#அறம்_வலியுறுத்தல்
1. #நூல்கள்
போனது போக
......புவியினில் மிஞ்சியதே
ஞானத் தருவென்றால்
........நன்குணர்வீர்- மோனத்தில்
நல்வழி காட்டி
.......நலமுடன் சென்றிட
நல்லற நூல்பயின்றால்
.......நன்று!
2. #திருக்குறள்
அத்தனை நூல்களையும்
........ஆய்ந்தறிந்து கற்றுணர
பத்துமோ ஓராயுள்?
.......பத்தாதே- சத்தியமாய்
உள்ளத்தை மாற்றி
.......உலகத்தை உய்விக்க
வள்ளுவநூல் ஒன்றே
........வழி
3. #கண்ணகி
மன்னவன் தீர்ப்பால்
........மணவாளன் மாய்ந்தசெய்தி
தன்னை வதைத்தும்
........தளராமல் - நின்றொருத்தி
மன்றத்தில் போராடி
.........வாதாடி வென்றதுவே
மண்ணில் அறம்காத்த
.........மாண்பு
4. #கண்ணன்
மாமனாய்த் தூதுசென்று
.......மைத்துனனாய்க் கூடநின்று
கோமகனாய் நாடாண்ட
.......கோபாலன்- மாமதியோன்
பெண்ணின் துகிலுரித்த
........பேய்களை சாய்த்தன்று
மண்ணறம் காத்ததவன்
.........மாண்பு!
5. #கர்ணன்
மானத்தைக் காத்தவனின்
......மானத்தைக் காத்திட
ஈனரெனக் கண்டும்
.....இணங்கினான்- ஞானவான்
கர்ணனின் அச்செய்கைக்
.....கட்டாயம் தப்பில்லை
அர்ப்பணிப்பில் செய்யும்
.....அறம்?
6. #விகர்ணன்
அண்ணன்கள் செய்கை
...அறமில்லை என்றொருவன்
உண்மையைச் சொன்னான்
....ஓங்கியன்று- மண்டபத்தில்
வேகமாய்ச் சொன்ன
.....விகர்ணனின் செய்கையும்
ஆகியது நல்ல அறம்!
7. #கும்பகர்ணன்
தப்பென்று சுட்டியும்
.....தன்குற்றம் காணானின்
தப்புக்காய்த் தானும்
....தயாராகி- ஒப்பியே
அன்னமிட்ட அண்ணனுக்காய்
...அன்றுகும்ப கர்ணனும்
சென்றறம் காத்துநின்றான்
....செத்து!
8. #தர்மன்
எந்த இடரிலும்
.......எள்ளளவும் மாறாத
விந்தை மனிதரின்
........நேர்மையை- சிந்தித்தால்
தர்மனைப்போல் இல்லைத்
........தரணியிலே வேறொருவர்
தர்மனே தர்மத்தின்
.........தாய்!
9. #அரவான்
தன்னுயிர் தந்தேனும்
.....தாய்மண்ணைக் காப்பாற்றி
தன்னறம் காப்போரின்
.....சால்பறிவோம்- என்றாலும்
தன்னைப் பலியிட
......தானாக முன்வந்தோன்
அன்பின் அரவானே
.....அன்று!
10. #அறம்வலியுறுத்தல்
அறத்தை வலியுறுத்தும்
......அத்தனையும் உண்மை
மறவாமல் பின்பற்றி
.......வாழ்வோம்- சிறப்பாய்
அகத்தில் அழுக்கின்றி
.......ஆனவரை ஈந்தால்
சகமே உறவாகும்
.........சார்ந்து!
No comments:
Post a Comment