08/07/2026

கத்தாரில் நான் - 4

 

அப்படி இப்படியெனப் பல கனவுகளோடு வந்தவனுக்குக் கிடைத்த முதல்வேலை, மிகுந்த மன உளைச்சலைத்தரவே, அதைவிடுத்து, வேறுவேலை தேடி அலைந்த அந்த 17 இடங்களிலும் ஒவ்வொரு விதமான அனுபவம் மட்டுமே கிடைத்தது. வேலை மட்டும் கிடைக்கவில்லை.
வேலை இருந்தால் விசா இல்லை; விசா இருந்தால் வேலை இல்லை. ஒவ்வொரு நாளும் மிகுந்த ரணத்தோடு நகர்ந்தது.
லக்தாவில் ஒரு அரபி வீட்டில், அந்த அரபிக்கே தெரியாமல் நான் வாழ்ந்த அனுபவம் மறக்க முடியாதது. என்னைப் பொத்திப் பொத்திப் பாதுகாத்த ஆறுமுகம் அண்ணாவைச் சொல்லாமல் இருக்க முடியாது. அவர் இன்னும் அங்குதான் வேலை பார்க்கிறார். அவருக்கு மதியம் மற்றும் இரவு நேரங்களில் சமையல் செய்வது, அரபிகள் அணியும் வெள்ளை உடைகளை இஸ்திரி செய்வதுதான் வேலை. தினமும் காலையில் 'குப்பூஸ்' என்னும் மைதாவில் செய்த ரொட்டியையும், முட்டை-தக்காளி போட்டுச் செய்த பொடிமாஸையும் செய்து தருவார். அதை நானும், அதே அறையில் தங்கி கார் ஓட்டுநராக வேலை பார்க்கும் அவருடைய அண்ணனுமாய்ச் சேர்ந்து சாப்பிடுவோம். அந்த அறை, வீட்டின் முன்புறம் வேலைக்காரர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.
மதிய நேரத்தில் அரபிகள் எப்போதும் எண்ணெய் மற்றும் மசாலா இல்லாத கோழி வறுவலையும், மசாலா இல்லாத ஒரு மஞ்சள்நிற சாதத்தையும் சாப்பிடுவார்கள். பெரும்பாலும் எங்களுக்கும் அதேதான்‌. சில சமயங்களில் ஆறுமுகம் அண்ணா எங்களுக்காகத் தனியாக பாஸ்மதி அரிசியில் செய்த சோறும் சாம்பார் அல்லது ரசமும் செய்து தருவார். மதிய நேரத்தில் அரபிகள் தூங்கியவுடன், யாருக்கும் தெரியாமல் கொள்ளைப்புறம் வழியாக எங்களை அழைத்துச் சென்று உணவளிப்பார். மனசு ரொம்ப வலிக்கும். என்னடா இது, யார் வீட்டுச் சாப்பாடையோ இப்படித் தெரியாமல் சாப்பிடுகிறோமே...ச்சே, என்ன வாழ்க்கைடா என்று மிகவும் நொந்து அழுவேன். இருப்பினும் என்ன செய்ய? பசிக்கிறதே....!!!
மாலையில் பக்கத்து அரபி வீட்டில் வேலை செய்யும் மற்ற ஓட்டுநர் மற்றும் சமையல்கார நண்பர்கள் வருவார்கள். அனைவரும் சேர்ந்து சீட்டாடுவார்கள். எனக்கு விளையாடும் மனநிலை இல்லை; கவலையோடு உம்மென்று அமர்ந்திருப்பேன். "கவலைப்படாதே தம்பி, நல்ல வேலை கிடைக்கும்" என்று அனைவரும் ஆறுதல் கூறுவார்கள்.
இரவு 9:00 மணியளவில், காலையில் சாப்பிட்ட அதே குப்பூஸ் மீண்டும் வரும். குப்பூஸ் என்பது அரபிகளின் அன்றாட உணவு; அவர்களின் தேசிய உணவும் கூட. ஏழை முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் உண்ணும் இந்தச் சமத்துவ உணவிற்கு, அன்றிலிருந்து இன்று வரை அரசாங்கம் மானியம் வழங்கி, 1 ரியாலுக்கு 10 வீதம் கிடைக்கச் செய்வது குறிப்பிடத்தக்கது. இப்படித்தான், இரண்டு வேளை குப்பூஸோடும், ஒரு வேளை சோற்றோடும், வேலையைப் பற்றிய என்ற சிந்தனையிலேயே ஒவ்வொரு நாளும் கழிந்தது.
நாங்கள் அரபிவீட்டின் முன்புறம்தான் இருந்தாலும், பெரும்பாலும் அந்த அறைக்கு அரபிகள் யாரும் வரமாட்டார்கள். வந்தாலும் பெரிதாக எதையும் சொல்ல மாட்டார்கள். ஒருமுறை தெரியாமல் ஜன்னல் வழியாகச் சென்றபோது, அரபிப் பையன் ஒருவன் என்னைப் பார்த்து, "யார்?" என்று விசாரித்துவிட்டான். அது ஆறுமுகம் அண்ணாவிற்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. அந்த இக்கட்டான சூழலில் அங்கிருந்து கிளம்பி பெரியப்பா அவர்கள் தங்கியிருந்த மிகப்பெரிய பணக்கார அரபி வீட்டில் எட்டு, பத்து பேர் இருந்த அறையில் இரண்டு நாட்கள் தங்கினேன். (இந்த அரபி பழைய வீட்டு அரபியைவிட மிகப்பெரிய பணக்காரர். இவருக்கென்று எத்தனையோ அபார்ட்மென்டகள் தோட்டமெல்லாம் உள்ளது. இவை அனைத்திற்கும் பெரியகருப்பன் பெரியப்பாதான் பிளம்பிங் சூப்பர்வைசர். ஆனால், பாவம் கொரொனாவில் பெரியப்பா இறந்தபோது பெரிதாக எதுவும் கொடுக்கவில்லை. அதைப் பிறகு சொல்கிறேன்) நான் கிராமத்தில் இருந்து வந்தவன் என்பதால், அங்கிருந்த அண்ணன்மார்கள் எனக்கு நல்ல மரியாதை கொடுத்தார்கள். ஆயினும், பெரியப்பாவுக்குத்தான் வெளியே சொல்ல முடியாத தவிப்பு. காரணம் எங்கள் ஊரில் அவரைப் பலரும் கேள்வி கேட்பார்களே என்கிற நினைப்பு. ஆம்..அவர் மகன்களுக்கு செய்யாமல் வேற ஆளுக்கு இவர் ஏன் செய்து இப்படி கஷ்டப்பட வேண்டும் என்கிற எண்ணம் வரத்தானே செய்யும்.
ஒரு கட்டத்திற்கு மேல் நானாகவே அவரிடம் சென்று, "அப்பா, நான் வேண்டுமானால் பழைய வேலைக்கே போய்விடவா?" என்று வேதனை மிகுந்த குரலோடு கேட்டேன். அவரும் கண்ணன் சாரிடம் பேசியுள்ளார். இம்முறை அவர், "அந்த இரும்பு வேலை வேண்டாம். அதற்குப் பதிலாக அதே நிறுவனத்தில் அலுமினிய ஜன்னல்களைப் பொருத்தும் வேறொரு இடத்திற்குப் போகச் சம்மதமா?" என்று கேட்டார். வேறு வழியின்றி நானும் சரியென்று கூறினேன்.
கண்ணன் சார் என்னை அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்று நல்ல உணவெல்லாம் அளித்து, நிறைய அறிவுரைகள் கூறினார். பின்னர், சன்னையாவில் இருந்த ஒரு அறைக்கு என்னை அழைத்துச் சென்றார். "காலையில் 6:00 மணிக்கு வேன் வரும், அதற்குள் தயாராகிவிடு" என்று கூறிச் சென்றார். ஒரு குடோன் போன்ற அறையின் சாவியைத் தந்தார்கள். அது தகரக் கொட்டகைபோட்ட என் உயரத்தைவிட சற்றே இரண்டடி உள்ள அறை. கொஞ்சதூரம் தள்ளி பொதுக் குளியலறை மற்றும் கழிப்பறை இருந்தது. சாப்பாடு பற்றியெல்லாம் எதுவும் நினைக்கவில்லை. நமக்குப் பழக்கமில்லாத மனதிற்கு ஒவ்வாத வேறுவழியின்றி ஒத்துக்கொண்ட புதிய சவாலை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற பயத்தோடே அறையைத் திறந்தேன்.

No comments: