17/10/2024

கள்ளியில கிறுக்கிவச்ச

 





(ஒரு சூழலுக்காக எழுதிய பல்லவி)

கள்ளியில கிறுக்கிவச்சக்
குறிப்பு சொல்லுமே..
கண்டயிடம் அத்தனையும்
கிசுகிசுக்குமே..
ஊரேவொரு மாதிரியா
உத்துப் பாக்குமே..
யாரோவொரு ஆளைப்போல
குத்திக் காட்டுமே...

அப்போதெல்லாம் ஆயிரம் தொல்லை
ஆனாலுமே கலங்கியதில்லை..
தப்பாயெல்லாம் தாண்டிடும் எல்லை
எங்களோட காதலில் இல்லை...

(வேறு)
என்ன சொல்லி என்னவாக
நெஞ்சுக்குள்ள மின்னல்போல...
செஞ்ச தெல்லாம் வந்துபோக
எண்ணியெண்ணி இன்னும் வாழ...

✍️செ.‌இராசா

15/10/2024

நாங்க சொன்னா இங்கே யாரு நம்புறானுங்க

 

நாங்க சொன்னா இங்கே யாரு
நம்புறானுங்க- அதையே
நீங்க சொன்னா உண்மைதான்னு
பம்முவானுங்க...

காசு தந்தா வியூவ்ஸ ஏத்தி
கணக்கக் காட்டுறான்..
ரீல்சு வந்தா பேன்ச கூட்டி
நிலைய மாத்துறான்..

தம்பு நெய்ல மாத்திப்போட்டாத்
தள்ளி விடுகிறான்...
வம்பு செஞ்சா டிரெட்டிங்காக்கி
ஃபேமஸா(க்)குறான்..

நாங்க சொன்னா............

12/10/2024

இது.. என்னா ஹேரு ஸ்டைலு

 



புள்ளீங்கோ புள்ளீங்கோ
யாருங்கோ புள்ளீங்கோ

இது..
என்னா ஹேரு ஸ்டைலு- இதுக்கு
முன்னே எல்லாம் பெயிலு!
ஒன்னா நம்பர் பிளேடு- இதுல
விட்டாத் தெரியும் கோடு!

ஈபில் டவரு சார்ப்பு- நாங்க
வச்சா தெரிக்கும் ராப்பு!
சொம்மா இல்லை மாம்சு- இங்கே
எல்லாம் எங்க ஃபேன்சு!

11/10/2024

சந்தக் கட்டில் பாட்டெழுதி

 


சந்தக் கட்டில் பாட்டெழுதி
சொந்த மெட்டைப் போட்டமைச்சுத்
தந்தபாடல் போனதெங்கே வடிவேலா!
வந்த மெட்டில் பாட்டெழுதி
சொந்தப் பாட்டை போலமைச்சு
தந்ததெல்லாம் ஜெயிக்குதிங்கே வடிவேலா!
பாத்துபாத்து பாத்துசெஞ்சும்
மாத்திமாத்தி மாத்திசெஞ்சும்
வேர்த்ததெல்லாம் விரையந்தானோ வடிவேலா!
காத்து மேல காத்தடிக்கும்
காத்த வச்சுக் கூத்தடிக்கும்
சூத்திரந்தான் ஜெயிச்சிடுமோ வடிவேலா!

06/10/2024

வீட்டில் இருந்தவனோ



வீட்டில் இருந்தவனோ
....வீட்டைத் துறந்தகணம்
வீட்டோடு விட்டான்
....விடையன்றோ- ஓட்டமாய்
ஓட்டிக் களித்தவனோ
....ஓட்டி முடித்தகணம்
பூட்டினான் நட்பைப்
....புதைத்து!
கேட்பாரும் யாருமில்லை
...கேட்டாலும் நீதியில்லை
தீட்டென்றே எண்ணுபவர்
...தேவையில்லை- வாட்டமில்லை
உண்மைக்குக் காலமில்லை
...உள்ளார்ந்த பாசமில்லை
கண்ணிருந்தும் பார்வையில்லை
...காண்!

எத்தனை சோதனை

 

எத்தனை சோதனை
....எத்தனை வேதனை
..........என்னதான் ஆச்சுதாயே?
எத்தனை ஆயினும்
.....ஏற்றுவேன் பாடலை
..........என்றெனை மாற்றுதாயே!
பித்தனைப் போலவே
....பிதற்றிடும் போக்கிலே
......பேரணை போடுதாயே‌‌!
வித்தகன் வெல்லவே
.... வெற்றிகள் சேரவே
.......வேரென மாறுதாயே!
கற்றது கொஞ்சமே
‌..கற்பனை விஞ்சுமே
.... கருணையைக் காட்டுதாயே!
அற்பனுக் கொருமுறை
... அதிசயம் நிகழுமே
...... அதிலெனைச் சேருதாயே!
சுற்றமும் மாறுதே
.... சூழலும் மாறுதே
........தொடருமோ மாயைதாயே!
மற்றவர் போற்றவே
.....நற்றமிழ் ஏற்றவே
........வையுமே எம்மைநீயே!

03/10/2024

நாத்திகனும் ஆத்திகனும்

 

நாத்திகனும் ஆத்திகனும்

கற்பனையில் இரண்டுமாய் நான்
நேரிசை வெண்பாவில்

நாத்திகன்-1
இறைவன் எனப்போற்றும்
.....என்னருமை நண்பா
இறைவனவன் உண்டென்றால்
.....எங்கே? - உறையுமிடம்
இல்லாத ஒன்றை
.....இருப்பதாய்ச் சொல்வதுதான்
நல்லோர்க் கழகா
.....நவில்!

ஆத்திகன்-2
இல்லாத ஒன்றாய்
.....இயம்புகின்ற நண்பரே
கல்லாத நூல்பற்றி
....கற்றதுபோல்- சொல்வீரோ?
உள்ளதென யாமுணர்ந்த
.....உண்மையைச் சொல்லுகின்றேன்
துள்ளுகின்றீர் ஏனோ
....தொடர்ந்து?!

நாத்திகன்-3
இல்லை இருக்குதென
...ஏதேதோ சொல்லாமல்
இல்லை எனச்சொல்வேன்
...எப்போதும் - இல்லையேல்
எங்கே இருக்குதென
...என்முன்னே காண்பித்தால்
தங்கள்சொல் கேட்டிடுவேன்
... சார்ந்து!

ஆத்திகன்-4
ஆறும் உறையும்
....அதிகக் குளிரிருந்தால்;
மாறி உருகும்
.....மறுபடியும் - ஆறெனவே
சூடு மிகையானால்
...சூக்குமமாய் ஆவியென
ஊடும் இறைவனைப்பார்
....ஓர்ந்து!

நாத்திகன்-5
என்னப்பா சொல்லுற
....எல்லாம் அறிவியல்பா?
உன்னைப்போய் கேட்டா
....உளறாம- என்னசொல்வ?!
சுத்தி வளைக்காம
....சொல்லுப்பா எங்கிட்ட
எத்திசையில் உள்ளான்
....இறை?

ஆத்திகன்-6
துரும்பிலும் உள்ளோன்;இத்
....தூணிலும் உள்ளோன்
அருவமும் ஆனோன்
...அணுவாய்- உருவா(க்)கி
நீக்கமற எங்கும்
...நிறைந்துள்ளான் என்பதனால்
தீர்க்குமுடன் பார்ப்பாய்த்
...தெளிந்து!

நாத்திகம்-7
என்னதான் சொன்னாலும்
....ஏற்க முடியவில்லை
சின்ன அணுகூறும்
...சித்தாந்தம் - என்றாலும்
ஊழ்வினை பற்றி
... உயர்ந்தநூல் சொல்லுவதால்
ஆழ்ந்தறிய வேண்டும்தான்
....ஆம்!

ஆத்திகம்-8
வந்தாயா ஓர்வழிக்கு
....வள்ளுவம் சொல்வதென்ன?!
சிந்தையில் ஏற்றிப்பார்
....சீர்பெறலாம்- தந்தையர்போல்
ஈரறம் போற்றி
...இயன்ற பொருளீட்டி
பேரின்ப வீடடைந்தால்
...பேறு!

நாத்திகம்-9
இறையென்ற ஒன்றிற்குள்
...இத்தனை உண்டா?
மறைபொருள் கண்டிடவா
...மார்க்கம்- நிறைவாய்
இறையென்ற தத்துவத்தை
...யாமே அறிய
பறைந்தால் மகிழ்வேன்
...பகிர்!

ஆத்திகம்-10
நான்யார் எனவுன்னை
...நன்றாகக் கேட்டுப்பார்?
நான்நான் எனச்சென்றே
...நண்குணர்வாய்- ஈன்றவனை
ஆழ்ந்துள்ளே கண்டபின்னே
...ஆதியார் என்றறிந்தால்
ஊழ்வினையைத் தாண்டும்
....உயிர்!

வரவுக் கேத்த செலவு இருந்தா

 


மெட்டுக்குப் பாட்டு

வரவுக் கேத்த செலவு இருந்தா
பிரச்சினை இருக்காது- அங்கே
பிரச்சினை இருக்காது!

ஒருவொருக் கொருவர் விட்டுக் கொடுத்தா
பிரிவுகள் தோன்றாது- உறவில்
பிரிவுகள் தோன்றாது!

துரும்பென வேணும் கிள்ளிக் கொடுத்தா
வருவது குறையாது- அதிலே
வருவது குறையாது!

இருவினை புரியும் நாடகம் புரிஞ்சா
வரும்வினை வலிக்காது- பெரிதாய்
வரும்வினை வலிக்காது!
.................
(வேறு)

தெய்வம் தங்கும் வீடு
எங்கே இருக்கு?
தெய்வம் தங்கும் வீடு
அன்பில் இருக்கு

இந்த வாழ்வென்ன?
கொண்ட ஊழென்ன?
பாரு கண்ணே...
தேடும் பொருளென்ன
நீ தந்த வினை என்ன?