மரியாதைக்குரிய திரு. ஜகந்நாதன் சார், முந்தைய பதிவின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டதுபோல், "மனைவியின் வரவிற்குப் பின் வாழ்வில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறியுள்ளீர்" என்பதை நூறு சதவீதம் ஒத்துக்கொள்கிறேன். ஒத்துக்கொள்வதென்ன? அதுதான் உண்மையும் கூட.
ஆம். சிறுவயதில் மீசை அரும்புவிடும் காலத்தில் ஏற்பட்ட இனக்கவர்ச்சியைக் காதலென்று எண்ணி ஒரு பெண்ணை விரும்பினேன். பிறகு, நாமும் காதலிக்கிறோம் என்கிற பெருமையோடு கவிதையெல்லாம் கிறுக்கினேன். அது அப்படியே பெரிதாகப் போகாமல் சீக்கிரமே முடிவுக்கும் வந்தது. சரி, நாம் விரும்பிய பெண்தான் கிடைக்கவில்லை, நம்மை விரும்பிய சொந்தக்காரப் பெண்ணையாவது திருமணம் செய்யலாம் என்றால், அங்கேயும் அப்பாவின் எதிர்ப்பு, பெண் வீட்டாரின் இரட்டை நாடகம், அந்தப் பெண்ணின் முதிர்ச்சியற்ற முடிவெடுக்க முடியாதத் தன்மை என அந்தப் பெண்ணையும் கைப்பிடிக்க முடியாமல் போயிற்று. (இதையெல்லாம் தனியாக எழுதவேண்டும்)
இறுதியாக என் தந்தையார் எனக்காகப் பார்த்த பெண் படலத்தில், ஆரம்பத்தில் புகைப்படத்தைப் பார்த்து வேண்டாமென்ற அந்தப் பெண்ணையே (மீண்டும் வேறு படத்தை மாற்றி) சம்மதிக்க வைத்தார். உண்மையில், ஒளிப்படத்தில் உள்ள சிலர் நேரில் வேறு மாதிரி இருப்பார்கள் என்பதை அன்றே உணர்ந்தேன் (யாரும் புகைப்படத்தைப் பார்த்து முடிவெடுக்க வேண்டாம் உறவுகளே... நேரில் போங்க). பார்த்த உடனேயே பிடித்துப்போனது. அப்படி கைப்பிடித்த என் மனைவியார் வந்த பிறகுதான், அதுவரையிலும் படிக்கட்டில் சென்ற வாழ்க்கை படக்கென்று லிப்டில் ஏறியது.
ஆம்... என் மனைவியார் வந்த நேரம் (நிச்சயதார்த்தம் முடிந்த உடனே), முதன்முதலாகச் சம்பாதித்த பணத்தில் மதகுபட்டியில் ஒரு இடம் வாங்கினேன். அடுத்து, திருமணம் முடிந்தவுடனே இன்னொரு இடம் வாங்கி வீடும் கட்டத் திட்டமிட்டேன். அதற்கான வேலையையும் தொடங்கினேன். இது என் மனைவியார் வந்த ராசிதான். இன்னொரு கொசுறு தகவல் சொல்லவா?! இவர் பிறந்த அதே நாளில்தான் என் மாமனாருக்கு லாட்டரியில் ஒரு லட்சம் பரிசு கிடைத்ததாம் (இன்றைய மதிப்பில் பல லெட்சம்). இதன் மூலம் நான் கூற விரும்புவது என்னவென்றால், பொருளாதாரத்தை எண்ணிக்கொண்டு, 'பொருளா? தாரமா?' எனப் பாராமல், திருமணத்தைத் தள்ளிப் போடாமல், உரிய வயதிலேயே (25 அல்லது 27) திருமணம் செய்துகொள்ள வேண்டுகிறேன்.
சரி... இப்ப நம்ம கதைக்கு வருவோம்.
என் மனைவி மூலம் வந்த நற்செய்தி என்னவென்றால் (உங்களுக்கே தெரியும்... திருமணம் ஆனவுடன் அடுத்தென்ன? அதேதான்), கருவுற்றிருப்பதாகக் கூறி என்னைச் சந்தோஷத்தில் மூழ்கடித்தார்கள் (செம்மல்ல..). சரி, இப்பப் பிரசவம் எங்கே பார்க்கலாம்? இங்கேயே? ஊரிலா? என யோசித்தோம். இங்கேதான் பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தோம் (முடிவெடுத்தேன் என்பதே சரி... அப்போதெல்லாம் அப்படியே!). பிறகு யாரை அழைப்பது? அம்மாவா? அத்தையாரா? என்று யோசித்து, பாஸ்போர்ட் என் அம்மாவிடம் இருந்ததால் அம்மாவையே அழைத்தோம். அம்மா கத்தார் வந்தவுடனே, ஒன்பதாவது மாதத்தில் எளிதான முறையில் வீட்டிலேயே வளைகாப்பும் நடத்தினோம். அடுத்து மகப்பேறுக்காகக் காத்திருந்தோம்.
அதே நேரத்தில்தான் என் நண்பர் சக்திவேல், வாலுக்குவேல சித்தப்பா உட்பட பலரும் அவரவர் வீட்டில் அப்பாவாகக் காத்திருந்தார்கள். அனைவருடைய உறவுகளும் (அம்மா, அத்தை அல்லது அக்கா என) ஊரிலிருந்து வந்திருந்தார்கள். யார் முதலில், யார் பிறகென்று தெரியவில்லை. இருப்பினும், ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ள, அவர்களுக்கும் மகள்-மகனெனப் பிறக்க, எனக்கு நல்ல முறையில் ஒரு பையன் பிறந்தான். வெள்ளைநிறத் தேங்காய்ப்பூ துண்டில் சுற்றி மகனைக் கையில் வைத்த அந்தத் தருணங்கள் இருக்கிறதே... அது யாராலும் மறக்க முடியாத தருணங்களே. அதைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. (கத்தாரின் மருத்துவ சேவை பற்றி பிறகு கூறுகிறேன்)
காலங்கள் வேகமாகச் சுழன்றன. இங்கிருந்த அத்தனை நண்பர்களின் வீட்டிலும் பிறந்தநாள், திருமணநாள், வளைகாப்பென மாறி மாறிச் சென்று வந்தோம். வார இறுதி முழுவதும் நிகழ்வுகள், ஊர்சுற்றல் என்று போனது.அதுவரையில் கோலோச்சிய சௌதி நிறுவன வேலைகள் நிறைய இந்திய நிறுவனங்கள் புதிதாய் வந்த பிறகு அனைத்தும் முடிவுக்கு வந்தது. எத்தனையோ மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இதே நிலைமைதான். வியாபாரப் போட்டியில் மார்க்கெட் நிலவரம் டல்லாக, நல்ல நிறுவனங்கள் பின்வாங்க, அது சப்-கான்ட்ராக்டர் (Subcontractor) மற்றும் எங்களைப் போன்ற ஊழியர்களின் சம்பளமென அனைத்தையும் பாதித்தது. அதுவரையிலும் பொறியாளர்களுக்கு இருந்த பற்றாக்குறை குறைய ஆரம்பித்த தருணத்தில்தான் வேலைக் குறைப்பு நடவடிக்கைகள் தீவிரமானது. ஏறக்குறைய அனைவரும் அடுத்தடுத்து வேலை இழக்க ஒருவழியாக என்னை நோக்கியும் குண்டுவர ஆயத்தமானது.






.jpg)










No comments:
Post a Comment