17/11/2025
கோடு
16/11/2025
தமிழ் என்கிற பெயரை வைத்து
13/11/2025
போடு போடு டீயப் போடு
போடு போடு டீயப் போடு
பாய்லர் டீயப் பார்த்துப் போடு
பசியப் போக்கிடும் அமுதம் பாருங்க
குஷியத் தூண்டிடக் கொஞ்சம் போதுங்க
உழைக்கும் மக்களின் உதிரந் தானுங்க
களைப்பப் போக்கிடும் சோம பானங்க
போடு போடு டீயப் போடு
பாய்லர் டீயப் பார்த்துப் போடு
வெள்ளைக் காரன் கொடுத்த பானம்
அடிச்சான் அவனும் கொள்ளை லாபம்
ஆனால் அதுலாம் பழைய காலம்
போனான் அவனும் ரொம்ப தூரம்
இன்று உன்னது நாளை அவனது
இதுதான் வாழ்வின் போதனைங்க..
சரியாப் புரிஞ்சு முறையா வாழ்ந்தா
அதுவேப் போதும் சாதனைங்க...
விக்கீ ஜெமினீ எதுக்குங்க
டீக்கடை பெஞ்சே போதுமுங்க
அளவாக் குடிச்சா நல்லதுங்க
தெளிவைக் கொடுக்கும் தியானமுங்க
போடு போடு டீயப் போடு
பாய்லர் டீயப் பார்த்துப் போடு
அரசியல் வேணுமா?!
தத்துவம் வேணுமா
அனைத்தும் புழங்கும் டீக்கடைங்க
உலகம் வேணுமா?
உள்ளூர் வேணுமா?
உடனே வாங்க டீக்கடைங்க..
நாட்டை ஆளும் தலைவருங்க
தேநீர் கடைதான் தொடக்கமுங்க
எதுவும் குறைச்சல் இல்லையிங்க
எண்ணம் போல வாழ்க்கையிங்க
போடு போடு டீயப் போடு
பாய்லர் டீயப் பார்த்துப் போடு
Black டீ பால் டீ
light டீ Lime டீ
Strong டீ Herbal டீ
பெப்பர்டீ புதினா டீ
இஞ்சி டீ ஏலக்காட்டீ
துளசி டீ ஆவாரம்பூ டீ
Green டீ மசாலா டீ
Bubble டீ பாய்லர் டீ
Hot டீ Cold டீ
பனங் கருப்பட்டி டீ
நாட்டுச் சர்க்கரை டீ
எந்த டீ சார் வேணும்?!
ஏ...கிரீன் டீ ப்ளாக் டீ ஸ்ட்ராங்டீ- எனக்கு
பொழப்பே ஓடாதுநீ இல்லாட்டி
ஏ..லெமன்டீ இஞ்சி டீ பாய்லர் டீ
என்னை
உசுப்பும்நீ ரெண்டாவது பொண்டாட்டி
செ. இராசா
10/11/2025
சுயநலம் பெருகிய சுற்றங்கள் இங்கே
சுயநலம் பெருகிய சுற்றங்கள் இங்கே
சுயபலம் பெருக்கிட சூத்திரம் எங்கே?
நயமுடன் பழகிடும் நரிகளும் இங்கே
தயவுடன் அணுகிட உறவுகள் எங்கே?
அழுவதைத் தருகிற ஊடகம் இங்கே
அழுவதைத் தடுக்கிற ஊர்க்கரம் எங்கே?
விழுகையில் வருகுது விமர்சனம் இங்கே
விழுவதைத் தாங்கிடும் உயர்சனம் எங்கே?
இருக்கையில் மறப்பவர் பலருமே இங்கே
இறந்தபின் நினைப்பவர் உண்மையில் எங்கே?
தருகையில் பெறுபவர் தரணியில் இங்கே
தரும்கையாய் மாறிட முனைபவர் எங்கே?
கவிதையில் கரைகிற கவிஞனும் இங்கே
கவிழ்கையில் கரம்தரும் கலைஞனும் எங்கே?
புவிதனில் வருபவர் புகலிடம் இங்கே
புவிதனை விடுபவர் புகுவதும் எங்கே?
08/11/2025
இரண்டாம் பிறவி தந்த இறைவனுக்கு நன்றி...
06/11/2025
குண்டலினி யோகம்
உடலும் உயிரும் மனசுமிங்கே
சேர்ந்ததுதான் மனுஷங்க...
இதுல எதுவும் குறைஞ்சதுன்னா
அதுக்குயென்ன பேருங்க?
மூனும் முறையா இருந்ததுன்னா
நோய்களில்லா வாழ்வுங்க...
நாம நல்லா வாழுவதே
உண்மையான சொர்க்கங்க...
அதுக்கு?
குண்டலினி யோகம் பயில வாருங்க..
அண்டமெல்லாம் உணரும்படி மாறுங்க...
கண்டபலன் எத்தனையோ பேருங்க
கண்டுகொள்ள கூப்பிடுறோம் வாருங்க....
எளிய முறைப் பயிற்சி செஞ்சா
உடலு நல்லா இருக்குங்க...
கண்ணை மூடி தியானம் செஞ்சா
மனசு நல்லா இருக்குங்க...
காய கல்பம் பயிற்சி செஞ்சா
உசுரு நல்லா இருக்குங்க...
தன்னைத் தானே ஆய்வு செஞ்சா
வாழ்க்கை நல்லா இருக்குங்க...
அதுக்கு?!
குண்டலினி யோகம்...
31/10/2025
அறம் வலியுறுத்தல்
#அறம்_வலியுறுத்தல்
1. #நூல்கள்
போனது போக
......புவியினில் மிஞ்சியதே
ஞானத் தருவென்றால்
........நன்குணர்வீர்- மோனத்தில்
நல்வழி காட்டி
.......நலமுடன் சென்றிட
நல்லற நூல்பயின்றால்
.......நன்று!
2. #திருக்குறள்
அத்தனை நூல்களையும்
........ஆய்ந்தறிந்து கற்றுணர
பத்துமோ ஓராயுள்?
.......பத்தாதே- சத்தியமாய்
உள்ளத்தை மாற்றி
.......உலகத்தை உய்விக்க
வள்ளுவநூல் ஒன்றே
........வழி
3. #கண்ணகி
மன்னவன் தீர்ப்பால்
........மணவாளன் மாய்ந்தசெய்தி
தன்னை வதைத்தும்
........தளராமல் - நின்றொருத்தி
மன்றத்தில் போராடி
.........வாதாடி வென்றதுவே
மண்ணில் அறம்காத்த
.........மாண்பு
4. #கண்ணன்
மாமனாய்த் தூதுசென்று
.......மைத்துனனாய்க் கூடநின்று
கோமகனாய் நாடாண்ட
.......கோபாலன்- மாமதியோன்
பெண்ணின் துகிலுரித்த
........பேய்களை சாய்த்தன்று
மண்ணறம் காத்ததவன்
.........மாண்பு!
5. #கர்ணன்
மானத்தைக் காத்தவனின்
......மானத்தைக் காத்திட
ஈனரெனக் கண்டும்
.....இணங்கினான்- ஞானவான்
கர்ணனின் அச்செய்கைக்
.....கட்டாயம் தப்பில்லை
அர்ப்பணிப்பில் செய்யும்
.....அறம்?
6. #விகர்ணன்
அண்ணன்கள் செய்கை
...அறமில்லை என்றொருவன்
உண்மையைச் சொன்னான்
....ஓங்கியன்று- மண்டபத்தில்
வேகமாய்ச் சொன்ன
.....விகர்ணனின் செய்கையும்
ஆகியது நல்ல அறம்!
7. #கும்பகர்ணன்
தப்பென்று சுட்டியும்
.....தன்குற்றம் காணானின்
தப்புக்காய்த் தானும்
....தயாராகி- ஒப்பியே
அன்னமிட்ட அண்ணனுக்காய்
...அன்றுகும்ப கர்ணனும்
சென்றறம் காத்துநின்றான்
....செத்து!
8. #தர்மன்
எந்த இடரிலும்
.......எள்ளளவும் மாறாத
விந்தை மனிதரின்
........நேர்மையை- சிந்தித்தால்
தர்மனைப்போல் இல்லைத்
........தரணியிலே வேறொருவர்
தர்மனே தர்மத்தின்
.........தாய்!
9. #அரவான்
தன்னுயிர் தந்தேனும்
.....தாய்மண்ணைக் காப்பாற்றி
தன்னறம் காப்போரின்
.....சால்பறிவோம்- என்றாலும்
தன்னைப் பலியிட
......தானாக முன்வந்தோன்
அன்பின் அரவானே
.....அன்று!
10. #அறம்வலியுறுத்தல்
அறத்தை வலியுறுத்தும்
......அத்தனையும் உண்மை
மறவாமல் பின்பற்றி
.......வாழ்வோம்- சிறப்பாய்
அகத்தில் அழுக்கின்றி
.......ஆனவரை ஈந்தால்
சகமே உறவாகும்
.........சார்ந்து!





