இரண்டாம் பிறவி தந்த
இறைவனுக்கு நன்றி...
உயிரின் வலி வழியை உணர்த்திய
அந்தப் பெருவிபத்திற்கும் நன்றி...
அன்புப் பெருவள்ளத்தில் நனைத்த
அனைவருக்கும் நன்றி...
இப்படி என்னதான் கூறினாலும்
ஈடுசெய்ய முடியா சேவை செய்த
மருத்துவ செவிலியர்களுக்காய்
யாம் என்ன செய்துவிட முடியும்?!
இந்தப் பதிவைத் தவிற..
ஆம்...
108 போற்றி
108 சரணங்கள்
108 மந்திரங்கள் கூறியவன்
108ல் பயணிப்பேன் என
என்றைக்கும் எண்ணியதே இல்லை
இதையெல்லாமா எண்ணுவார்கள்?!
புரிகிறது!
அரசாங்க 108
அரசு மருத்துவமனை
செல்வதே வழக்கம்;
அதை மடை மாற்றி
அருகாமை அப்பல்லோவிற்கு
அனுமதித்த அனைவருக்கும் நன்றி!
உடைந்துபோய் வந்தவனை
உருளை வண்டியில் வைத்து
பழைய உடை கிழித்து
பச்சை உடை தரிவித்து
எந்தவித முகச்சுழிப்பும் இல்லாமல்
அந்தரங்க ரோமங்களையும் அகற்றி
ஒன்றுக்கு வடிவதற்காய்
ஒரு குழாயைச் சொறுகி
அருவருப்பே இல்லாமல்
அழுக்கைத் தொடைத்து
சலைனும் மருந்துமாய்
சகலமும் கொடுத்து
அறுவை சிகிச்சை வழியே
அன்பை அறுவடை செய்த அனைவருக்கும்
இந்த
இரண்டாம் ஆயுள் உள்ளவரை
எப்போதும் உணர்ந்திருப்பேன்!
எம்; நன்றியை உரைத்திருப்பேன்!
நன்றி மருத்துவர் முத்தமிழ் ஐயா!
நன்றி செவிலிய உறவுகளே!

No comments:
Post a Comment