14/07/2026

கத்தாரில் நான் - 11

 


என்னைக் குறைந்த சம்பளத்திற்கு (2500 ரியால்) வேலைக்கு எடுத்துவிட்டு, என்னை வைத்துக்கொண்டு கிட்டத்தட்ட 25,000+ ரியால் வருமானம் ஈட்டுகிறார்கள் என்று தெரிந்தபோது, "அடப்பாவிகளா! இதுதான் உங்கள் கருணையா?" என்று உள்ளம் பொங்கியது. அந்த நிறுவனத்திடம், "சார், எனக்குக் குறைந்தபட்சம் 7,000/-ரியாலாவது கொடுங்கள்" என்று கேட்டேன். ஆனால், அதற்குப் பதிலாக அவர்கள் எனக்கு வேலை நீக்கக் கடிதத்தைக் கொடுத்துவிட்டார்கள். இங்கேதான் கதையில் ஒரு திருப்பம் நிகழ்ந்தது. அதைக் கூறுகிறேன்...
நான் பணிபுரிந்த அந்த ஜப்பானிய நிறுவனம் அவ்வளவு எளிதில் யாரையும் பாராட்டிவிட மாட்டார்கள். நான் ஒரே சமயத்தில் செய்துகாட்டிய பல வேலைகள் அவர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. குறிப்பாக, எகிப்து நாட்டைச் சேர்ந்த மின்னியல் பொறியாளர் 'காலித்', என் வாழ்க்கையில் மறக்க முடியாத உற்ற நண்பர். அவர் கீழ் வேலை பார்த்தாலும், எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்தேன். ஒரே நேரத்தில் இரண்டு பிரிவுகளுக்கு (Sections) 700 மீட்டர் தூரம் கேபிள்களை இழுத்தது, இக்கட்டான பல சூழ்நிலைகளிலும் மிக நேர்த்தியாக வேலை செய்தது என அனைவரையும் கவர்ந்திருந்தேன்.
ஆகவே, காலித்திடம் இவர்கள் என்னைத் தூக்கப் போகிறார்கள் என்ற செய்தியைக் கூறினேன். அவரும் அதிர்ந்தார். மேலும், ஒரு யோசனையையும் முன்வைத்தேன். "அவர்கள் என்னை நீக்கட்டும், ஆனால் நீங்கள் நேரடியாக என்னைப் பணியில் அமர்த்திக்கொள்ளுங்கள். உங்களிடம் விசா இல்லையென்றால், நான் உங்கள் நிறுவனத்தின் சார்பாக அதே 'பிசினஸ் விசாவில்' வருகிறேன். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நான் வெளியே சென்று வருகிறேன்" என்றேன். இந்த டீலிங் பிடித்துப்போகவே, நிறுவனத்தின் பெருந்தலைவர்கள் அனைவரும் அதற்கு ஒப்புக்கொண்டனர்.
அப்புறமென்ன? போர்றா டிக்கெட்ட என வியாழக்கிழமை அந்தத் தமிழ் நிறுவனத்தில் இருந்து வெளியேறினேன். நேராக ஊருக்குப் போகாமல் சென்னைக்குச் சென்றேன். ஞாயிற்றுக்கிழமை ஜப்பானிய நிறுவனத்திற்காக விசா எடுத்துவிட்டுத் திங்கட்கிழமையே கிளம்பி வந்துவிட்டேன் (அடிச்சான் பாரு சிக்ஸர் என்கிற உணர்வு) இதைக் கண்ட தமிழ் நிறுவனம் கடும் கோபமடைந்தது. "எப்படி நீங்கள் இவரை வேலைக்கு எடுக்கலாம்?" என்று ஜப்பானிய நிறுவனத்திடம் சண்டையிட்டனர். மேலும், "இவரை எடுத்தால், நாங்கள் சப்ளை செய்யும் மற்ற ஆறு பொறியாளர்களையும் திரும்பப் பெற்றுக்கொள்வோம்" என்று மிரட்டினர். அதற்கு ஜப்பானிய நிறுவனம், "ஓ... அப்படியா? நிறுத்திக்கொள்ளுங்கள்... எனக்கு 'ராஜா' ஒரு ஆள் போதும்" என்று கறாராகக் கூறிவிட்டனர். இதுதான் உழைப்பிற்கான அங்கீகாரம் என்பதை நான் முழுமையாக உணர்ந்த தருணம் அது.
நேரடியாக ஜப்பானிய நிறுவனத்திலேயே பணியில் சேர்ந்தேன். வாழ்க்கை இனி சந்தோஷமாகத்தான் போகப்போகிறது என்று நினைத்தால், இங்கும் சில சோதனைகள் காத்திருந்தன. விசா கிடைத்தால் போதுமென்று வந்ததால், சம்பளம் பற்றிப் பேசவே இல்லை. ஒரு மாதம் கழித்தே என் சம்பளம் (முன்னைவிட நல்ல சம்பளம் + அறை) தெரிய வந்தது. இந்த சம்பளம் ஏறிய விடயத்தில் என்னோடு கல்லூரியில் படித்த ஒரு நண்பரின் வயித்தெரிச்சல் சம்பவத்தையும் பிறகு கூறுகிறேன்.
அப்புறம் ஒருநாள், என் ஜப்பானிய நண்பர் (தற்போது மிகப்பெரிய தலைவராக உள்ளார்) என்னிடம், "இன்று மாலை 9 மணிக்கு வரலாமா?" என்றார். எனக்கு ஆச்சரியம்! "வாங்க சார், ஆனால் எதற்காக என்பதுபோல் பார்த்தேன். "இல்லை, உங்களிடம் பேசி நான் ஆங்கிலம் வளர்த்துக் கொள்ள வேண்டும்" என்றார். எனக்கே தூக்கிவாரிப் போட்டது. நாமே பிலிப்பைன்ஸ் நண்பர்களிடம் பேசி ஆங்கிலத்தை மேம்படுத்த முயல்கிறோம், இவர் நம்மிடம் கேட்கிறாரே என்று வியந்தேன்.
மாலை 6 மணி அளவில் மீண்டும் அழைப்பு வந்தது. "சாரி மிஸ்டர் ராஜா, என்னால் ஒன்பது மணிக்கு வர முடியாது. ஒன்பது ஐந்திற்கு வரலாமா ?" என்று அவரின் கொஞ்சல் உச்சரிப்பில் கேட்டார். அந்த ஜப்பானியரின் நேர மேலாண்மையை, அந்தச் சிறிய கால இடைவெளியைக் கூட அவர் மதிப்பதைப் பார்த்து வியந்து நின்றேன். அன்று முதல் நானும் அதை என் வாழ்க்கையில் கடைப்பிடிக்கத் தொடங்கினேன். என்னை அறிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும் நான் எப்படியென்று...(இதை சுய தம்பட்டமாக எண்ண வேண்டாம்).
அவரும் வந்தார். அவரோடு அமர்ந்து பேசினோம். இப்பதான் அடுத்த சிக்கல் ஆரம்பமானது. இதைப் பொறுக்க முடியாத பக்கத்து பச்சை நாட்டுக்காரர்கள், பொறாமையில் பெரிய அதிகாரிகளிடம் சென்று போட்டுக் கொடுத்தார்கள். அப்புறம் என்னாச்சு?

No comments: