தொலைத் தொடர்பை
அருகாமையாக்கி
அருகாமை உறவுகளை
தொலைக்க வைக்கிறது...
உணர்வின் வெளிப்பாடு
சங்கேதக் குறியீடாகி
எமோஜி பொம்மைவழி
எப்போதும் பறக்கிறது...
கைரேகையில் திறந்து
கைகளுக்குள் அமர்ந்து
விரல்களுக்குப் பணிந்து
நெஞ்சிலே உறங்கியென
ஒட்டுண்ணி போலவே
ஒட்டி உலாவுகிறது...
வாட்சப்பில் அரட்டை போயி
அரட்டையில்* அரட்டை அடிக்க
தேசிய உணர்வென்ற
தேவையை உணர்த்துகிறது...
ஏஐ (AI) காணொளிகளை
எதார்த்தம்போல் உருவாக்கி
சந்தேக நெருப்பூட்டி
சந்தோசக் குளிர் காய்கிறது...
இன்ஸ்டா அக்காக்களை
இன்ஸ்டன்ட் பிரபலமாக்கி
பிக்பாஸ் வீட்டிற்குப்
பேக்கப் செய்கிறது...
நடப்பு தெரியாத
நம் போன்ற ஆட்களை
இன்னும் முகநூலில்
இப்படியெல்லாம் எழுத வைக்கிறது..
இந்த அலைப்பேசி..
செ. இராசா
*அரட்டை- இந்திய செயலி

No comments:
Post a Comment