நல்ல நகைச்சுவையால்
.......நாளும் மகிழ்வித்துத்
தொல்லை களைகின்ற
......சூட்சுமமே- எல்லையின்றி
செல்லும் இடமெல்லாம்
.......சிந்தனையைத் தூண்டிவிடும்
நல்லதோர் நண்பருக்கெம்
.......வாழ்த்து!
நல்ல நகைச்சுவையால்
.......நாளும் மகிழ்வித்துத்
தொல்லை களைகின்ற
......சூட்சுமமே- எல்லையின்றி
செல்லும் இடமெல்லாம்
.......சிந்தனையைத் தூண்டிவிடும்
நல்லதோர் நண்பருக்கெம்
.......வாழ்த்து!
அவன் எப்போதுமே அப்படித்தான். தனக்கான நேரத்தில் ஒரு நிமிடம் கூட வீணடிக்க மாட்டான். நிமிடம் என்றா சொன்னேன்...இல்லை இல்லை ஒரு நொடித்துளியைக் கூட வீணடிக்க மாட்டான் என்று சொல்வதே சரியாக இருக்கும். அவன் அவனுக்கான தேடலில் அவன் வகுத்த கொள்கைகளில் அவனுடைய வெற்றிக்கு மூலமுதல் காரணமாக இருப்பதாய் அவன் நம்புவதே இந்த நேர மேலாண்மையைத்தான். அப்படித் திட்டமிட்ட அவனது பயணத்தில் அவன் திட்டமிடாத ஒன்றாய் நடந்த ஒரு நிகழ்வையே இங்கு எழுத நினைக்கின்றேன்.
அன்று இரவு அவன் சென்னையில் இருந்து பேருந்தேறி அவனுடைய சொந்த கிராமத்தை நோக்கிப் பயணித்தான். எப்போதும் போலவே காலையில் அவனை அழைத்துச் செல்ல அவன் தம்பி காத்திருந்தான். இறங்கிய சற்று நேரத்தில் அவன் வீட்டைச் சென்றடைந்தான். அவர்கள் வீட்டுநாய் ஒரு மாதிரியான முனகலோடு அவனை அணுகியபோது சற்றே சுதாரித்துக் கொண்டவனாய்க் கத்தினான். அவன் அலறள் சப்தம் கேட்டு ஓடிவந்த அவனுடைய தாய் அந்த நாயைக் கண்டித்தவாறே அவனை வாஞ்சையுடன் வரவேற்றாள். சற்று நேரத்திலேயே பல் தேய்த்து யோகா செய்து குளித்து அவனும் தயாரானான். உடனேயே காலை டிபனும் தயார்செய்து அம்மா அவனைச் சாப்பிட வற்புறுத்த, அந்த நேரத்தில் தம்பியும் சுடச்சுட போட்ட வடையும் அப்பமுமாய் கடையில் இருந்து வாங்கி வந்திருந்தான். இட்லியும் அம்மா வைத்த அருமையான தக்காளி சட்னியும் வடையும் அவன் காலைப் பொழுதை மிகவும் மகிழ்ச்சிக்குரியதாக்கியது.
அந்தநேரத்தில் மாடி அறையில் இருந்த அப்பாவும் இறங்கி வந்து அவனை நலம் விசாரித்தார். அவன் எப்போது ஊர்வந்தாலும் செல்லும் கோவில்களுக்குச் சென்று வருவதாகக் கூறினான். சரி... பைக்கில் வேண்டாம் ..காரில் போங்க என்று தந்தையார் கூறினார். அவன் அதைக் காதில் போடவே இல்லை. மதியம் சமைக்க மீன் வாங்கி வருமாறு அம்மா தம்பியிடம் கேட்டுக் கொண்டார்கள். சரி என்று இருவரும் பைக்கில் ஒவ்வொரு கோவிலாகச் சென்றார்கள்.
முதல் கோவிலில் சாமி கும்பிட்ட தருணமே அவன் தம்பி அம்மா மீன் வாங்கிக் கொடுக்கக் கூறியதை ஞாபகப்படுத்தி வீட்டுக்குப் போலாமா என்றான். ஆனால் அவன் அதைக் கேட்காமல் அடுத்த கோவில் போகலாம் என்றான். ஆம் அது அவர்களின் குலதெய்வம் கோவில். அங்கே அவர்கள் சென்ற அந்தத் தருணம்தான் கோவில் பூசாரியும் வந்திருந்தார். அதை அவன் மிகப்பெரிய பாக்கியமாக ஏற்று கோவிலின் உள்ளே சென்றான். கோவிலில் தொங்கிய அனைத்து நாள் காட்டிகளும் கிழிக்கப்படாமல் இருந்ததைப் பார்த்து இருவரும் கிழித்து கிழித்து சரிசெய்து தீபாராதனை கண்டு அங்கிருந்து முழுமனதோடு விடைபெற்றார்கள்.
அப்போது அவன் அவன் தம்பியிடம் இருந்து தான் ஓட்டுவதாக பைக்கைக் கேட்டான். அவன் தம்பி இல்லையண்ணா உனக்கு இது சரிவராது எனக்குத்தான் சரிவரும் என்றும் கூறியுள்ளான். அட போடா...நாங்க பார்க்காத வண்டியா என்று கூறிவிட்டு அவனே ஓட்டியுள்ளான். அவர்கள் சென்ற கோவில் ஒரு காட்டுக்குள் இருக்கும் கோவில். ஆனாலும் அது தெரியாதவாறு நல்ல வசதி செய்திருந்தார்கள். இருபதடி உயர வரப்பில் குறுகலான பாதை....ஒருபக்கம் ஏரிபோல் நீர் இருக்கும். மறுபக்கம் வயல்வெளி.....இரண்டு பக்கமும் புளிய மரங்கள் நிறைந்த இடம். இப்படி இயற்கை எழில் மிகுந்த பாதையைக் கடந்தவாறே இவர்கள் பயணம் தொடர்ந்து ஒரு புதிய சாலைவேலை நடைபெறும் இடத்தை வந்தடைந்தது.
அதில் ஏறிய தருணமே அவன் தம்பி அவனிடம் இந்த கண்ணேறு இருக்கிறதே...என்று பேச ஆரம்பித்தான். அவனும் அவன் பார்வையில் கண்ணேறு என்றால் என்னவென்று சொல்லிக்கொண்டே வந்தான். அடேய்..கண்ணேறுன்னா என்னங்குற....நம்ம வளர்ச்சிய பார்த்து.....இவன்பாரு எப்படித்தான் இப்படி இருக்கான் எப்படிலாம் செய்றான்..அப்படின்னு ஆச்சரியப்படுறதோட நிறுத்தாமல் சிலர் அது பொறுக்க மாட்டாமல் நினைக்கிற ஒரே எண்ண அலைதான்னு....சொல்லும்போதே........அப்போது திடீரென்று அவன் தம்பி... அண்ணா பள்ளம் பள்ளம் பார்த்து பார்த்து என்று பதறினான். அவன் என்ன செய்வதென்று தெரியாமல் பிரேக் போட்டால், பிரேக் பிடிக்கவில்லை...உடனே முன் பிரேக்போட்டால் அப்படியே வண்டி ஒரு 15 அடி உயரம் விண்ணோக்கிப் பாய தரையில் கிடைமட்டமாக சீறி அவன் மேலயே விழுந்து... அவன் தம்பியும் அவன்மேல் விழுந்து மூச்சு விட முடியாமல் அவன் திணறி அந்த நிமிடம்.....அந்த நொடி....அவன் அவனையே மறந்து தன் மனைவி பிள்ளைகளை நினைந்தவாறே ....இறைவா என்று விழுந்தான். அவன் தம்பி ஏது செய்வதென அறியாமல் பதறிப்போய் இருக்க அவனோ அவன் தம்பியின் மடியில் படுத்தவாறே...கடவுளே என்னை காப்பாற்று என்று உயிர்ப்பிச்சை கேட்டான்....அவன் கும்பிட்ட தெய்வம் கைவிடவில்லை. மனித உருவில் பலரையும் அனுப்பிவைத்து அவனைக் காப்பாற்றியதை இங்கே எழுத வேண்டுமா என்ன?
என்னதான் நீங்கள்
சாட் என்று சங்கமித்தாலும்
டேஸ்ட் என்று வந்தால்
அது நம்ம பணியாரம்தான்..
தலையில் உடைத்து
மசாலாவைச் சொருகி
பானியை ஊற்றி
வாயைப் பொளந்து
பொசுக்கென்று போடுவதே
பானி பூரி என்றால்..
குளிக்குள் உருண்டு
எண்ணெயில் புரண்டு
கொஞ்சமாய்ச் சிவந்ததை
சட்னியில் நனைத்து
நாக்கின்மேல் வைத்து
ரசித்து ருசிக்கும் சுகமிருக்கிறதே..
ஆகா...
.......ஆகா...
..,...........அது...
அட...
பானி பூரிகளுக்குத் தெரியுமா
பணியாரத்தின் அருமை!
#கவிதா:
கொஞ்சம் பொறுத்தா
......குறைஞ்சாநீ போயிடுவ
நெஞ்சம் பதறுதுபார்
.......நிக்காமல்- விஞ்சிவிஞ்சிக்
கத்திக் கரைஞ்சீன்னா
.......கைச்சோறும் கிட்டாது
புத்தில ஏத்திட்டு
.......போ!
#காக்கா:
என்னக்கா என்னநீ
....ஏதேதோ பேசுற?
முன்னைப்போல் இல்லாம
....நோவுற- அன்பக்கா
காக்கான்னா மட்டமா?!
.....கைச்சோறும் நட்டமா?!
ஆக்கியத போடுக்கா
.....அறிந்து!
#கவிதா
கட்டுன ஆளப்போல்
....காவியமாப் பேசுற!
பட்டுன்னு போகாம
....பாடுற!- வெட்கமின்றி
அந்தாளும் இப்படித்தான்
....அல்வாபோல் பேசியே
இங்கவந்து விட்டுட்டான்
....ஏன்?
#காக்கா
அண்ணென்ன செய்வார்க்கா?!
.....ஆனாலும் பாவம்தான்
எண்ணியிதைப் பார்த்தாக்க
.....என்னசொல்ல?!- உண்மையில
காக்காவே மேல்போல
....காசுபணம் தேவையென
சாக்கெல்லாம் சொல்வதில்லை
....தான்!
#கவிதா
இக்கரைக் கக்கரைபோல்
......எல்லாமே இப்படித்தான்
சிக்கலில்லார் யார்சொல்லு
.....தெய்வமே- அக்கறையாய்
நீயாச்சும் வந்திங்கே
....நேரடியாக் கேக்கிறப்போ
தீயாவும் போகும்
.....தெளிந்து!
செ. இராசா
காலமது போகிறது கற்பனையும் காய்கிறது
காரியம் ஆக வில்லையே- கந்தய்யா
காரணம் புரிய வில்லையே?!
ஞாலமது கேட்கிறது நாணமது தேய்கிறது
நேரமும் கூட வில்லையே- என்னய்யா
நேருமோ தெரிய வில்லையே?!
சாலமது வெல்கிறது சட்டனெவே செல்கிறது
தாமதம் ஆவ தில்லையே- ஏனய்யா?
தன்வினை போக வில்லையே!
மூலமது வேகிறது முன்னேறப் பார்க்கிறது
மூட்டவும் தீபம் இல்லையே- வந்தய்யா?
மூட்டினால் நானும் முல்லையே!
நாட்டாமை செய்யுறான்
.....நாகரிகக் கோமாளி
ஆட்டமாய் ஆடுறான்
....ஆனாலும்- மாட்டுவான்
அப்பவச்சு நாயை
....அடிப்போம் அதுவரைக்கும்
இப்படித்தான் செய்வான்
....இவன்!
சாத்தியம் ஆகுமா?
....சைத்தான் விலகுமா?
ஆத்திரம் வெல்லுமா?
.....ஐயமேன்?! - சாத்தியமே!
ஆதிக்க சக்தியெல்லாம்
.....அந்தரத்தைக் காணலையா?!
நாதியற்றுப் போவான்பார்
.....நைந்து!
செத்த பயலால
....சிக்கலிப்போ வந்தாலும்
செத்த பொறுமய்யா
....தீர்வுவரும்- அத்தனைக்கும்
ஆப்புவைக்க ஆள்வருவான்
....அன்னைக்குப் பாருமய்யா
மாப்ள வருவான்
.....நயந்து!