கதவைத் திறந்தால் அறை முழுவதும் கனகனவென்று வெப்பமாகவும், ஒரே தூசியாகவும் இருந்தது. மொத்தமாக கூட்டித் தள்ளிவிட்டு ஏசியைப் போட்டேன். கடகடவென்ற ஏசியின் சப்தத்தில், "நாளைய வேலை எப்படி இருக்குமோ?" என்கிற பயத்துடன் தூங்கியும் தூங்காமல் இரவு கழிந்தது.
காலை எழுந்தவுடன் குளியலறை சென்று தண்ணீரைத் திறந்தால், நீர் கொதித்தது. "என்னடா இது, வெப்ப பூமியில் இப்படித்தானோ?" என்று எண்ணியபடி, சுடுநீரிலேயே குளித்துவிட்டு வேகமாகக் கிளம்பித் தயாரானேன். சரியாக காலை 6:00 மணிக்கு வாகனம் வந்தது. சன்னையாவில் இருந்து துகையிலில் உள்ள புதிய கத்தார் பல்கலைக்கழகம் கட்டும் இடத்திற்குக் கூட்டிப்போனார்கள். எந்த இடத்தில் ஜன்னலைப் பொருத்த வேண்டும் என்பதே என் வேலை. "இதெல்லாம் ஒரு வேலையா?" என்று நீங்கள் நினைக்கலாம். உண்மைதான்... மிகப்பெரிய பல்கலைக்கழகத்தில் நான்கு பக்கங்களிலும் ஜன்னல்கள் மேலிருந்து கீழ் வரை இருக்கும். அதை வரைபடம் பார்த்துச் சொல்ல வேண்டும். இந்த வேலைக்கு ஒரு பொறியாளர் தேவையா என்னும் ஐயம் எனக்கும் இருந்தது. இருப்பினும், பிழைப்புக்காக எப்படியாவது ஓட்ட வேண்டுமே என்கிற எண்ணத்தில்தான் ஒத்துக்கொண்டு வேலைக்கு வந்தேன்.
ஆனால், பிரச்சினை வேறு வடிவத்தில் வந்தது. ஒன்று, நான் சின்னப் பையன் என்பதால் வேலை பார்த்த மலையாள ஃபோர்மேன் முதல் யாரும் என்னை மதிப்பதே இல்லை. இரண்டாவது, கத்தாரின் அதிவெப்பமான சூழல். இப்போது இருப்பது போல் அப்போதெல்லாம் சேஃப்டி அதிகாரிகள் கிடையாது; வெயிலில் வேலை பார்க்கக்கூடாது என்கிற நேரக் கட்டுப்பாடும் கிடையாது. ஒரு அரை பரலாங் தூரத்தில்தான் டீக்கடை இருக்கும். அனல் பறக்கும் காற்றில் நடந்து போய் சாப்பிட்டு வரவேண்டும். காதெல்லாம் அடைத்துவிடும். வெயிலில் நாக்கு வரண்டு, சிறுநீர் அடர் சிவப்பில் வர ஆரம்பித்துவிட்டது.
எப்படியோ அந்த நாள் கழிந்து வீட்டுக்கு வந்து குளிக்கப்போனால், மீண்டும் தண்ணீர் கொதித்தது. எப்படி கோழியின் தோலை உரிக்க சடுநீரில் போடுவார்களோ, அதைப்போல் என் தோலும் வெந்து போனதுபோல் இருந்தது. வந்தவுடன் படுத்தவன்தான், மனமும் உடலும் வெந்து நொந்த களைப்பில் காலையில்தான் எழுந்தேன்.
மறுநாள் காலையில் எழுந்தவுடன் தண்ணீரைத் திறந்தால், மீண்டும் கொதித்தது. அங்கிருந்த ஒரு அண்ணனிடம், "அண்ணா, ஏன் தண்ணீர் இப்படி சுடுகிறது?" என்றேன். அவர் சிரித்துக்கொண்டே, "தம்பி, குழாயை எந்தப் பக்கம் திறந்தாய்? வலது பக்கம் சாதாரண நீர், இடது பக்கம் சுடுநீர்" என்றார். கடவுளே! இதுகூட அந்தச் சமயம் எனக்குத் தெரியவில்லை. ஆக, அதுவரை சுடுதண்ணீரில்தான் குளித்துக்கொண்டிருந்தேன். சாதாரண நீரும் அதே வெப்பத்தில்தான் இருந்ததுஎன்ன அதன் அளவுதான் சற்றே குறைவாக இருந்தது.
அடுத்த இரண்டு மூன்று நாட்கள் இப்படியே சமாளித்து வேலைக்குப் போனால், உதட்டில் வெடிப்பு, வயிற்றில் கோளாறு, மலம் வெளியேறுகையில் ரத்தமென என உடல் உபாதைகள் கூடிக்கொண்டே போனது. ஒரு கட்டத்தில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. வேலையை விட்டுவிட்டு ஊருக்குப் போனால் வீட்டில் என்ன சொல்வார்கள்? அப்பா செத்தாலும் அங்கேயே சா...என்று சொல்லிவிட்டார். மலேசியாவில் உள்ள பெரியம்மாவோ, "ஒன்றும் கவலைப்படாதே, நானுள்ளேன், நீ மலேசியா வா" என்று போனில் கூறிவிட்டு, "இவனெல்லாம் எங்கேயும் வேலை பார்க்க லாயக்கில்லாதவன்" என்று வீட்டில் கூறியிருக்கிறார். இந்த நிலையில் ஒன்றும் புரியாமல், தைரியத்தை வரவழைத்து கண்ணன் சாருக்குக் கவிதை வடிவில் ஒரு கடிதம் எழுதினேன். ஏனெனில், நேரில் சொல்லத் தைரியமில்லை. "சார், நீங்கள் செய்த உதவியை என்றும் மறக்கமாட்டேன். தயவுகூர்ந்து என்னை எப்படியாவது ஊருக்கே அனுப்பி வையுங்கள். இங்கே இருந்தால் செத்தே போவேன். மன்னித்துவிடுங்கள்" என்று கெஞ்சி ஒரு கடிதம் எழுதி அவரிடம் கொடுத்தேன். உடனே பதறியடித்துக்கொண்டு, பெரியப்பாவோடு வந்து எனக்கு ஊருக்கு டிக்கெட் உறுதி செய்து, விமான நிலையத்தில் ஏற்றிவிட்டார்கள். இப்படியாக ஒரு வேலையும் செய்யாமல் பல கனவுகளோடு வந்தவனின் பயணம் பயங்கரமான வலியோடு வீட்டில் அப்பா என்ன சொல்வாரோ என்கிற பயத்தோடு விமானமேறியது.
No comments:
Post a Comment