பிறர்செய்த குற்றம் பெருந்துயர் தந்தால்
மறத்தல்தான் மாற்று(ம்) மருந்து!
(1)
அறியாப் பிழைபொறுத்த ஆண்டவரை எண்ணி
அறியார் பிழைபொறுப்பீர் ஆய்ந்து!
(2)
தூக்கிச் சுமப்பதினால் துன்பம் விளையுமெனில்
தூக்கி எறிதல் சுகம்!
(3)
மன்னிக்கும் போதெல்லாம் மாமனிதர் ஆவதினால்
மன்னிக்கக் கற்பீர் மகிழ்ந்து!
(4)
பொறுமையின் எல்லையாய் போட்டதார் கோடு?
பொறுத்தார்க்கே கிட்டும் புகழ்
(5)
சினத்தோடு கொட்டும் சிலபல சொற்கள்
மனதிற்குள் சென்றால் வடு
(6)
சினமும் கவலையும் சிக்கலைக் கூட்டி
மனிதநிலை தாழ்த்தும் வலிந்து
(7)
வினைப்பதிவு போனதென்று விட்டுவிட்டு வந்தால்
அனைத்தையும் பார்ப்பான் அவன்
(8)
என்ன முயன்றும் இயலவில்லை என்றானால்
நெஞ்சார வாழ்த்துங்கள் நேர்ந்து!
(9)
சட்டத்தை முன்வைத்து தண்டனை தந்தாலும்
இட்டமுடன் மன்னிப்பீர் ஏற்று!
(10)
செ. இராசா
19/04/2024
மன்னிப்பு வெண்பாக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment