13/07/2026

கத்தாரில் நான் - 9

 






என்னை வேலைக்கு அமர்த்திய தமிழ் நிறுவனம், 'சப்ளை' முறையில் ஜப்பானிய நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தது. சேர்ந்த முதல் நாளிலேயே ஒரு லேப்டாப்பும் கைபேசியும் கொடுத்து, ரிக்கி என்னும் பிலிப்பைன்ஸ் பொறியாளரோடு களத்திற்கு அனுப்பி வைத்தார்கள். அவர் என்னை ஒரு வெட்டவெளியில் (Mannual Excavation) குழிவெட்டும் இடத்தில் இறக்கிவிட்டு, மாலை வருவதாகக் கூறிச் சென்றுவிட்டார். ஆஹா... மீண்டும் அதே வெயில்! ஆனாலும் மன உறுதி சற்றே கூடியிருந்ததால், இம்முறை வெயிலைத் தாங்குவேன் என்று நம்பி, தற்காலிகக் கூரைக்குள் அமர்ந்து வேலையைக் கவனித்தேன்.
அவ்வப்போது நேபாளத்தைச் சேர்ந்த துணை ஒப்பந்தப் பொறியாளர் (Sub-contractor) வருவார். அவர் வரும்போது, ஃபோர்மென்கள் அனைவரும் வெயிலில் நின்றே பேசுவார்கள். அவர் மட்டும் காரின் ஜன்னலை மட்டும் திறந்தபடி, குளுகுளு ஏசிக்குள் அமர்ந்தபடியே பேசுவார். இதைப் பார்க்கும்போது எனக்குக் கடுங்கோபமாக இருக்கும். "படுபாவி, இப்படி இருக்கிறானே! நம்மைக் கூடச் சிறிது நேரம் காரில் அமர வைக்க மாட்டேங்கிறானே!" என்று யோசித்தபடியே மாலை வந்தது. ரிக்கி வந்து என்னை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றான். அங்கே அன்றைய வேலைகளைக் கணினியில் எப்படிப் பதிவு செய்ய வேண்டும் என்று விளக்கினான். எனக்காக ஒரு 'பஜிரோ' காரையும் வழங்கினார்கள். ஒரு பொறியாளருக்கு இவ்வளவு மரியாதையா? என்று அப்போதுதான் புரிந்தது. வெறும் இரண்டு வரிகள் தட்டச்சு செய்ய லேப்டாப், அப்புறம் மொபைல், இப்போது கார்... "அட ராசா, நீ எங்கேயோ போய்ட்டடா.." என்று மனம் முதல்முறையாக மகிழ்ச்சியடைந்தது.
ஏதோ மிகப்பெரிய சாதனை படைத்தவன் போல தங்கியிருந்த அறைக்கு வந்தால், என்னை வாடகைக்கு விட்ட நிறுவனத்தின் ஆட்களுக்கு அடிவயிற்றில் புகைந்த நெடியை நன்றாகவே உணர முடிந்தது. காரணம் இல்லாமல் இல்லை; இதுநாள் வரை அவர்கள் அனைவருக்கும் ஒரு பிக்கப் வாகனம்தான் இருந்தது. எனக்குப் பஜிரோ கிடைத்ததும் விடுவார்களா? அந்தப் பஜிரோவை எனக்குத் தெரியாமல் டிரைவரிடம் வாங்கி, இரவில் அதைக் கொண்டு கேபிள் இழுப்பதாகத் தகவல் வந்தது. அடுத்த நாள் முதல் சாவியை நானே வைத்துக்கொண்டேன். அங்கேதான் எனக்கும் முதலாளி குபேரனின் மச்சான் கந்தனுக்கும் மோதல் ஆரம்பித்தது. "வண்டிக்கு நாங்கள்தான் பொறுப்பு" என்றார்கள். "இல்லை, வண்டி எனக்குத் தரப்பட்டது, தரமுடியாது" என்றேன். அவருக்கு அது அவமானமாகப் போனது போலும். உடனடியாகப் பேசி புதிய கார் ஒன்றை அடம்பிடித்து கந்தன் வாங்கியுள்ளார்.
சரி, மீண்டும் வருவோம். கார் வந்தவுடன் அடுத்த நாள் பெருமிதத்தோடு வேலைக்குப் போனேன். முதல் நாளில் கண்டுகொள்ளாத நேபாளிப் பொறியாளர், இம்முறை தன் காரில் இருந்தபடியே நிமிர்ந்து பார்த்தார். என்னதான் கார் வந்தாலும் நான் கருணையோடுதான் நடந்துகொண்டேன். ஃபோர்மென்களைக் காரில் ஏற்றிக்கொண்டேன்; தொழிலாளர்களுக்குத் தண்ணீர் பிடிக்க உதவி செய்தேன். இது என் ஓட்டுநருக்குப் பிடிக்கவில்லை. இதெல்லாம் உங்கள் வேலை இல்லை என்று எச்சரித்தார். உண்மைதான்; சில சமயங்களில் நாம் செய்யும் உதவிகளை வேலை செய்பவர்கள் புரிந்துகொள்வதில்லை. அது நம் கடமை என்றே நினைத்துவிடுகிறார்கள். உரிமையோடு தண்ணீர் கேனைக் கேட்காமலேயே வைத்துவிட்டு, "ஜாயியே பாணி லேக்கே ஆயியே" (போய் தண்ணீர் எடுத்து வா) என்று என்னைப் பணித்தார்கள். அதேபோல் ஜன்னலை மட்டும் இறக்கிவிட்டுப் பேசும் பொறியாளருக்கு ஃபோர்மென்கள் கொடுக்கும் மரியாதை, நமக்குக் கிடைப்பதில்லை என்பதும் உண்மைதான். சரி, எங்கெங்கோ போய்விட்டோம், கதைக்கு வருவோம்.
ஜப்பானியரிடம் வேலை பார்த்தாலும், சம்பளம் கொடுப்பது என்னவோ அந்தத் தமிழ் நிறுவனம்தான். ஒரு மாதம் முடிந்து சம்பளம் வாங்க அழைக்கப்பட்டேன். ஹாலின் நடுவே பெரிய டிஷ் ஆண்டெனா இணைப்பில் சன் டிவியில் நாடகம் பார்த்தபடியே, தரையில் படுத்திருந்து கந்தன் என்னிடம் சம்பளத்தை நீட்டினார் (2500 ரியால் இருக்கும் என்று நினைக்கிறேன்). வந்தது பாருங்கள் கோபம்! எனக்கு வேண்டாம் என்று வாங்காமலேயே வந்துவிட்டேன். துபாயில் இருந்து குபேரன் அழைத்தார். "என்ன ராஜமாணிக்கம், எப்பப் பார்த்தாலும் ஏன் பிரச்சினை பண்றீங்க?" என்றார்.
"சார், நான் பிரச்சினை பண்ணவில்லை. உங்கள் மச்சான் பணத்தை எப்படிக் கொடுத்தார் தெரியுமா? படுத்துக்கொண்டே அலட்சியமாகக் கொடுத்தார். நான் ஊரில் தொழிலாளர்களுக்குக் கூட கவரில் போட்டுத்தான் சம்பளம் கொடுப்பேன். இந்த ஆளு படுத்தபடியே பணத்தை மற்றவர்கள் பார்க்கும் வகையில் கொடுத்தால் எப்படி?" என்றேன். "அப்படியா நடந்துச்சு?" என்று கேட்டு, உடனடியாக மச்சான் கந்தனைத் திட்டிவிட்டு, அனைவருக்கும் கவரில் போட்டு மரியாதையாகச் சம்பளம் வழங்கும் முறையைச் செயல்படுத்தினார். என்மேல் கந்தனுக்கு இருந்த கோபம் இப்போது இன்னும் கூடியது அப்புறம் என்னாச்சுத் தெரியுமா?

2006 கால ஒளிப்படங்களில் சில...
(கதையின் நகர்வோடு ஒப்பிட வேண்டாம்)
அப்பெல்லாம் கருப்பாப் பயங்கரமா இருப்பேன்.

No comments: