12/07/2026

கத்தாரில் நான் - 8

 

முதல் அயல்நாட்டுப் பயணம் தோல்வியில் முடிந்தாலும், அந்த வலிமிகு அனுபவம் எனது இரண்டாம் பயணத்திற்குத் தயாராகப் பெரிதும் உதவியது. அஸ்ஸாமில் சம்பாதித்த பணத்தை அலவாக்கோட்டை ஐசிஐசிஐ (ICICI) வங்கியில் சேமித்து வைத்துத்தான் வாடகை அறையில் தயங்கியபடியே வேலை தேடி வந்தேன். மீண்டும் வெளிநாட்டு வாய்ப்பு வந்தவுடன், அந்த வங்கிக் கணக்கை மாற்றி திருப்பத்தூரில் புதிய கணக்கைத் தொடங்கினேன். பயணத்திற்காகப் பழைய சந்தையில் இருந்து ஒரு பெட்டி வாங்கினேன். படிக்கும் காலத்திலிருந்தே எனக்கு ஒரு பழக்கம் உண்டு; நாம் இருக்கும் இடம் எப்போதும் இசையால் சூழ்ந்திருக்க வேண்டும் என்பதுதான் அது. வானொலியோ அல்லது டேப்ரிக்கார்டோ (Tape recorder) எப்போதும் என்னுடன் இருக்கும். எல்லாரும் வெளிநாட்டிலிருந்துதான் புதிய டேப்ரிக்கார்டர் வாங்கி வருவார்கள், ஆனால் நான் இங்கிருந்தே எடுத்துச் சென்றேன்.
மேலும் ஒரு கடமையைச் செய்ய ஆசைப்பட்டேன். கையில் அறுபதாயிரம் ரூபாய் இருந்தது. அந்தப் பணத்தில், என்னை வளர்த்த அம்மாச்சிக்கு யானைமுடி வைத்த சிறிய மோதிரம் (அதுவே நான் வாங்கிய முதல் தங்கம்) வாங்கினேன். அத்தை, மாமா, அத்தை மகன், சித்தி என அனைவருக்கும் புடவை, வேட்டி என அனைத்தையும் வாங்கிக் கொடுத்துவிட்டுக் கிளம்பத் தயாரானேன். "என்னடா... வெளிநாடு போவதற்கு முன்பே பணத்தைச் செலவழிக்கிறானே!" என்று நீங்கள் நினைக்கலாம். உண்மைதான்... ஒருவேளை இந்தப் பயணம் மீண்டும் வேறுமாதிரியாக அமைந்துவிட்டால் என்ன செய்வது? இதுவரையிலும் கவனித்த உறவுகளிடம் மீண்டும் மீண்டும் சோகப் பாட்டைப் பாட முடியுமா? அதனால்தான், 'இருப்பதில் செய்துவிடுவோம், வருவதைப் பார்த்துக் கொள்ளலாம்' என்று துணிச்சலாகப் பணத்தைச் செலவழித்துவிட்டு மனநிறைவோடு அடுத்த அத்தியாயத்திற்குத் தயாரானேன். அச்சமயம், சென்னையில் பம்மலில் இருந்த மாமா வீட்டில் தங்கி, அங்கிருந்து கிளம்பி மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்தேன்.
முன்பு திருச்சியிலிருந்து சென்றதைப் போலன்றி, இம்முறை சென்னையிலிருந்து துபாய் வழியாக தோகா செல்வதுபோல் டிக்கெட் எடுத்திருந்தேன். திட்டமிட்டபடி துபாயில் சில மணித்துளிகள் காத்திருந்தேன். அப்போது, பங்களாதேஷின் சிட்டகாங்கைச் சேர்ந்த ஒரு பையன் ஏஜெண்ட் ஒருவரால் ஏமாற்றப்பட்டு, சாப்பிட வழியின்றித் தவித்துக் கொண்டிருந்தான். அச்சமயம் என்னால் இயன்ற உதவிகளைச் செய்து, எனக்குத் தெரிந்த இந்தி மற்றும் ஆங்கிலத்தில் அவனது உறவினர்களிடம் பேசி, அவனை நல்லபடியாக அனுப்பி வைக்க உதவினேன். பிறகு அங்கிருந்து கிளம்பி தோகா வந்தடைந்தேன். வெளியே என் பெயர் தாங்கிய பலகையுடன் ஒருவர் நின்றிருந்தார். என்னை வரவேற்று, அபுஹாமரில் உள்ள ஒரு வீட்டின் மேல் மாடியில் இருந்த ஒற்றை அறையைக் காட்டித் தங்கச் சொன்னார்கள். அந்த அறையைத் திறந்ததுமே ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. அங்கே ஐயப்பன் படம் போட்ட காலண்டர் இருந்தது. ஏன் ஆச்சரியம் என்றால், அயல்நாட்டில் வேலை கிடைக்கவேண்டித்தான் நான் ஐயப்பன் கோவிலுக்குச் சென்று வந்தேன். இங்கே நுழைந்தவுடனேயே அவரே இருப்பது ஆச்சரியம்தானே! 'எல்லாம் அவன் செயல்' என எண்ணி, குளித்துவிட்டுத் தயாரானேன்.
அந்த நிறுவனத்தைப் பற்றி கீழே சமையலறையில் இருந்தவர்களிடம் விசாரித்தேன். அது புதிதாகத் தொடங்கிய கம்பெனி என்றும், ஏற்கனவே இங்கே வேலை பார்த்த அல்லது வேலை பார்க்கும் நான்கு பேர் இணைந்து தொடங்கியுள்ளார்கள் என்றும் கூறினார்கள். என்னை வேலைக்கு எடுத்த குபரேன் மற்றும் அவரது நண்பர் ஒருவரென இருவருக்கும் இரண்டு வருடங்கள் கத்தாருக்குள் வருவதற்குத் தடை இருப்பதாலும், இதைத் தன் மச்சான் கந்தனை வைத்துதான் நடத்துகிறார்கள் என்றும் தெரிந்துகொண்டேன். என் வேலை என்னவென்று விசாரித்தபோது, அவர்கள் கூறியதுபுரிய எனக்குப் சில மணித்துளிகள் ஆனது. அதாவது, நம்மை ஏதோ ஒரு கம்பெனிக்கு 'சப்ளை'யில் விடுவார்கள். அவர்கள் தரும் பணத்தில் பெரும்பங்கை எடுத்துக்கொண்டு, நமக்கு ஒரு சிறு பங்கைக் கொடுப்பார்கள். அது எவ்வளவு என்று பின்னாளில் தெரிந்தபோது தலை சுற்றியது. அதைப் பிறகு சொல்கிறேன். இப்படியாக, அடியேன் ஒரு நல்ல ஜப்பானிய நிறுவனத்திற்கு வேலைக்கு (வாடகைக்கு) அனுப்பப்பட்டேன். உண்மையில், அந்த ஜப்பானிய நிறுவனம் என் வாழ்க்கையில் கற்றுக்கொடுத்தவை கொஞ்ச நஞ்சமல்ல.

No comments: