11/07/2026

கத்தாரில் நான் - 7

 

மீண்டும் ஒரு புதிய அழைப்பு கத்தாரிலிருந்து வந்தபோது, "வெறும் மூன்று மாதங்களே கத்தாரில் இருந்த என்னை ஏன் மீண்டும் அழைக்கிறீர்கள்?" என்று கேட்டேன். "நீங்கள் ஏற்கனவே அங்கு இருந்ததால் இந்த நாட்டைப் பற்றிய புரிதல் உங்களுக்கு இருக்கும்; அதனால் வெறும் டிக்கெட் மட்டும் போட்டு வாருங்கள்" என்றார்கள். நான், "நீங்கள் டிக்கெட் போட்டால் வருகிறேன், இல்லையெனில் என்னால் வர முடியாது" என்று உறுதியாக மறுத்துவிட்டேன். ஏற்கனவே பட்ட கஷ்டங்களால் எனக்கு அந்த நாட்டின் மீது ஒருவித வெறுப்பு இயல்பாகவே இருந்தது. அதற்கு அவர்கள், "சரி, சென்னை வாருங்கள்; வேலை பற்றி நேரில் விளக்குகிறோம்" என்றார்கள். அந்த அழைப்பு விடுத்தது, அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவர். இப்போதைக்கு அந்த நிறுவனத்தை 'கத்தார் மின்சார நிறுவனம்' (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்றும், அவரை 'குபேரன்' என்றும் வைத்துக்கொள்வோம்.
நானும் ஊரிலிருந்து கிளம்பி, சென்னை ஊரப்பாக்கத்தில் (அப்போது அது கிராமம்தான்) இருந்த நண்பரின் வீட்டுக்குப் போனேன். அங்கிருந்து 500/-ரூபாய்க்கு ஒரு ஆட்டோவை நாள் வாடகைக்கு எடுத்துக்கொண்டு போரூரில் இருந்த குபேரனைச் சந்தித்தோம். அது ஒரு மிகப்பெரிய வீடு. ஹாலில் இருந்த இருக்கையில் அமரச் சொல்லி, வேலைபற்றி விளக்கினார். "உங்கள் வேலை ஒன்றுமில்லை; குழி வெட்டி கேபிள் போட வேண்டும், அவ்வளவுதான்" என்றார். மேலும், 'கிளையன்ட்' தரப்பினைத் திருப்திப்படுத்த ஒரு பொறியாளர் தேவை என்று கூறி, 22,000/- ரூபாயைக் கொடுத்து அசோக் நகரிலுள்ள ஒரு டிராவல் ஏஜென்சியில் டிக்கெட் போட்டு வரச் சொன்னார். அங்கிருந்து சென்று 19,000 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்துவிட்டு, மீதமுள்ள பணத்தை அவரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு மீண்டும் ஊரப்பாக்கம் சென்றடைந்தோம். என் மனதில் ஒரு எண்ணம் ஓடியது: "ஆஹா... எவ்வளவு நல்லவராக இருக்கிறார்! நம்மை முழுமையாக நம்பி பணத்தைக் கொடுத்துள்ளாரே. ஒருவேளை நான் பணத்துடன் ஓடியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? பரவாயில்லை, இன்னும் நல்ல மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்" என்று மனம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது. 'வெட்டப்போகும் ஆட்டுக்கு மரியாதை நன்றாகவே கிடைக்கும்' என்ற உண்மையை அறியாமலேயே நான் மகிழ்ச்சியடைந்தேன். இருப்பினும், ஒரு விஷயம் மட்டும் உண்மை—இம்முறை இழப்பு நமக்கில்லை. பிடித்தால் இருப்போம், இல்லையேல் திரும்பி வந்துவிடுவோம் என்ற முடிவோடு கிளம்பத் தயாரானேன்.
இம்முறை மீண்டும் கூட்டமாகப் போகக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். எனக்குத் தோல்வி கிடைத்தபோது என்னை அழைக்க வந்த தம்பி சதீஷ் மற்றும் ராசு ஆகிய இருவரை மட்டும் என்னுடன் வருமாறு கூறி, அவர்களை அழைத்துக்கொண்டு திருச்சி விமான நிலையம் சென்றேன். படிப்பு முடித்து சம்பாதிக்க ஆரம்பித்த முதல் நாளிலிருந்து, திருமணம் உட்பட எதற்கும் யாரிடமும் (என் அப்பாவிடம் கூட) பணம் வாங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு முடிவெடுத்தேன்; இந்த முறை சம்பாதிக்கும் முதல் சம்பளத்தில் ஒரு சங்கிலி வாங்க வேண்டும். அதுவே நமக்கான 'டிக்கெட் காசாக' கழுத்தில் தொங்க வேண்டும். அடுத்தமுறை மீண்டும் தோல்வி என்று வந்தால், அது எனக்கு உதவியாக இருக்கும் என்ற முடிவோடு, 2006-ம் ஆண்டு சென்னையிலிருந்து கத்தார் நோக்கி எனது இரண்டாவது பயணம் ஒரு நம்பிக்கை ஒளியோடு தொடங்கியது. பார்ப்போம்... என்ன ஆனதென்று?

No comments: