இருந்த நம்பிக்கை; இரண்டு, ஆங்கிலம் பேசப் பழகும் வாய்ப்பு; மூன்று, ஊருக்கு STD பேசுவதற்கு அங்கே அருகே இருந்த கடைகளில் குறைந்த கட்டணத்தில் பேசும் வசதி இருந்தது. அந்த சர்ச்சில் நானும் ஒரு உறுப்பினராக இருந்தேன். ஆனால், என் மனதில் என் தாயார் கற்றுக்கொடுத்த....பிள்ளையாரப்பா, பாண்டி ஐயா, செங்கிடாக்கருப்பா,இயேசுவே, கந்தா, கடம்பா.....என இறைவழிபாட்டு நாமங்களே ஓடிக்கொண்டிருக்கும். அந்த சர்ச்சில்தான் முதன்முதலில் ஆங்கிலத்தில் மேடையில் பேசிவிட மாட்டேனா என்கிற எண்ணமும் ஈடேறியது. பாடவும் செய்தேன். 'Lord God of Abraham... Adonai' என்ற பாடல் இன்றும் என் மனதில் ஒலிக்கிறது. ரிக்கி எனக்கு மிகச்சிறந்த நண்பராக அமைந்தார்.
அதேபோல், எகிப்தைச் சேர்ந்த காலித் இல்லையென்றால், நான் இன்றைய தினம் கத்தாரில் தொடர்ந்து இருக்க வாய்ப்பே இல்லை. (அவரைப் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்).

நாங்கள் தங்கியிருந்த கார்னிஸ் அபார்ட்மெண்டிலிருந்து, மலிவாகக் கிடைக்கிறது என்ற காரணத்தினால் இப்போதுள்ள சஃபாரி மால் அருகே (அப்போதுதான் கட்டிக் கொண்டிருந்தார்கள்) ஒரு வீட்டிற்கு எங்களை மாற்றினார்கள். சாப்பிட வேண்டுமென்றால் அபுஹாமரில் உள்ள 'நாஸ்கோ(Nasco)' என்னும் உணவகத்திற்கு நடந்துதான் செல்ல வேண்டும். அந்த இடம் அப்போது காடு போல இருந்தது. அனைவரும் வருத்தப்பட்டார்கள், ஆனால் குபேரனிடம் பேச யாருக்கும் துணிச்சல் இல்லை. நான் தைரியமாகச் போனில் கேட்டேன். அதற்கு அவர், "இதுதான் நிலைமை, இஷ்டமிருந்தால் இருங்கள், இல்லையென்றால் கிளம்புங்கள்" என்று கடுகடுப்பாகப் பதிலளித்தார்.

வந்தது கோபம்....அப்படியா சரி என்றேன்.

(வேலை பார்த்து பார்த்து கருத்துப் போன உடம்பு...😃😃😃 அப்ப 2006ல் கார்னிஷ் அருகில் ரவுண்டபோடு இருந்தது)

No comments: