29/06/2026

கட்டான கட்டழகி

 

கட்டான கட்டழகி
காரைக்குடிப் பேரழகி
சிக்காத சிரிப்பழகி
சிங்கம்போல நடையழகி

உன்போல யாரு பிள்ளை?!
உண்மையில யாருமில்லை (2)
உனை
கட்டிக்கிறேன் மாமா-வந்து
ஒட்டிக்கலாம் வாமா....(2)

முத்தான பல்லழகா
முந்திவரும் ஆணழகா
மாறாத கறுப்பழகா
மல்லுவேட்டி வடிவழகா

அன்போடு அள்ளிக்கொள்ள
வேணாமுன்னு சொல்லவில்லை(2)
நான்
காத்திருக்கும் பொண்ணு- நீ
கேட்கலாமா நிண்ணு..(2)

25/06/2026

என்பணி செய்வதே

 

என்பணி செய்வதே
....என்றுதான் எண்ணியே
.....இன்னும் இன்னும் ஓடுகின்றேன்!
உன்னருள் கிட்டியே
.....ஓய்வினைத் தள்ளியே
......உள்ள முய்யத் தேடுகின்றேன்!
இன்னுமோர் இன்னுமோர்
...இன்னமும் இன்னுமோர்
.....என்றி ரங்கி நாணுகின்றேன்!
என்னதான் செய்யுவேன்
.....யாரிடம் சொல்லுவேன்
....என்று முன்னை வேண்டுகின்றேன்!

✍️செ. இராசா

24/06/2026

சட்டசபை காட்சிகள் (குறள் வெண்பாவில்)



#CM
பேசவில்லை என்றீர்கள் பேசினால் இப்போது
பேசுகிறேன் என்கின்றீர் பேச்சு!

#OL
பேசுவதைப் பேசாமல் பேச்சில் வதைக்காதீர்
கூசுதெங்கள் காது குமைந்து!

#CM
சும்மா வரவில்லை சொல்லி அடித்துள்ளோம்
வம்பிழுத்தால் பார்த்திடுவோம் வா!

#OL
சட்டம் ஒழுங்கெல்லாம் சந்தி சிரிக்கிறது
நட்டம் அடைந்ததிந்த நாடு

#CM
இத்தனை நாட்களாய் யாரிருந்தார் சொல்லுங்கள்?
அத்தனையும் மாறும் அடங்கு.

#OL
வந்தவுடன் மாறுமென வாய்கிழிய சொன்னதுயார்?
எந்தைபோல் யாருள்ளார் இங்கு?!

#CM
கொள்ளை அடித்துவிட்டு கூப்பாடு போட்டதற்கே
தள்ளியுனை வைத்தார் தனித்து!

#OL
எங்கள் தயவால்தான் ஏறியுள்ளீர் ஆட்சியிலே
பங்கம் விளைத்திடுவோம் பார்த்து

#CM
மிரட்டல் உருட்டலெல்லாம் வீட்டோடு வையும்
இரக்கமினி காட்டோம் இதற்கு?

#OL
வெளிநடப்பு செய்கின்றோம் நீளுமிவர் பேச்சைத்
துளியளவும் கேளோம் தொடர்ந்து!

✍️செ. இராசா

(இரசிக்க மட்டுமே... விவாதம் புரிய அல்ல) 

22/06/2026

வெண்பாவே கூட்டும் வியப்பு

 

காய்ச்சீரோ மாச்சீரோ
.....காய்மா இரண்டிலுமோ
ஆய்ந்தறிந்து கட்டிடுவோர்
......ஆள்கின்றார்- தாய்த்தமிழில்
பண்பாட உண்டு
......பலவடிவம் ஆனாலும்
வெண்பாவே கூட்டும்
......வியப்பு!

21/06/2026

லவ் கலாய்- 1 (GenZ Mode or Mood)


இன்ஸ்டாவுல சிரிச்சிக்கிறான்
கண்டாத் தலைய கவுத்துக்கிறான்
உள்ளுக்குள்ள ஆசைவச்சே
காட்டிக்காம நடந்துக்கிறான்
அரும்பு மீசை ஆணழகன்
குறும்புகாரப் பேரழகன்
ஓரக் கண்ணுப் பார்வையில
உசுப்பேத்தும் சிரிப்பழகன்..
வாட்சப்புல ஸ்டேடஸ் ஏத்தி
ஹார்ட்டுக்குள்ள நுழைஞ்சுபுட்ட
பேஷ்கட்டுல கோபம் காட்டி
டோல்கேட்டத்தான் போட்டுப்புட்ட
உன்னைப்போல தைரியந்தான்
உண்மையில எனக்கு இல்லை..
நேரப் பார்த்து பேசவந்தா
படபடங்குது என்ன செய்ய
டேய்...கிறுக்கா...விடுடா.... ஃபியர
போய்...திமிராக்..கொடுடா...ஃபயர
✍️செ.இராசா

18/06/2026

அல்லி நகரத்து மைந்தனின்

 


அல்லி நகரத்து மைந்தனின்
வெள்ளித் திரையுலக வெற்றி;என்பது
வெறும் சினிமா சம்பந்தப்பட்டதல்ல
அது..
எளிய மனிதனும்
இமயமாகலாம் என்னும் தன்னம்பிக்கை உணர்வையும்;

அப்படித்தான் என்பதல்ல
இப்படியும் செய்யலாம் என்கிற
புதிய சிந்தனையையும்;

கலைஞன் நினைத்தால்
காலத்தையே வகுக்கலாம் என்னும்
ஞானச் செருக்கையும்;

தன்னைச் சார்ந்தவர்கள் வளர்வதில்தான்
தன் வெற்றியும் உள்ளதென்கிற
சார்பியல் தத்துவத்தையும்;

யானைக்கும் அடிசறுக்கும் என்றாலும்
அதே யானை
இருந்தாலும் ஆயிரம் பொன்
இறந்தாலும் ஆயிரம் பொன் என்கிற
பழமொழியின் சாரத்தையும்; என
இப்படி எத்தனையோ
பொருளடக்கம் கொண்டவர்தான்;
அருளடக்கம் ஆகியுள்ளார் என்றால்
அது மிகையல்ல;
முற்றிலும் உண்மையே!

ஆம்!
இவர்; இந்த
செல்லரித்த சமூக அழுக்கை
செல்லுலாய்டில் கழுவியவர்;

16 வயதி(னி)லேயே
பல்நோக்கில் சிந்தித்தவர்;

மட்டுப்படா நுட்பத்தை
மண் வாசனை ஆக்கியவர்;

சொல்லாத காதலுக்கும்
முதல் மரியாதை செய்தவர்;

சொல்லிய காதலுக்கும்
தாஜ்மஹால் படைத்தவர்;

இவரின் நிழல்களின்தான்
எத்தனை நிறம் மாறாத பூக்கள்?

ஐயா..

நீ
கிழக்கு சீமையிலே பிறந்து
பசும்பொன்னாய் மின்னியவன்
கிழக்கே போகும் ரயிலேறி
நாடோடித் தென்றலாய் சுற்றாமல்
சினிமாவில் புகுந்து: அதில்
வேதம் புதிது படைத்தவன்!

உன்னைவிட்டு
எங்கள் நினைவின்
அலைகள் ஓய்வதில்லை! உந்தன்
கடலோரக் கவிதைகள் மாய்வதில்லை!

உண்மையில் உம்மேல் தூவத்தான்
சிவப்பு ரோஜாக்களைத் தந்தாயோ?
உளமாரச் சொல்கின்றேன்
உண்மையில் நீர் ராஜா தான்...

நன்றி இமயமே!
நல்ல இதயமே!
தலைவணங்கி விடைபெறுகிறேன்
தலைநிமிர்ந்து வணங்குகிறேன்.

வானம் சரிஞ்சிடுச்சே
நட்சத்திரம் கருகிடுச்சே
ஞாலம் சுருங்கிடுச்சே
ஏன் ராசா போனீரோ?!

சேதி அறிஞ்சதுமே எத்தனை எத்தனை பேர் - உமக்
காகவே எத்தனைபேர் - வாடி
வதங்கியிங்கே வந்தது எத்தனை பேர்
உமக்காகவே எத்தனை பேர்?!

ஐயா ராசா...சத்திய ஜோதிக்கு நேர்!

தென்கிழக்கு சீமையில
அல்லி நகரத்தில
மண்வாசம் கொண்ட எங்க ராசா ராசா
தன்முனைப்பத் தள்ளிவச்சு
நல்ல கலைஞர்கள
தட்டி வார்த்தெடுத்த ராசா ராசா

அத்தனை பேருக்கும் முன்மாதிரி
எத்தனை பேருள்ளார் உன் மாதிரி
வெண்திரை காட்சியில் செய்தாய் ஒளி
பண்பட மாந்தர்க்கு செய்தாய் வழி..

நன்றி நன்றி!

ஆக்கம்,


செ. இராசா

17/06/2026

கோள்களின் கூட்டணியில்....

 



கோள்களின் கூட்டணியில் கொள்ளை அழகு பாருங்கள்..
வெள்ளி மினுமினுக்க
வியாழன் அருகிருக்க
புதன் தனித்திருக்க
நிலவும் பிரகாசிக்க
சூரியன் மறையும்முன்
பூமியில் இருந்து எடுத்த
ஒளிப்படங்கள் இவை...

13/06/2026

வானம் சரிஞ்சிடுச்சே

 

வானம் சரிஞ்சிடுச்சே
நட்சத்திரம் கருகிடுச்சே
ஞாலம் சுருங்கிடுச்சே
ஏன் ராசா போனீரோ?!
சேதி அறிஞ்சதுமே எத்தனை எத்தனை பேர் - உமக்
காகவே எத்தனைபேர் - வாடி
வதங்கியிங்கே வந்தது எத்தனை பேர்
உமக்காகவே எத்தனை பேர்?!
ஐயா ராசா...சத்திய ஜோதிக்கு நேர்!

தென்கிழக்கு சீமையில

 

தென்கிழக்கு சீமையில
அல்லி நகரத்தில
மண்வாசம் கொண்ட எங்க ராசா ராசா
தன்முனைப்பத் தள்ளிவச்சு
நல்ல கலைஞர்கள
தட்டி வார்த்தெடுத்த ராசா ராசா
அத்தனை பேருக்கும் முன்மாதிரி
எத்தனை பேருள்ளார் உன் மாதிரி
வெண்திரை காட்சியில் செய்தாய் ஒளி
பண்பட மாந்தர்க்கு செய்தாய் வழி

11/06/2026

இதுதான் காதலா? (குறும்பட சூழலுக்காக எழுதியது)

 


(குறும்பட சூழலுக்காக எழுதியது)
#சோகம்
இதுதான் காதலா? இல்லை
இதுவும் காதலா?!!
வலிதான் மிச்சமா?! உயிர்ப்
பலிதான் உச்சமா?!

வயதுகள் கடந்தும் மறந்திட வில்லை
நியதிகள் தடுத்தும் முடிந்திட வில்லை
முடிந்ததைத் தொடர்ந்தோம் முறையது இல்லை
விடிந்திடும் முன்னே நாங்களும் இல்லை....

#நகைச்சுவை கலந்த உணர்வோடு

ஆசை வந்திடுச்சி ஆசை வந்திடுச்சி
மீசையெல்லாம் நரைச்சபோதும் ஆசை வந்திடுச்சி...

டையடிச்சிப் பார்க்குதுங்க பெருசுங்க
கையக்கோர்த்து நடக்குறதப் பாருங்க
விசிலடிச்சு ரகளைபண்ணி ஆடுது
ரீல்சுபண்ணும் ஆப்பு எங்கே தேடுது
ஐசுகிரீமு போல மனசு உருகுது
சேர்த்து வச்ச பாரமெல்லாம் கரையுது
விடலைப்புள்ள கூடயிப்ப வியக்குது
கடலைபோட்ட காலமிப்போ திரும்புது

போடு
போடு தில்லாலே
போடு தில்லாலே
ஆடு முன்னாலே வந்து
ஆடு முன்னாலே...

✍️செ. இராசா