கடந்த இரண்டு நாட்களாக இரு நிகழ்வுகளில் கலந்து கொண்டேன் உறவுகளே.. ஒன்று #எழுமின் எனப்படும் கத்தார்வாழ் தமிழ் தொழில் முனைவோர் மற்றும் நிபுணர்களுக்கான கூட்டமைப்பு. மற்றொன்று உலகலாவிய தமிழ் பொறியாளர்களுக்கான கூட்டமைப்பு.
இரண்டிலுமே மிகப்பெரிய ஆளுமைகள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். முன்னதில் திரு திருநாவுக்கரசு IPS, DIG, இரண்டாவதில் இஸ்ரோ விஞ்ஞானி திரு. மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் என்பது சிறப்பு.
இதில் முதல் நிகழ்வு பற்றி சொல்வதாக இருந்தால், கூட்டம் சற்றே குறைவாக இருந்தாலும் தமிழ் தமிழ் தமிழென்று முழங்கியதும் அறம் சார்ந்த ஒன்றை மையப்படுத்திப் பேசியதும் ஒருவொருக்கொருவர் ஊக்கம் தருவதாக அமைந்ததுமாய் மிகவும் அற்புதமாக இருந்தது.
இரண்டாவது நிகழ்வு மிகப்பெரிய அளவிலான கூட்டமாக கூட்டி இருந்தாலும், தமிழ் வெறும் ஊறுகாய்போலவே இருந்தது மிகப்பெரிய மனவருத்தத்தைக் கொடுத்தது. இதற்கேன் தமிழ் பொறியாளர் என்ற பெயர் வைத்தார்கள் என்று தெரியவில்லை. அதுதான் Institute of Engineers, Qatar chapter இருக்கிறதே.... கேட்டால்..
மற்றவர்களுக்குப் புரியாது என்பதால் ஆங்கிலமாம்... ஏங்க... அப்புறம் எதற்கு தமிழ் பொறியாளர்கள் என்ற பெயர்?
சரி... அதுதான் அப்படின்னா....பிரிவினைக் கோடுபோல் ஒரு தடுப்பு வேறு....கைதட்ட வந்தவர்கள் கோட்டுக்குப் பின்பும், வழக்கம்போலவே எல்லா அமைப்புகளிலும் தலைகாட்டும் பெரியவர்கள் கோட்டுக்கு முன்னருமாய் அமர வைக்கப்பட்ட விதம் இன்னும் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை வெட்ட வெளிச்சமாக்கியது. கடவுளே...என்று மாறுமோ?!!...(பொதுவாகவே முதல் இரு வரிசைகளில் பெயர் எழுதி வைத்தால் யாரும் அமரமாட்டார்கள் என்கிற நாகரிகம் கூட தெரியாதென்று நினைத்து விட்டார்கள்போலும்)
தமிழ் என்கிற பெயரை வைத்துக் கொண்டு தயவுகூர்ந்து இந்தமாதிரி முன்னுதாரணமாக இனியும் இல்லாமல் இருந்தால் அதுவே நாம் தமிழுக்குச் செய்யும் நல்லறமாக அமையும் என்றுகூறி இத்துடன் இப்பதிவை நிறைவு செய்கிறேன்.
நன்றி நன்றி!
செ. இராசமாணிக்கம்


No comments:
Post a Comment