13/09/2024

நல்லதே ஆனாலும்

 



நல்லதே ஆனாலும்
நான்சொன்னா கேட்பானா?
சொல்லுறவன் சொன்னாத்தான்
ஜோரும்பான்- இல்லைன்னா
பூமரு மாமாம்பான்..
போகுதுபார் டாபரும்பான்..
பேமஷா ஆனாத்தான்
பேரு!

கலோக்கியல் வெண்பா

07/09/2024

ஆனை முகத்தழகு பிள்ளையாரே

 

பொல்லா வினைதீர்க்கும்
......புண்ணியனே! என்றைக்கும்
இல்லார் உடனிருக்கும்
.....ஏகனே- வல்லோனே!
நல்லார் நலம்காக்கும்
.....நாயகனே! நான்கவிக்கும்
சொல்லாய் வருவாய்
.....துணை!
(வேறு)
ஆனை முகத்தழகு பிள்ளையாரே
உங்களாசிய வேண்டுகிறோம் பிள்ளையாரே...
அரச மரத்து-அடிப் பிள்ளையாரே
எங்களாசைய தீர்க்கவேணும் பிள்ளையாரே...
ஓடி உழைக்கின்றோம் பிள்ளையாரே
ஒருவெற்றிதரச் செய்வீரோ பிள்ளையாரே..
தேடித் திரிகின்றோம் பிள்ளையாரே
பெரும்சக்தியென வாரீரோ பிள்ளையாரே
காலமும் நேரமும் வந்துட்டாலே- நல்ல
ஞானமும் யோகமும் வந்திடாதோ?!
ஆர்வமும் வேகமும் வந்துட்டாலே- தெய்வ
ஆசியும் மோட்சமும் வந்திடாதோ?!

05/09/2024

பாக்கியராஜ் சொன்னதுபோல்

 

பாக்கியராஜ் சொன்னதுபோல் .
......பச்சையா சொல்லனும்னா
ஊக்கம் குறையுதெனில்
......ஓர்வழிதான்- நோக்கிங்கே
நாளும் முருங்கைக்காய்
.......நன்றாக சாப்பிட்டால்
நீளுகின்ற வாழ்வமையும்
.......நம்பு

04/09/2024

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகருக்கு


கற்றவர் சிறக்க வேண்டின்
...கற்பனைப் பெருக வேண்டின்
நற்புகழ் கிடைக்க வேண்டின்
...நல்லவை நடக்க வேண்டின்
சொற்பொருள் பலிக்க வேண்டின்
...சுயவொளி மிளிர வேண்டின்
முற்றிலும் தந்து பாரீர்
...முதல்வனே ஆட்டு விப்பான்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகருக்கு இப்பாடல் சமர்ப்பணம்

 

ஓம்நமோ நாராயணாய


ஓம்நமோ நாராய
.......ணாயவெனும் மந்திரத்தால்
மேம்படும் வாழ்வுவரும்
.......மேதினியில்- நாம்கூற
என்றுணர்ந்த எம்பெருமான்
.......யாம்பெற்ற மந்திரத்தை
சொன்னதிந்த கோட்டியூர்
........தான்! 

02/09/2024

பத்துமலை வேலவனே!


பத்துமலை ஆள்கின்ற
.....பைந்தமிழ் வேலவனே!
முத்துமலை வந்த
.....முருகனே!- சித்தனே!
முத்தமிழ்க் காவலனே!
.....முக்திதரும் ஆண்டவனே!
வித்தகன் ஆக்காய்
.....விரைந்து!
(1)
நீரில்லா ஊரினிலே
...நீர்பெருகச் செய்தவனே!
நீரின்றி உண்டோ
...நிலமிங்கே!- பாரிங்கே!
வானுயர நிற்பவனே
.....வான்புகழ் கொண்டவனே!
நானுயரச் செய்வாயோ
....வந்து!
(2)
எழுகோண வீட்டில்
.....எழுந்தருளி யுள்ளோன்!
எழுபிறவித் தீதை
.....எரிப்போன்!- முழுமுதலோன்!
ஆறுபடை அத்தனையும்
.....ஐக்கியமாய் ஆனவன்!
மாறுதலைத் தந்திடுவான்
......நம்பு!

(3) 

31/08/2024

விற்பனைக்கல்ல


தமிழ்த்தாய் வாழ்த்து
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
ஆதியிலே அகத்தியமாய்
அதற்கடுத்தத் தொல்காப்பியமாய்
திருவள்ளுவரின் திருக்குறளாய்
திருமூலரின் திருமந்திரமாய்
கம்பரின் காவியமாய்
கவியரசின் கவிதைகளாய்
தரணியிலே சிறந்தோங்கும்
தமிழ்த்தாய்க்கு எம் முதல் வணக்கம்
அவை வணக்கம்!
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
அன்னைத் தமிழ்போற்றும்
....ஆன்றோர்கள் மத்தியில்
என்னையும் ஏற்றிவிட்டீர்!
.....ஏறிவிட்டேன்- மன்னிப்பீர்!
பண்ணைத் தமிழவைமுன்
....பாடுகின்ற வாய்ப்புவந்தால்
மண்ணும் உயரோதோ
....விண்!
சபைக்கு எம் வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டு இதோ எம் கவிதை...
விற்பனைக்கல்ல
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
இந்தக் கவித்தோட்டத்தில்
எல்லாவித மலர்களும் உண்டு!
ஆம்..
புதுப்புது நிறங்களில் பூக்கும்
நவீனப்பூக்களும் உண்டு!
மரபியல் மாறாமல் பூக்கும்;
வெண்பாப் பூக்களும் உண்டு!
சிறிதாய்ப் பூக்கும்
குறும்பாப் பூக்களும் உண்டு!
பெரிதாய்ப் பூக்கும்
விருத்தப்பா பூக்களும் உண்டு!
இங்கே எல்லா மலர்களும்
ஒரே மாதிரி மலர்ந்தாலும்
எல்லாமும் ஒரிடம் சேர்வதில்லையே
சில இறைவனுக்காக
சில மனிதர்களுக்காக
சில அஃறிணைகளுக்காக
சில எதற்காகவோ?!
என்னைப் பொறுத்தவரையிலும்
மலர்களுக்குள் பேதமில்லை
எல்லா மலர்களும்
அவை அவையில் தனித்துவமானதே.
ஆனால்...
அதை அனுபவிப்பர்கள்தான்
நிறை குறை பார்க்கிறார்கள்
என்ன செய்ய?!!
இந்தத் தோட்ட மலர்கள்
மரண ஊர்வலம்போனால்கூட
நான் கவலைப்படுவதில்லை
எங்கேயும் போகாமல்
இங்கேயே வாடி வதங்கும்போதுதான்
பெரிதும் கவலை கொள்கிறேன்..
இந்தத் தோட்ட மல்லிகளை
அதிகம் நேசிப்பவன் நான்தான்
அதற்காக
மாற்றான் தோட்டத்து மல்லிகைகளை
வெறுக்குமளவு நானொன்றும்
கல் நெஞ்சக்காரனல்ல
பூ நெஞ்சக் காரனே..
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்!
நீங்கள் என்னதான்
ராப்பூ பாப்பூ என்ற
நெகிழிப் பூக்களை
இப்போது கொண்டாடினாலும்
கிராமிய மணம் கமழும்
நாட்டுப்புறப் பூக்கள்தான்
எப்போதும் வாடாதென்பதை
மறந்து விடாதீர்கள்!
இயல்பு(பூ) இல்லாமல்
வெறும் இசைப்பு(பூ) மட்டுமிருந்தால்
பயனுண்டா என்ன?
இல்லை
இரு பூக்களும் இணைந்தால்தான்
இனிதாகும் ஓர் மாலை..
இல்லையேல் அது வெறும் பீழை..
இந்தத் தோட்டத்தைச்சிலர்
இலக்கியப் பூஞ்சோலை என்பர்!
இல்லை இல்லை
இது கலோக்கியல் பாச்சோலை என்பர்சிலர்!
இன்னும் சிலரோ
இது திரையிலும் மணக்கும்
கானகக் கவிச்சோலை என்பர்!
வேறு சிலரோ
இது தனித்துவமாய் மணக்கும்
கானா ரகச்சோலை என்பர்!
நீங்கள் எப்படி வேண்டுமானாலும்
சொல்லிக்கொள்ளுங்கள்...
இது எல்லாமும் பூக்கும்
தமிழ்ச் சோலையே
தமிழ்ப்பாச் சோலையே...
இச்சோலையில் பூக்கும் பூக்களில்
எல்லாவற்றிற்கும் ஓர் விலையுண்டு!
அதே சமயத்தில்
எல்லாமும் விற்பனைக்கும் அல்ல..
ஆம்...
அவை
அவை......உங்களுக்கானவையே...
நம் மக்களுக்கானவையே...
நன்றி வணக்கம்!

28/08/2024

பள்ளி வாழ்க்கை முடியப்போகுது

 (சூழல் 1990 வாக்கில் நடக்கும் 12 ஆம் வகுப்பு பிரிவு உபசார விழா...)

விட்றா மச்சி பார்த்துக்கலாம்
விட்றா மச்சி பார்த்துக்கலாம்
விட்றா மச்சி பார்த்துக்கலாம்
விட்றா விட்றா
என்ன இப்போ ஆகப்போகுது - நம்ம
பள்ளி வாழ்க்கை முடியப்போகுது
எங்கே மச்சி போகப்போகுது- லைஃப
எக்ஸாம் ரிசல்ட் மாத்தப்போகுது..
விட்றா மச்சி பார்த்துக்கலாம்...
விட்றா மச்சி பார்த்துக்கலாம்
விட்றா மச்சி பார்த்துக்கலாம்
விட்றா விட்றா (2)
இனி..
குச்சி ஐஸ மாத்தி மாத்தி திங்க முடியுமா?!
சத்துணவு முட்டைருசி வெளியில் கிடைக்குமா?!
இலந்தைப்பழம் பொறக்கித் திங்கும் உறவு தொடருமா?!
ஆண்டுவிழா ஆட்டமினி நமக்குக் கிடைக்குமா?!
எங்கேப் போகப் போறோம்- இனி
என்ன வாகப் போறோம்..
ஒன்னும் புரிய வில்லை- அத
எப்படி மச்சி சொல்ல...
விட்றா மச்சி பார்த்துக்கலாம்
விட்றா மச்சி பார்த்துக்கலாம்...
விட்றா மச்சி பார்த்துக்கலாம்
விட்றா விட்றா
கனிமொழிக்கும் கவிதாவுக்கும் ரூட்டு விட்ட கதைங்க
பசுமரத்துல ஆணிபோல நெஞ்சில் தச்ச வலிங்க
கள்ளியிலும் பள்ளியிலும் கிறுக்கி வச்ச பேரு
கல்லு வெட்டில் பொறிச்சதுபோல் ஜொலிக்குதங்கேப் பாரு
எங்கேப் போகப் போறோம்- இனி
என்ன வாகப் போறோம்..
ஒன்னும் புரிய வில்லை- அத
எப்படி மச்சி சொல்ல...
விட்றா மச்சி பார்த்துக்கலாம்
விட்றா மச்சி பார்த்துக்கலாம்...
விட்றா மச்சி பார்த்துக்கலாம்
விட்றா விட்றா

26/08/2024

பெண்ணேவுனைக் கண்டாலெனுள்


பெண்ணேவுனைக் கண்டாலெனுள்
...பீறும்மொழி யாவும்;
கண்ணேயதைத் தந்தாலுயர்
...காதல்கவி யாகும்!
அன்பேயெனச் சொன்னாலெனுள்
....ஆறும்பல சோகம்;
உன்பேரினைக் கேட்டாலெனுள்

..... உற்சாகமாய் மாறும்! 

25/08/2024

பாலும் தெளிநீரும்

 

பாலும் தெளிநீரும் பக்குவமாய்ச் சேரவிட்டு
மூளும் தணலில் நுரைகட்ட- நாளும்
குளம்பிப் பொடிதூவி (coffee powder) கோப்பையில் தந்தால்
விளங்கும் இல்லா(ள்) இனிப்பு!