29/07/2026

எழுத்து என்பது வாசிப்பவனை

 






எழுத்து என்பது வாசிப்பவனை ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்று எழுத்தாளர் #ஜெயகாந்தன் கூறுவார். அந்த வகையில் என் கவிதைகளுக்குக் கிடைத்த முதல் அங்கீகாரமாய் நான் கருதுவது பத்து வருடங்களுக்கு முன்பாக நெல்லையில் இருந்தபடியே காரைக்குடியில் உள்ள Deputy Collector வாயிலாக சிறப்பு செய்த திரு. Thiagarajan Thiagu ஐயா அவர்கள்தான். ஆமாம்.. அவர்தான் அடியேனின் எழுத்தை ஊக்கப்படுத்தும் விதமாக அமைந்த முதல் வாசக நண்பர்.
அதேபோல் நீண்ட நாட்களுக்குப் பிறகு
அடியேன் எழுதிய #கத்தாரில்_நான் என்னும் கட்டுரைத் தொடருக்குக் கிடைத்த வாசக உறவாய் அமைந்த Kannan Rajamanickam அவர்களின் அன்பான சந்திப்பில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி இறைவா!

28/07/2026

ஆச்சிக்கடைப் பிரியாணி

 

ஆச்சிக்கடைப் பிரியாணி
மச்சான் போறேன் வர்றீயாநீ
டங்கு டங்கு டங்கு டங்குனு சத்தம்
காதுல
ரீங்காரமா எப்போதுமே சுத்தும்
அடிச்சு தூளு கிளப்புதுங்க வாசம்- புடி
புடிக்கலைன்னா பீசுகூட ஏசும்
ரைத்தாவோட கூட்டணிதான் புடிக்கும்- அதப்
பாத்தாலே மனசுக்குள்ள துடிக்கும்!
பாயிவீட்டு பிரியாணிதான் டேஸ்டு- ஒரு
சொட்டுக்கூட ஆக்கமாட்டோம் வேஸ்டு
வகைவகையா இதுல இருக்கு டைப்பு- அத
நினைக்க சொல்ல கூடுதுங்க வைபு!
திண்டுக்கல்லு தலப்பாக்கட்டி
கலக்குதுபார் வெளுத்துக்கட்டி
சேலம் ஆரார் ஆம்பூரு
செட்டிநாடு போய்ப்பாரு
சீரக சம்பா சூப்பரு
பாஸ்மதியும் டக்கரு
சிக்கனுன்னா லெக்பீசு
மட்டனுன்னா ஆள் பீசு
நான்வெஜ்ஜுன்னா முட்டை வையி
நான்.....வெஜ்ஜூன்னா‌...
என்னது வெஜ்ஜா
யோவ்..ஏன்யா..
சரி சரி...குஸ்கா வையி...
Shared post

27/07/2026

போட்டுத் தாக்குற பார்வையால

 

போட்டுத் தாக்குற பார்வையால
போக்குக் காட்டுற போதைபோல
ஆட்டி வக்கிற ஆட்சிபோல
ஆக்கி வக்கிற ஊடலால...
சீக்கு புடிச்ச கோழிபோல
சினுங்கி நிக்கிறேன் காதலால...
தேக்கிப் பிடிச்ச நீரைப்போல
காத்துக் கிடக்கேன் பாயமேல...
வாடி...வாடி வாடி..
நானும் வர்றேன் நாடி
கூடி....ஆடிப் பாடி
ரீல்சு போடலாம்டி...
ஏன்டி....ஏன்டி ஏன்டி
என்னை விட்டா யார்டி?
டாடி....டாடி மம்மி
ஆயிடுவோம் வாடி...

தொழுகைக்கான நேரம்

 

தொழுகைக்கான நேரம்
பாங்கினோசை கேட்கும்
மத்ததெல்லாம் ஒதுக்கி வைக்க வேணும்.
எல்லாம் வல்ல இறைவன்
அவனுக்காக ஒருவன்
தொழுகுறப்ப மனசு சுத்தமாகும்.
அண்ணல்நபி வழியாய் வந்த வேதம்
நம் இன்னல் வலி தீர்க்க அதுவே போதும்...
மண்ணில் வழி காட்டுகின்ற ஞானம்
அது தன்னுள் ஒளி ஏற்ற ஓத வேணும்...
யா அல்லாஹ் யா அல்லாஹ்
சுபஹானல்லாஹ்...
யா அல்லாஹ் யா அல்லாஹ்
சுபஹானல்லாஹ்
‌விடியற்காலை தூக்கம் களைஞ்சு
விடியல் தந்த அவனை நினைச்சு
சொன்ன கடமை எல்லாம் முடிச்சு
மெக்கா நோக்கி தொழுவோம் இணைஞ்சு (2)
ஃபஜரைப் போலவே ஆக்கிய ஐந்தையும்
தொழுகும் மாந்தரே
அவனின் பிள்ளை..

ஒருநாள் போலவே வரும்நாள் அனைத்தும்
ஒழுகும் பேர்க்கே
துன்பம் இல்லை..
முறையாய் சரியாய்த் தொழுவோமே
உள்ள காலம் வரைக்கும்
உண்மையாக நடந்தால்
மறுமையிலும் நல்லதுதான் நடக்கும்..
யா அல்லாஹ் யா அல்லாஹ்
சுபஹானல்லாஹ்...
யா அல்லாஹ் யா அல்லாஹ்
சுபஹானல்லாஹ்
✍️செ. இராசா

25/07/2026

எடுத்தான் அவனும் அவதாரம்

 

எடுத்தான் அவனும் அவதாரம்
நெருப்பாக் கொதிக்கும் அவன்தேகம்
அடிச்சாப் பறக்கும் புயல்வேகம்
வெடிச்சா கிளம்பும் புது ரூபம்..
வேணாம் வேணாம் விலகிடு- உயிர்
வீணாப் போகும் வழிவிடு...
யாரோ எவனோ இல்லைடா- இவன்
ஊரைக் காக்கும் பிள்ளைடா
அடிச்சாப் பறக்கும் சிக்சருதான்
அதுக்கும் பொறுமை அவசியந்தான்
எழுந்தா எழுதும் சரித்திரந்தான்
முறையா செஞ்சா சம்பவந்தான்
உறங்கும் சக்திய உசுப்பிவிட்டா
இமயம் வந்திடும் காலடிதான்
உலகம் உடனே மறந்திடுன்டா
உனையே நினைக்க வைக்கனுன்டா
ஆணும் பெண்ணும் சரிசமம்தான்
நீயும் நானும் ஒருஇனம்தான்
எல்லாம் ஒன்னு தெரியாதாj?!
வானம் பொதுதான் புரியாதா?
படிச்சா மாறும் வாழ்க்கையடா
பணிவா ஏறி ஜெயிக்கனுன்டா
அடங்கிப் போவது மடமையடா
அடக்க நினைச்சா வெடிக்கனுன்டா
விளைச்சல் கொடுக்க விதைக்கனுன்டா
நினைச்சா அடைய முயலனுன்டா
மறதி உலக இயற்கையடா...
மறதிய மறக்க வைக்கனுன்டா..

22/07/2026

கத்தாரில் நான் - 22

 

ஆட்குறைப்பு நடவடிக்கை தீவிரமாக இருந்த காலகட்டத்தில், வேலையும் குறைந்துவிட்டதால் ஏதேதோ சம்பந்தமில்லாத வேலைகளைச் செய்து கொண்டிருந்தேன். ஏறக்குறைய நிர்வாகத்திற்கு கிடைக்க வேண்டிய வழிகள் எல்லாப் பக்கங்களிலும் அடைபட்டது போன்ற சூழல் அது. இறுதியில் ஒரு சிலர் மட்டுமே ஈடுபட்டிருந்த ஒரு வேலையில், ஊருக்குப் போன அந்த நபர் வராமல் போனதால் என்னைத் தற்காலிகமாக நியமித்திருந்தார்கள்.
​அது நான் பார்த்த வேலையைவிட சற்றே குறைவான வேலைதான் (அந்த வேலை பார்க்கப் பொறியாளரே தேவையில்லை), இருப்பினும் அதை ஏற்றுக்கொண்டு போனேன் (அது நான் செய்த தவறு). அதில் முற்றிலும் சம்பந்தமே இல்லாத ஒரு அறிக்கை கேட்டார்கள். "அதெல்லாம் எங்கள் வேலையில்லையே" என்றேன். அதுபற்றி ஏற்கனவே கிளைன்டில் பணிபுரியும் ஒரு மூத்த அதிகாரியிடம் கேட்டபோது, "அதெல்லாம் நீங்கள் செய்யாதீர்கள் சார்... அந்த மின்னஞ்சலுக்குப் பதில் போடுங்கள். கேள்வி கேட்டவர் ஒன்னும் பெரிய ஆளெல்லாம் இல்லை" என்று வழிநடத்தினார். பொதுவாகப் பெரிய ஆள், சின்ன ஆள் என்றெல்லாம் நான் எப்போதும் பார்த்ததில்லை. எப்போதும் போலவே என் நிலைமையை விளக்கிப் பதில் போட்டேன். பெரிய நபர்களெல்லாம் CC-ல் (Copy) தான் இருந்தார்கள். ஆனால், அங்கே அந்த முன்னால் நபரின் நாட்டினர் கொண்ட லாபி அதைப் பெரிதாக்கி மாற்றி, அந்த வேலையையும் நிறுத்தி விட்டார்கள். இதைப் பற்றி விளக்க அப்பொழுது எமக்கு உதவி செய்ய யாருமே இல்லை (அனைவரும் விடுமுறையில் இருந்தார்கள்). இது என் பெரிய மேலாளருக்குத் தெரியவர, அவரிடம் என் விளக்கத்தைக் கொடுத்தேன். இருப்பினும் அவர் மிகவும் வருத்தப்பட்டு நகர்ந்து விட்டார்.
​இந்நேரத்தில்தான் குடும்பத்தோடு ஊருக்குப் போய்விட்டு விடுமுறையில் திரும்பி வந்திருந்தேன். துணை மேலாளரிடம் இருந்து (சரியாக 2022 டிசம்பர் முதல் வாரத்தில்) அழைப்பு வந்தது. "ஆஹா... ஏதோ நடந்துவிட்டது" என்றே உள்மனது சொன்னது. பத்து வருடங்கள் நல்ல முறையில் வேலை பார்த்த நிறுவனத்திலிருந்து விடைபெறுவதற்கான கடிதம் கையில் கிடைத்தது.
வேலை இல்லாமல்தான் நீக்குகிறார்கள் என்றாலும், படித்துக் கொண்டிருந்த பிள்ளைகளின் நிலைமையை எண்ணி சற்றே கலக்கமடைந்தேன். ஒருவகையில் அது நல்ல முடிவு என்றும் மனசு கூறியது. காரணம், பிள்ளைகளை நம் ஊரில் வளர்த்தால்தான் அவர்கள் அங்கே உள்ள நல்லது கெட்டதைப் புரிந்துகொள்ள முடியும் என்று நானும் என் மனைவியும் அடிக்கடி பேசினாலும், முடிவெடுக்க முடியாத குழப்பத்திலேயே இருந்தோம். அதற்கான தீர்வாகவே இக்கடிதம் வந்ததாக மனமார ஏற்றுக் கொண்டோம்.
​இருப்பினும் இன்னும் இரண்டு மாத கால அவகாசமே இருந்ததால் பிப்ரவரிக்குள் காலி செய்ய வேண்டும். நான் மார்ச் மாத இறுதிவரை சம்பளத்துடன் கூடிய நீட்டிப்பு வழங்குமாறு வேண்டினேன். அதை அந்த நிறுவனமும் ஏற்றுக்கொண்டதுடன் மட்டுமின்றி, "திரும்ப வேலை கிடைத்தால் வரலாமென்றும் வேலை கிடைக்கும்வரை விசாவை நீட்டிப்பதாகவும்" கூறியது (இதுவும் யாரும் அவ்வளவு எளிதில் செய்ய மாட்டார்கள்). இப்படியாக 2023 மார்ச்சில் மனைவி மக்களை முதலில் அனுப்பிவிட்டு, நானும் மாத இறுதியில் கிளம்பத் தயாரானேன்.
கடிதம் வந்த உடனேயே முதலில் தெரிவித்தது மரியாதைக்குரிய அந்த ஒரு முக்கிய நபருக்குத்தான் (பெயர் வேண்டாமென்று நினைக்கிறேன்). அவர் கூறிய வார்த்தைகள்தான் நான் இதுவரை வேலை பார்த்தமைக்கான அங்கீகாரம் என்று நினைக்கிறேன். "ராஜா கவலைப்படாதே... உன்னை இழந்தால் கத்தார் ஒரு நல்ல பொறியாளரை இழந்ததாக அர்த்தம். உன் CV-யை அனுப்பி வை" என்றார்.
​இங்கே கத்தார் என்பது மிகச் சிறிய மார்க்கெட் உள்ள நாடு. அதிலும் நான் சார்ந்த வேலை என்பதில் போட்டி நிறுவனங்களும் வெகுக்குறைவே (இவரை விட்டால் அவர், அவரை விட்டால் இவர்). எனவே உள்ளுக்குள்ளேயே மாறுவதென்பது அவ்வளவு எளிதல்ல. பையன் ஒன்பதாவது போகப்போகிறான், இந்த நேரத்தில் இப்படி ஆகிவிட்டதே என்று எண்ணியே அங்கும் இங்குமாக விண்ணப்பித்துக் கொண்டே இருந்தேன்.
​வேலை தேடும் முயற்சியில் நல்ல சம்பளத்தில் கிடைக்க வேண்டிய ஒரு வேலையும் கடைசி கட்டத்தில் வேறு யாருோ ஒருவருக்கு முக்கியமான நபரின் சிபாரிசால் கிடைக்கவில்லை. கண்டிப்பாக வருமென்று எதிர்பார்த்த மற்றுமொரு நிறுவனத்திலிருந்தே பதிலே வரவில்லை. கடைசியில் ஏதோ ஒரு துணிச்சலில் நானே அந்த நிறுவனத் தலைவருக்கு ஒரு ஐந்து நிமிடம் பார்க்க மட்டும் அனுமதி வேண்டி மின்னஞ்சல் செய்தேன். அவரும் வரச் சொன்னார். மிகுந்த தைரியத்தோடு என்னைப் பற்றியும் நான் செய்த வேலைகளைப் பற்றியும் விவரித்தேன். அவருக்கு மிகவும் பிடித்துப்போனது. இருப்பினும் சேர்வதற்கான கடிதம் மட்டும் வரவே இல்லை.
ஊருக்குப் போய் பசங்களுக்கான பள்ளிகளைத் தேடி, அதன் அருகிலேயே வாடகைக்குப் வீடு பார்த்து எல்லாம் செய்துவிட்டு, அம்மா, அப்பா, மனைவி, பசங்களென கடமைகள் பற்றிய பல சிந்தனைகளுடன் வேலைக்காகக் காத்திருந்தேன். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர், சாய்பாபா என்று ஒவ்வொரு கோவிலாகப் போய்வந்தேன்.
​ஒரு நாள் சாயிபாபா கோவிலில் 200 பேர் வரிசையில் நின்றிருந்தனர். ஏனோ தெரியவில்லை, அந்தக் கூட்டத்தில் என்னை மட்டும் அழைத்து ஒரு சாமிக்குப் போட்டிருந்த ஆளுயர மாலையை அணிவித்தனர். அப்போதே மனைவியிடம் கூறினேன், "இன்று ஏதோ ஒரு நல்ல செய்தி வரப்போகிறது" என்று. சொன்னது போலவே அன்றே கத்தாரிலிருந்து வந்தது அந்த அழைப்பு. "எப்போது வருகிறீர்கள்?" என்றார்கள்.
​இதோவென்று உடனேயே அடுத்தப் பயணத்திற்குத் தயாராகி, 20 மே 2023 அன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தேன்.​மீண்டுமோர் புதிய பயணம் தொடங்கியது.
​(#கத்தாரில்_நான் என்னும் எனது இந்த முதல் பகுதி இத்தோடு முடிவடைந்தது உறவுகளே... இதுவரை எம்மோடு பயணித்த அனைவருக்கும் நன்றியைக் கூறிக்கொண்டு, தற்காலிகமாக இத்தொடரிலிருந்து விடைபெறுகிறேன்! நன்றி! நன்றி!!)
...... முற்றும் (தற்காலிகமாக)......
✍️செ. இராசா

























21/07/2026

கத்தாரில் நான் - 21

 


















கரோனா வேகம் உலகையே உலுக்கிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட அனுபவத்தை யாரும் மறந்திருக்க முடியாது. கிட்டத்தட்ட ஒரு ஆண்டிற்கும் மேலாகக் கிளைண்ட் அலுவலகத்திற்குப் போகாமலே வீட்டிலிருந்தோ அல்லது வெளியிலிருந்தோ அனைவரும் ஆன்லைனிலேயே பேசி வேலை செய்தது புதிய அனுபவமாக இருந்தது. இருப்பினும், அது குழந்தைகளின் விஷயத்தில் மிகவும் மோசமான அனுபவத்தையே கொடுத்தது. அவர்களின் படிப்பில் மதிப்பெண் குறைவதற்கும், கைப்பேசிக்கு அடிமையாகும் சூழலையும் அதுவே உருவாக்கியது.
​நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஊருக்குப் போய்விட்டுத் திரும்பி வந்தால், ஏழு நாட்கள் ஓட்டல்களில் தனிமைப்படுத்திக் கொண்டு, கரோனா தொற்று இல்லை என்றால்தான் வீட்டிற்கு வர முடியும் என்கிற விதியும், அதற்கான செலவும் மிக மிக அதிகமாக இருந்ததை எப்படியோ தாங்கிக் கொண்டோம். இந்தச் சூழலில்தான் மேலாளரின் அழைப்பு வந்தது. "ராஜா... ஆட்குறைப்பில் உன்னை முடிந்தவரை காப்பாற்றவே பார்க்கிறோம், ஆனால் மாற்று வேலைகளையும் செய்ய சம்மதமா?" என்றார் (கொஞ்சம் சம்பளமும் குறைப்பதாகச் சொன்னார்கள்; நல்லவேளை, பிறகு குறைக்கவில்லை).
​வேறு என்ன செய்வது? சம்மதம் என்றேன். எனக்காக இந்த மேலாளரும் என்னுடைய முதன்மைத் துறையில் (Core field) வேலை கிடைப்பதற்காகப் பலமுறை முயற்சி செய்தார். ஆனால் காலம் கைகூடவில்லை. முன்னர் சம்பளத்தையும் இருமுறை உயர்த்தியுள்ளார். சலுகைகளையும் கூடவே தந்துள்ளார். அவர் அப்படிச் சொல்லும்போது நான் என்ன சொல்ல?! சரி என்றேன். அப்படி ஒத்துக்கொண்டது மிகவும் தப்பாகப் போனது. அதைப் பார்ப்பதற்கு முன்பு, இந்தக் கரோனா காலத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியான செய்தியை முதலில் சொல்லிவிடுகிறேன்.
என்னை 2003-ல் வேலைக்கு எடுத்த பெரியகருப்பன் பெரியப்பா, 2021 ஏப்ரல் மாதத்தில் கரோனாவால் மரணித்துவிட்டார். 2003-ல் ஏற்பட்ட பயணம் தோல்வியில் முடிந்ததால் மீண்டும் கத்தார் திரும்பி வந்தபோது, ஆரம்பத்தில் என்னோடு பேச மறுத்துவிட்டார். ஆனாலும், நான் திருமணம் செய்து வந்தவுடன் அவர்தான் தந்தை ஸ்தானத்தில் நின்று, வளைகாப்பு முதல் பிரசவம் வரையிலும் துணையாக இருந்து, பையன் பெண் இருவரின் பிறந்த நாள்களிலும் வந்து வாழ்த்தி, அபுஹாமரில் உள்ள வீட்டை அமைத்துக் கொடுத்து, அவ்வப்போது வந்து வீட்டில் உள்ள பிளம்பிங் பிரச்சினைகளைச் சரிசெய்து கொடுத்தென தூணாக இருந்த பெரியப்பாவிற்கும் எனக்கும் ஒரே ஒரு முறை சின்ன வருத்தம் வந்தது என்று நினைக்கிறேன். அதுவும் என் தந்தையார் மூலமாக அவரின் இரண்டாவது மகனுக்கு வேலை வாங்கிக் கொடுப்பது சம்பந்தமாகத்தான். அதில் யார் மேல் தப்பென்று உண்மையில் தெரியவில்லை; ஆனாலும் பெரியப்பா என்னிடம் அதைக் காட்டிவிட்டார்.
​இருப்பினும் அவர் பெரியவர் என்பதால் அதையெல்லாம் நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர் 'அஹ்மத் மருத்துவமனையில்' கரோனாவால் சேர்க்கப்பட்டுள்ளார் என்கிற செய்தி வந்தவுடன், அவரைத் தொடர்புகொள்ளத் தொடர்ந்து முயற்சித்தேன்; கிடைக்கவே இல்லை. பிறகு மேலமங்களத்தைச் சேர்ந்த, காரைக்குடியில் வாழும் (மீனாட்சி டெக்ஸ்டைல்ஸ்) பாஸ்கரன் அண்ணா மூலமாக அவர் இறந்துவிட்ட செய்தியைக் கேட்டுப் பதறிப்போய், வீட்டில் எவ்வளவோ தடுத்தும் கேட்காமல் ஓடினேன் (இதை எழுதும்போதே மனம் ஒரு மாதிரி ஆகிறது).
போய் பார்த்தால், ஒரு பெட்டியை இழுத்து "இவரா?" என்றார்கள்; உடைந்து போய்விட்டேன்.
​அவருடைய மூத்த மகன் சுந்தரம் அண்ணா, பாஸ்கரன் அண்ணா, நான் என மூன்று பேர்தான் இருந்தோம். சவப்பெட்டியைத் தூக்க நான்கு பேர் வேண்டும். அருகே இருந்த ஓட்டுநரையும் அழைத்து ஆம்புலன்ஸில் ஏற்றினோம்.
​இங்கே வெளிநாட்டில் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு இடுகாட்டில் புதைக்க ஒதுக்கப்பட்ட இடம் என்பது தோகாவில் இருந்து துக்கான் வரை ஏறக்குறைய 80 கி.மீ தூரம் ஆகும். உடலைப் பெற்றுப் புதைக்க வேண்டுமெனில் ஏகப்பட்ட ஆவணங்களை வாங்க வேண்டும். மருத்துவமனை, தூதரகம், காவல் நிலையம், இடுகாடு, ஆம்புலன்ஸ் என... அனைத்தையும் சமாளித்து இறுதியாகப் பெரியப்பாவை இடுகாட்டில், ஏற்கனவே இதேபோல் (கொரோனா என்பதால்) குழிகள் வெட்டித் தயாராக வைத்திருந்த மற்றும் வந்துகொண்டே இருந்த உடல்களுக்கு நடுவே, எங்களுக்கு வாழ்வளிக்க வழிசெய்த அந்த உயர் ஆத்மாவின் உடலைக் கத்தாரின் இடுகாட்டில் புதைத்துவிட்டு, கனத்த இதயத்தோடு வெளியேறினோம்.
இதற்குமேல் என்ன சொல்வது?! இருந்தாலும் சொல்கிறேன்...

கத்தாரில் நான் - 20

 





































சரி, மீண்டும் கதைக்கு வருவோம். ​ஏற்கனவே குறிப்பிட்டது போல, சௌதி நிறுவனம் வழங்கிய இறுதித் தொகையைக் கொண்டு காரைக்குடியில் ஒரு இடம் வாங்கி, புதிய நிறுவனத்தில் கிடைத்த சம்பளத்தைச் சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக வீடு கட்டி குடிபுகுந்தோம். ஏற்கனவே மதகுபட்டியில் வீடு கட்டியபோது, பால்யகால நண்பர் என்ற நம்பிக்கையில் ஒரு தேவகோட்டை பொறியாளரிடம் வேலையைக் கொடுத்தேன். அந்த அனுபவம் எனக்கு ஒரு நல்ல (ஏமாற்றப்) பாடத்தைப் புகட்டியது. அதனால், "பணம் சற்று கூடுதலாகச் செலவானாலும் பரவாயில்லை, தகுதியான பொறியாளரிடமே வேலையைக் கொடுக்க வேண்டும்" என்று உறுதியாக இருந்தேன். அதன்படியே ஒரு சிறந்த பொறியாளரை அணுகினோம். அவர் எனது உறவினர் என்பது மட்டுமல்ல, 'வாழ்க வளமுடன்' SKY யோகாவின் ஆசிரியராகவும் இருந்தது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம். நாங்கள் கேட்ட அதே பட்ஜெட்டில், தரமான முறையில் வேலையை முடித்து சாவியைக் கையில் கொடுத்தார்.
​சரி, மீண்டும் கத்தார் பயணத்திற்கு வருவோம். இம்முறை என் மனைவி மூலமாக வந்த ஒரு இளைஞரை நல்ல வேலையில் அமர்த்தினோம். அவர் உண்மையில் நல்ல பையன்தான், ஆனால் இளமையின் வேகத்தில் காதலில் விழுந்திருந்தது எங்களுக்குத் தெரியவில்லை. அவர் பணி முடித்து ஊருக்குத் திரும்பியபோது, அவருக்குச் சேர வேண்டிய சம்பளம் உள்ளிட்ட அனைத்துத் தொகைகளையும் முறையாகக் கொடுத்துவிட்டே அனுப்பி வைத்தோம். ஆனால், அவர் சம்பளமே தராத நிறுவனத்தில் சேர்ந்துவிட்டதாக உறவினர்கள் மத்தியில் பேச்சுகள் கிளம்பின. "அடப்பாவிகளா..." என நொந்து கொண்டோம். சம்பளம் எங்கே சென்றது என்பது அந்தக் கடவுளுக்கே வெளிச்சம்! பரவாயில்லை, அவர் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும்.
​இந்தச் சமயத்தில்தான் என் கல்லூரி நண்பர் செல்வாவும் கத்தாருக்கு வந்தார். அவருக்குத் திரைப்படப் பாடல்கள் அத்துப்படி. அவரோடு நான் கத்தாரில் சுற்றாத இடங்களே இல்லை. வீட்டில் சிறு சிறு சண்டைகள் வரும்போதெல்லாம், அவர்தான் எனக்கு ஆறுதலும் அறிவுரையும் கூறுவார். "டேய் ராஜா... பொண்டாட்டிட்ட தோத்தவன் வாழ்க்கையில ஜெயிச்சவன்டா" என்று அவர் உதிர்க்கும் அனுபவ மொழிகள் எனக்குப் புத்துணர்ச்சி தரும். "குடும்ப அமைதியே ஆன்மீக முன்னேற்றத்தின் அளவுகோல்" என்று கத்தார் மனவளக்கலை மன்றத்தில் நான் கற்ற பாடங்கள், என் வாழ்வின் பிணக்குகளைக் குறைக்க உதவியது. மேலும், புதிய நிர்வாகத்தில் இருந்தபோது, மத்தியப் பிரதேசத்திலிருந்து ஓய்வுபெற்று வந்த குலாம் நபி கான் (லேட்) ஒரு உயர் அதிகாரி நண்பர், வாழ்க்கையைச் செதுக்கும் பல அறிவுரைகளை வழங்கினார். "வீட்டுப் பண நிர்வாகத்தை மனைவியிடமே ஒப்படைத்துவிடு; அவர்கள் திறமையாகக் கையாள்வார்கள்" என்று அவர் கூறியது சாதாரண விஷயம் அல்ல. அந்த அறிவுரைதான் இன்று சென்னையில் என் பிள்ளைகளின் எதிர்காலத்தை அவர்கள் சிறப்பாக வழிநடத்த உதவியாக இருக்கிறது. இப்படி எம் வாழ்க்கையைச் செதுக்கிய யாரையும் நான் என்றும் மறந்ததில்லை (இதை அவர்களுக்கு இதன்மூலம் நான் செலுத்தும் நன்றியாகக் கொள்க)
நிர்வாகத்தில் 'டாபர்மேன்' குழு வெளியேறிய பிறகு, வளர்ச்சியில் இருந்த தடைகள் நீங்கி நான் நல்ல முன்னேற்றம் கண்டேன். அந்த நேரத்தில் முகநூலில் 'தமிழ்ப் பட்டறை', 'தமிழ்ச் சோலை' போன்ற குழுமங்களில் கவிதைப் பயணம் சூடுபிடித்தது. என் வீட்டிலேயே ஒரு பகுதியில் தங்கிப் பாடல்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்த மலையாள நண்பர் காலின் தாமஸின் நட்பும் கிடைத்தது. அதன் மூலமாகப் பாடல்கள் இயற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்தப் பாடல்களில் ஒன்று, எனக்கு சினிமா வாய்ப்பையும் பெற்றுத் தந்தது. இப்படி வாழ்க்கை நன்றாகவே போய்க்கொண்டிருந்த நேரத்தில் தான், 'கொரோனா' என்னும் சூறாவளி மெல்ல மெல்ல சம்பளத்திலும் கை வைத்தது. ஏற்கனவே சலுகைகள் அனைத்தையும் சில வருடங்களாக நிறுத்தியும் குறைத்தும் வைத்திருந்த நிர்வாகம் Market நிலவரத்தால் புதிய வேலைகளும் கிடைக்காமல் (அல்லது குறைந்தும்) போனதால் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியது. ஒவ்வொரு லிஸ்ட் வரும்போதும் அனைவருக்குமே பக்..பக் என்றிருந்தது. ஒருநாள் மேலதிகாரியிடம் இருந்து அழைப்புவர மனதைத் திடமாக்கிக் கொண்டு அவரின் அறையை நோக்கிக் கிளம்பினேன்.