கற்பனையில் இரண்டுமாய் நான்
நேரிசை வெண்பாவில்
நாத்திகன்-1
இறைவன் எனப்போற்றும்
.....என்னருமை நண்பா
இறைவனவன் உண்டென்றால்
.....எங்கே? - உறையுமிடம்
இல்லாத ஒன்றை
.....இருப்பதாய்ச் சொல்வதுதான்
நல்லோர்க் கழகா
.....நவில்!
ஆத்திகன்-2
இல்லாத ஒன்றாய்
.....இயம்புகின்ற நண்பரே
கல்லாத நூல்பற்றி
....கற்றதுபோல்- சொல்வீரோ?
உள்ளதென யாமுணர்ந்த
.....உண்மையைச் சொல்லுகின்றேன்
துள்ளுகின்றீர் ஏனோ
....தொடர்ந்து?!
நாத்திகன்-3
இல்லை இருக்குதென
...ஏதேதோ சொல்லாமல்
இல்லை எனச்சொல்வேன்
...எப்போதும் - இல்லையேல்
எங்கே இருக்குதென
...என்முன்னே காண்பித்தால்
தங்கள்சொல் கேட்டிடுவேன்
... சார்ந்து!
ஆத்திகன்-4
ஆறும் உறையும்
....அதிகக் குளிரிருந்தால்;
மாறி உருகும்
.....மறுபடியும் - ஆறெனவே
சூடு மிகையானால்
...சூக்குமமாய் ஆவியென
ஊடும் இறைவனைப்பார்
....ஓர்ந்து!
நாத்திகன்-5
என்னப்பா சொல்லுற
....எல்லாம் அறிவியல்பா?
உன்னைப்போய் கேட்டா
....உளறாம- என்னசொல்வ?!
சுத்தி வளைக்காம
....சொல்லுப்பா எங்கிட்ட
எத்திசையில் உள்ளான்
....இறை?
ஆத்திகன்-6
துரும்பிலும் உள்ளோன்;இத்
....தூணிலும் உள்ளோன்
அருவமும் ஆனோன்
...அணுவாய்- உருவா(க்)கி
நீக்கமற எங்கும்
...நிறைந்துள்ளான் என்பதனால்
தீர்க்குமுடன் பார்ப்பாய்த்
...தெளிந்து!
நாத்திகம்-7
என்னதான் சொன்னாலும்
....ஏற்க முடியவில்லை
சின்ன அணுகூறும்
...சித்தாந்தம் - என்றாலும்
ஊழ்வினை பற்றி
... உயர்ந்தநூல் சொல்லுவதால்
ஆழ்ந்தறிய வேண்டும்தான்
....ஆம்!
ஆத்திகம்-8
வந்தாயா ஓர்வழிக்கு
....வள்ளுவம் சொல்வதென்ன?!
சிந்தையில் ஏற்றிப்பார்
....சீர்பெறலாம்- தந்தையர்போல்
ஈரறம் போற்றி
...இயன்ற பொருளீட்டி
பேரின்ப வீடடைந்தால்
...பேறு!
நாத்திகம்-9
இறையென்ற ஒன்றிற்குள்
...இத்தனை உண்டா?
மறைபொருள் கண்டிடவா
...மார்க்கம்- நிறைவாய்
இறையென்ற தத்துவத்தை
...யாமே அறிய
பறைந்தால் மகிழ்வேன்
...பகிர்!
ஆத்திகம்-10
நான்யார் எனவுன்னை
...நன்றாகக் கேட்டுப்பார்?
நான்நான் எனச்சென்றே
...நண்குணர்வாய்- ஈன்றவனை
ஆழ்ந்துள்ளே கண்டபின்னே
...ஆதியார் என்றறிந்தால்
ஊழ்வினையைத் தாண்டும்
....உயிர்!
No comments:
Post a Comment