முந்தைய பதிவில், பின்னூட்டமாக 'குரு' சார் குறிப்பிட்டது போல, படிப்பது, வேலையில் சேருவது எல்லாம் பெரிய சாதனையே அல்ல; கத்தாரில் லைசென்ஸ் எடுப்பதுதான் சாதனை. அதுவும்போக இங்கே கார்தான் Portable office, shelter, AC caravan ...... எல்லாம். அதைப்பற்றி எழுதினால் யாருக்காவது பயன்படும் என்பதால் இங்கே பகிர்கிறேன்.
உண்மைதான்... ஊரில் பைக் கூட ஓட்டாதவர்கள் முதல் வாய்ப்பிலேயே லைசென்ஸ் எடுத்து விடுவதுண்டு. ஆனால், மலேசியா, இந்தியா எனப் பல ஊர்களில் பெரிய கனரக வாகனங்களை ஓட்டிய எத்தனையோ பேர், இங்கே பலமுறை தோல்வியடைந்ததைக் கண்கூடாகப் பார்க்கலாம். அதற்குக் காரணம், வாகனம் ஓட்டுவது வேறு; லைசென்ஸிற்காகத் தேர்வாளர்கள் முன்னிலையில் பயப்படாமல், அவர்கள் வைத்துள்ள அளவு முறைகளோடு வாகனம் ஓட்டித் தேர்வாவது வேறு.
முதலில் சிக்னல் தேர்வு. ஒரு ஜன்னல் வழியே தலையை நீட்டி, அவர்கள் காண்பிக்கும் படத்தில் உள்ள குறியீடுகளைத் தயங்காமல் உடனுக்குடன் சொல்ல வேண்டும். இதில் கைதேர்ந்த பல பாகிஸ்தானியர்கள்கூட மொழிப் பிரச்சினையால் தோல்வியடைவதுண்டு. அடுத்து, ஒரு உயரமான ரேம்பில் (Ramp) ஏறி, அப்படியே பின்னோக்கி வரவேண்டும். அதன் பிறகு, ஒரு கார் அளவே இருக்கும் பெட்டிக்குள், முன்னும் பின்னும் உள்ள கோன்களில் (Cones) இடிக்காமலும், பக்கவாட்டில் உள்ள கோட்டில் தொடாமலும் வண்டியை நிறுத்தி, பின் வெளியே எடுக்க வேண்டும்.
சாலையில் ஓட்டும்போது, தேர்வாளர் 16 விடயங்களைக் கவனிப்பார். வண்டியில் ஏறியவுடன் பெல்ட் போடுவது, கண்ணாடியைச் சரிசெய்வது, பார்க்கிங் லைட்டை அணைப்பது, இடதுபக்க சமிக்ஞை விளக்கைப் போடுவது, வண்டியை மெதுவாக எடுப்பது, சரியான வேகத்தில் நகர்த்துவது.... என இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு மதிப்பெண் உண்டு. இவை அனைத்தையும் சரியாகச் செய்தால்தான் தேர்வாக முடியும். இப்படி அனைத்தையும் செய்த நான், 'பாக்கெட் பார்க்கிங்'கில் தொடர்ந்து தோல்வியுற்றேன். ஒவ்வொரு முறையும் சிறு சிறு தவறுகள். கடைசியாகக் கிடைத்த இறுதி வாய்ப்பில், தெய்வங்களையெல்லாம் துணைக்கு அழைத்தேன். என் கால் நடுங்கியது. 'தயவு கூர்ந்து ஆடாதே' என்று என் கால்களை இரு கைகளாலும் பிடித்துக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டேன் (கவனிக்க... அடுத்தவர் காலைப் பிடிக்கவில்லை
). ஒருவழியாகப் பார்க்கிங் போட்டு, வண்டியை வெளியே எடுத்துவிட்டேன். பரீட்சை எழுதி முடிவுக்காகக் காத்திருக்கும் மாணவனின் மனநிலையோடு காத்திருந்தேன்.
இதில், ஒவ்வொரு முறையும் என்னைத் தேர்வுக்கு அழைத்துச் செல்லும் நஃபருல்லா என்னும் இலங்கை ஓட்டுநருக்குத்தான் எவ்வளவு பெரிய மனசு! நான் லைசென்ஸ் எடுத்தால் எங்கே அவருக்கு வேலை போய்விடுமோ என்ற அச்சத்தாலோ என்னவோ, ஒருமுறை கூட என்னை அவர் வாழ்த்தி அனுப்பியதே இல்லை. முடிவாக, நான் வெற்றியடைந்தேன் என்கிற அறிவிப்பு வந்தது. 'அப்பாடா' என்று மனம் சந்தோஷத்தில் மிதந்தது. லைசென்ஸ் வந்தவுடன் நான் செய்த முதல் வேலை என்ன தெரியுமா? கையில் இருந்த 1000 ரியாலில், 500 ரியாலை அந்த ஓட்டுநர் நஃபருல்லாவிற்கும், மீதத்தை எனக்குச் சொல்லிக்கொடுத்த மற்ற இரு ஓட்டுநர்களுக்குமாய்ப் பிரித்துக் கொடுத்தேன். 'இன்னா செய்தாரை ஒருத்தல்' என்கிற குறளை, 'இன்னா நினைத்தாரே ஒருத்தர்' என மாற்றி, அந்த ஓட்டுநருக்கு நான் கொடுத்ததைப் பெருமையாகவே நினைத்தேன். என் மனைவிக்கும் ஒரே சந்தோஷம். தோல்வியடைந்த மன உளைச்சலில் நான் டைரி முழுவதும் கவிதைகளாகக் கிறுக்கிக் கொண்டிருந்ததை நினைத்து, "அப்பாடா... இனி அந்தத் தொல்லையில்லை" என்று அவர் நிம்மதி அடைந்திருப்பார்.
இதே காலகட்டத்தில்தான், சங்கர் என்னும் மற்றொரு இலங்கை ஓட்டுநர் என்னிடம், "சார், இங்கே தியானம் கற்றுக்கொடுக்கும் இடமுள்ளது, வர்றீங்களா?" என்றார். உடனே சம்மதித்து, கத்தார் டிரைவிங் ஸ்கூல் அருகே இருந்த ஒரு இடத்திற்குப் போனோம் (SKY YOGA). அவர் அந்த வாரம் மட்டுமே வந்தார், ஆனால் நான் அன்றுமுதல் தொடர்ந்து செல்கிறேன். என்னைச் செதுக்கிய இடமது. அதைப் பிறகு பார்ப்போம்.
இப்படியே போய்க்கொண்டிருந்த வாழ்வில், உடல் எடை கூட ஆரம்பித்தது. ஏற்கனவே, மூச்சுக் குழாயில் ஒரு சிக்கல் இருந்தது. மருத்துவரிடம் பரிசோதித்தபோது, மூக்கில் எலும்பு வளைந்துள்ளதாகவும், ஆபரேஷன் செய்தால் சரியாகிவிடும் என்றும் கூறினார். சம்மதத்தின் பேரில் ஆபரேஷன் செய்தனர். மயக்க நிலையில் இருந்த என்னைக் காண, நண்பர் சக்திவேல் வந்திருந்தார். எதுவும் கேட்காமலேயே 20,000 ரியாலை மனைவியிடம் கொடுத்துச் சென்றுள்ளார். "இன்சூரன்ஸ் இருக்கு அண்ணா" என்று என் மனைவி எவ்வளவோ கூறியும் கேட்காமல், அவர் கொடுத்த அந்தக் கருணையை என்னவென்று சொல்வேன்? பிறகு உடல்நிலை சரியானவுடன், முதல் வேலையாக அவரிடம் அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுத்து நன்றியைக் காணிக்கையாக்கினேன். அப்போது, என் மனைவி மூலமாக அடுத்த ஒரு நற்செய்தி கிடைத்தது.

.jpg)

No comments:
Post a Comment