08.05.2003 அன்று, அதாவது கிட்டத்தட்ட 23 வருடங்களுக்கு முன்பு, பையன் வெளிநாடு போவதை ஒரு திருவிழாபோல் கொண்டாடி சொந்த பந்தங்கள் எல்லாம் சேர்ந்து சமயபுரம் கோவில் எல்லாம் சென்று பின்னர் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தனர். எனது முதலாவது பயணம் அது. இன்று நினைத்தாலும் பசுமரத்தாணிபோல் நினைவில் வருகிறது.
திருச்சியில் இருந்து கொழும்பு வரை சென்று பின்னர் தோகா நோக்கிய பயணம். உண்மையில் தோகாவிற்கும் கத்தாருக்குமே வித்தியாசம் தெரியாது. அவ்வளவு ஏன்...முதலில் ஊரில் உள்ளவர்கள் யாருக்குமே கத்தார் என்றால் அப்போதெல்லாம் தெரியாது. துபாய் பக்கம் என்று சொன்னால்தான் புரியும். அப்படித்தான் கத்தார் வந்தடைந்தேன். இரவில் வந்து இறங்கினாலும் அனல் காற்றின் வேகம் பட்டையக் கிளப்பியது.
ஊரில் இருந்த பெரியகருப்பன் பெரியப்பாவின் வீட்டிற்கு நான்தான் வரைபடம் (house plan) வரைந்து கொடுத்தேன். அப்போது ஏதாவது வேலையிருந்தால் சொல்லுங்க பெரியப்பா என்று கூறியிருந்தேன். (அவர் பக்கத்து வீடுதான், கிராமங்களில் சாதி மதம் பார்க்காமல் உறவு முறையில்தான் அனைவரிடமும் பழகுவோம் அழைப்போம்) அவரும் அதை ஞாபகம் வைத்து எம்மை வேலைக்கு சிபாரிசு செய்து எடுத்தார்கள். அப்போது நான் அஸ்ஸாமில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அழைத்த உடனேயே விமானம் ஏறி வந்துவிட்டேன். அப்படி ஏறிய அந்தப் பயணத்தின் அத்தாட்சி யாக புகைப்படங்கள் ஏதும் இல்லை. ஆனால் பழைய கடவுச்சீட்டின் (பாஸ்போர்ட்) முத்திரைகள் மட்டும் உள்ளது. அதை எதேச்சையாக பார்த்தபோது பழைய நினைவுகள் எல்லாம் வந்து வந்து போகிறது.
ஞாபகம் வருதே...
செ. இராசா
#கத்தாரில்_நான்_1
குறிப்பு: டை கட்டி போட்டா எடுத்திருக்கேன். ஆனால் பாருங்க.... சட்டை பட்டன்கூட சரியாப் போடலை

No comments:
Post a Comment