கத்தார் வந்தவுடன், விமான நிலையத்தில் இருந்து எனக்காக ஒதுக்கப்பட்ட மைதரில் உள்ள அறைக்கு, பெரியப்பாவும், என்னை வேலைக்கு எடுத்த நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரியும் கண்ணன் சாரும் அழைத்துச் சென்றார்கள். அது ஒரு அபார்ட்மெண்ட். நானும் இளம் பொறியாளர் என்பதால், இரண்டு படுக்கை அறைகள் கொண்ட அந்த வீட்டில் எனக்கென ஒரு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆரம்பம் எல்லாம் மிகவும் அமர்க்களமாகவே இருந்தது. கண்ணன் சாரும் பெரியப்பாவும் அந்த இடத்திற்கு வந்த பிறகு நண்பர்களானவர்கள். அந்தப் பழக்கத்தில்தான் எனக்காக இந்த வேலையைப் பரிந்துரை செய்து வாங்கிக் கொடுத்தார்கள்.
கண்ணன் சார் விடைபெற்றவுடன், சாப்பிட என்னை அழைத்துச் சென்றார் பெரியப்பா. இரவு 10:30 மணி இருக்கும். அனல் காற்று காதுக்குள் புகுந்து சீறியது. ஒரே புழுக்கம். ஆனால், ஒரு கடைக்குள் நுழைந்தால் உடம்பே நடுங்குமளவுக்கு ஏசி (AC) குளிர். எங்கு பார்த்தாலும் ஏசிதான். 'மீனுக்கு நீர் எப்படியோ, அதேபோல்தான் இங்கே மனிதர்களுக்கு ஏசி. இது இல்லாமல் இங்கே உயிர்வாழ முடியாது' என்று ஓரளவு புரிந்துகொண்டேன். மலையாளிக்கடை புரோட்டாவைச் சாப்பிட்டுவிட்டு அறைக்குத் திரும்பினோம். மெத்தையில் படுத்தால் தூக்கமே வரவில்லை. புதிய வேலை எப்படி இருக்குமோ? புதிய சூழல் எப்படி அமையும்? எனக்கு வழங்கப்படப்போகும் பணி என்ன? என்கிற பல கேள்விகள் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தன.
மறுநாள் சரியாக அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் சூரியன் எட்டிப் பார்த்துவிட்டது. பெரியப்பாவும் அவருடைய வேலைக்குக் கிளம்பிவிட்டார். கத்தார் நாட்டில் ஒரு வீட்டில் பிளம்பிங் சூப்பர்வைசராகப் பல வருடங்கள் பணியாற்றி, பல மொழிகள் பேசி, அனைவரிடமும் நட்பாகப் பழகியவர் அவர். கொரோனா காலத்தில் அவர் உயிரிழந்தது பெரிய இழப்பு. அவருடைய இரு பிள்ளைகளை முதலில் கூப்பிடாமல் பக்கத்து வீட்டு பிள்ளையான எனக்கு செய்த உதவிக்கும் அவருடைய பெருந்தன்மைக்கும் நான் என்றும் கடமைப்பட்டவன். ஆனால், விதி வேறு ஏதோ ஒன்றைத் தீர்மானித்திருந்தது போலும்.
அடுத்த நாள் சரியாக ஆறு மணிக்கே தயாராக இருக்கச் சொன்னார்கள். "டை (Tie) கட்டி வரச் சொல்" என்று கண்ணன் சார் அறிவுறுத்தினார். எனக்கு டை கட்டத் தெரியாது. பலமுறை முயற்சித்துப் பார்த்துத் தோற்றுப்போய், அவரிடம் தயக்கத்துடன் கூறினேன். அவரே கட்டியது போல் இருக்கும் ஒரு டையைக் கொடுத்து, அதைப் போட்டுக்கொள்ளச் சொன்னார். இருவரும் சன்னையா 18-ல் இருந்த அலுவலகத்தை அடைந்தோம். அது ஒரு இரும்பு மற்றும் அலுமினிய நிறுவனம். அதைப் பார்த்ததுமே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் படித்தது கட்டிடவியல் (Civil and Structural Engineering). இந்த ஆலையில் எனக்கு என்ன வேலை இருக்கப்போகிறது என்று குழப்பத்துடனேயே உள்ளே நுழைந்தேன்.
நல்ல சிகப்பான, கொரியன் போன்ற தோற்றம் கொண்ட மேலாளர் எங்களை ஆங்கிலத்தில் விசாரித்தார். அவர் பேசியது புரிந்தும் புரியாததுமாக இருந்தது. தட்டுத்தடுமாறிப் பதிலளித்தேன். பிறகு, என்னை ஆலைக்குள் அழைத்துச் செல்லச் சொன்னார்கள். கண்ணன் சாரும் என்னைக் கூட்டிச் சென்று விட்டுவிட்டார்.
ஆனால், போனில் பேசும்போது ஒரு வேலை என்று சொல்லிவிட்டு, இப்போது வேறொன்று நடக்கிறது. "சூப்பர்வைசர் வேலை என்றால் வரமாட்டேன், பொறியாளர் வேலை என்றால் மட்டுமே வருவேன்" என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டுத்தான் வந்தேன். ஆனால், இங்கே நிலைமை வேறாக இருக்கிறதே என்னும் குழப்பத்தோடு சென்றேன்.
தொடரும்...

No comments:
Post a Comment