மரம் முதல்
மனிதன் வரை
தண்டாகவோ
முதுகெலும்பாகவோ
இயற்கை வரைந்த
கோடுகள்தான்
எத்தனை எத்தனை?!!
இங்கே சில கோடுகள்
நிலையானவை
மண்ணில்
மலைகள் போடுவதுபோல்
சில கோடுகள்
நிலையற்றவை
சுனாமியில் மாறும்
கரைக்கோடுகள்போல்
இங்கே
சில கோடுகள்
மீற வேண்டியவை
வருணாசிரம மை இருந்தால்..
சில கோடுகள்
மீறக் கூடாதவை
இலட்சுமணரேகை போலிருந்தால்.
கோடு
செங்கோல்போல் நிமிர்ந்தால்
வழிகாட்டும் பாதை...
அதுவே
குடிகாரன்போல் கிடந்தால்
விழிமூடும் போதை...
கோடாமை என்னும்
கோணாமை வேண்டுமென்றார்
வள்ளுவர்...
ஆனால் இங்கே
அப்படியா உள்ளது?
அதிகாரக் கோடுகள்
அழுத்தம் தருவதால்
பிரிவினைக் கோடுகள்
சீனச்சுவர்போல் நீள்கிறது.
ஆச்சாரக் கோடுகள்
அசிங்கம் செய்வதால்
எல்லைக் கோடுகள்
சிந்தூராய் வெடிக்கிறது..
சில கோடுகள்
இருந்தும் இல்லாத
மாயக் கோடுகளே...
வானம்தொடும் பூமிபோல
சில கோடுகள்
புரிந்தும் புரியாத
சாயக் கோடுகளே
இன்னும் சாபம் தேடுவதால்...
போடுங்கள் கோடு
சாலைகளில் உள்ளதுபோல்
பயணத்தை பத்திரப்படுத்த.
போடாதீர்கள் கோடு
சமுதாயத்தில் உள்ளதுபோல்
ஆட்களை பிளவுபடுத்த..

No comments:
Post a Comment