19/12/2025

உனக்கான காலம் வருமாயின்

 


உனக்கான
காலம் வருமாயின்
காய்ந்த பாலை வனமும்
பனிமூடிய காஷ்மீராகும்...
காத்திரு...

17/12/2025

ஒட்டகப்பாலில் டீ போட்டால் நன்றாக இருக்குமா?





ஆம், புகைப்படத்தில் உள்ள Camelicious ஒட்டகப் பாலைப் பயன்படுத்தி நீங்கள் தேநீர் (Tea) தயாரிக்கலாம். ஆனால், சாதாரணப் பசுமாட்டுக் பாலை விட இது சற்று வித்தியாசமானது என்பதால் சுவை மற்றும் தயாரிக்கும் முறையில் சில மாற்றங்கள் இருக்கும்.
​ஒட்டகப் பாலில் தேநீர் தயாரிக்கும் போது கவனிக்க வேண்டியவை:
​சுவை: ஒட்டகப் பால் இயற்கையிலேயே சற்று உப்புச் சுவை (Salty) கொண்டது. எனவே, உங்கள் தேநீர் வழக்கத்தை விடச் சற்று மாறுபட்ட சுவையில் இருக்கும்.

​பால் திரியாமல் இருக்க: ஒட்டகப் பால் அதிக வெப்பத்தில் சீக்கிரம் திரிய வாய்ப்புள்ளது. எனவே, தண்ணீரையும் தேயிலையையும் நன்றாகக் கொதிக்க வைத்த பிறகு, இறுதியாகப் பாலை ஊற்றி லேசாக ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடுவது நல்லது.
​மணம்: சிலருக்கு ஒட்டகப் பாலின் மணம் பிடிக்காமல் இருக்கலாம். அதைச் சரிசெய்ய இஞ்சி (Ginger) அல்லது ஏலக்காய் (Cardamom) சேர்த்துக்கொண்டால் தேநீர் மிகவும் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.
​சத்துக்கள்: இது பசும்பாலை விட அதிக இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் C கொண்டது, எனவே இது ஒரு ஆரோக்கியமான விருப்பமாகும்.
​ஒட்டகப் பாலை நேரடியாகத் தேநீராகக் குடிப்பதை விட, இஞ்சி சேர்த்து "மசாலா டீ" போலச் செய்வது அதிக ருசியைத் தரும்.

​இந்தத் தேநீர் தயாரிக்கும் முறையில் உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் உள்ளதா?

ஆகா...செம்மையா இருக்குங்க...

2006க்கு அப்புறம் 2025ல் தான் இந்தப்பாலைக் குடிக்கிறேன்.....இல்லை இல்லை அதில் செய்த டீயைக் குடிக்கிறேன்...நன்றி இறைவா

பிரபஞ்சமே காண்பிக்கும்

 



நாம் ஒன்றை நோக்கிப் பயணிக்கும்போது நமக்கானப் பாதையை இந்தப் பிரபஞ்சமே காண்பிக்கும் என்பதை பலமுறை நான் அனுபவப் பூர்வமாக உணர்ந்துள்ளேன்.

இப்படித்தான் காலையில் ஒரு பதிவைப் பார்த்தவுடன் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு ஒரு வெண்பா எழுதினேன். தற்சமயம் அரசியல் பதிவைத் தவிர்க்க நினைப்பதால் அதுபற்றிய ஒரு குழப்பம் நிலவியது. சரியென்று எப்போதும்போல் தினமும் வாசிக்கும் தினம் ஒரு திருக்குறள் நூலைத் திறந்தால் நான் எழுதிய நகை பகை என்கிற வார்த்தைகள் மட்டுமல்லாது பண்புடையாரின் இயல்பு பற்றிய ஒரு அறிவிப்பும் என்னை யோசிக்க வைத்து அதற்கானத் தீர்வும் கூறியது. இதைநான் பலமுறை உணர்ந்திருந்தாலும் ஒரு பதிவாகவும் போட வேண்டும் என்று மனம் விரும்பியதால் இதை இப்போது இங்கேப் பதிவிடுகிறேன் உறவுகளே....‌

வாரிசு அரசியலை எதிர்த்தவர்

 



நகைச்சுவை மிக்கவோர்
.....நல்ல தலைவர்
பகைச்சுமை அற்றவோர்
.......பாங்கர்- தகைசால்கோ
நம்குடி காக்கவே
.......நம்குடிக் காகவே
தம்மை அடகுவைத்தார்
.......சார்ந்து!

✍️செ.இராசா

(வாரிசு அரசியலை எதிர்த்தவர்
வாரிசோடு சந்திப்பது, கைகுலுக்குவது, கட்டிப்பிடிப்பது எல்லாம் உண்மை நேர்மைக்கு உதாரணம் தலைவரே...
எழுத வேண்டாமென்று இருந்த எம்மை எழுத வைத்த மறுமலர்ச்சி நாயகனே...உமக்கு நன்றி

15/12/2025

ஒவ்வொரு மூச்சிலும்

 

ஒவ்வொரு மூச்சிலும்
....உட்புகும் காற்றினுள்
....உலவிடும் எண்ணம் யாவும்;

ஒவ்வொரு அணுவிலும்
......உயிரிலும் உணர்விலும்
.....உறைந்திட திண்ணம் ஆகும்!

செவ்விய எண்ணமும்
......செய்முறை வண்ணமும்
......தெய்வமாய் கூட நிற்கும்!

எவ்வழி எண்ணமோ
.....அவ்வழி நிச்சயம்
.....இனிவரும் காலம் மாறும்!

13/12/2025

நாத்திக வாதிகளின் நாயகிகள் ஆத்திகமாம்

 


நடிகர் திலகங்கள்
‌.......‌நாடாளும் மண்ணில்
நடிப்பில் சிறந்தோர்க்கே
......நாடு- துடிப்போடு
மற்றவர் யாவர்க்கும்
.......நாம்காவல் என்றுணர்த்தி
உற்றார்போல்
.......பேசினால் ஓட்டு

நாத்திக வாதிகளின்
.......நாயகிகள் ஆத்திகமாம்!
சேத்திரம் போவதவர்
......தேவையாம்- ஆத்திரமேன்?!
மற்றவர் செய்யுங்கால்
......நாத்திறம் காட்டுவதேன்?!
உற்றவர்க்கே போகுமினி
......ஓட்டு!

12/12/2025

ஹலோ அங்கிள்

 


இளமையைத் தக்கவைக்கத்தான்
எத்தனை எத்தனை பயிற்சிகள்?!
சற்றே...
பயிற்சியின் இடைவெளியில்
பலகையில் அமர்ந்திருந்தால்,

நான்கு சக்கர வண்டியில்
ஓவென்ற சப்தத்தோடு....
பாலகர் பட்டாளம்
பயங்கர வேகமாய்...

எங்கே ஏற்றி விடுவார்களோ
என்று பயந்தால்
ஹலோ அங்கிள்  என்று
ஏற்றியே விட்டார்கள்
வயதை...🙂🙂🙂😃

✍️செ. இராசா

11/12/2025

நீரில்லா பாலையில்

 


நிலத்தைப் பண்படுத்தி
நீரைச் சுத்திகரித்து
விதைத்து விளைவித்துத் தருகிற
கத்தாரின் காய்கறிகள்
விலை மலிவாய் இருப்பது
உண்மையில் ஆச்சரியமே....

விளைநிலத்தில் கல்லூண்றி
........விற்பவரே கேளீர்;
விளையாத மண்ணில்!
........விதைத்தும்- விளைவித்தும்
தன்னால் இயன்றதைத்
..........தந்துதவும் கத்தாரே
தன்னிறைவு பெற்றமைக்குச்
..........சான்று!

நீரில்லா பாலையில்
......நேர்த்தியாய்ச் செய்கின்ற
பாரிய வேளாண்மை
......பார்த்தீரோ?!- ஓரிடத்தில்
மண்ணைப் பதமாக்கி
.......மாற்றியநல் நீர்பாய்ச்சி
பண்ணைகள் செய்கின்றார்
.......பார்!

10/12/2025

பிறந்தநாள் வாழ்த்துகள் கலில் ஐயா..


ஊருக்கேப் பாட்டுப் பாடும் கலில் ஐயா...
உங்களுக்கு பாடட்டுமா நானும் மெய்யா..
வயசுதான் ஏறுதுங்க உண்மை தான்யா..
நம்பித்தான் நகரணுங்க போலாம் வாய்யா...
ஏய்.. போடு நடையப் போடு
இன்னும் வேகத்தோடு
ஏய்....தேடு விடையத் தேடு
இன்னும் ஆர்வத்தோடு
கானாவுல ஃபீலாபல பாட்டு செஞ்சீங்க..
ஆனாகூட தெரியாதவன் ஆட்டே போட்டாங்க..
ஏணியாக அனைவரையும் ஏத்தி விட்டீங்க...
ஏறிநீங்க வரலையினா என்ன நியாயங்க....
பனமட்ட சேனலோட பவர் ஸ்டாருங்க
கோதண்டம் சாரோட செம்ம பேருங்க
எனக்கும் ஆஸ்தான சிங்கர் யாருங்க
எவருக்கும் ஆப்டான நீங்க தானுங்க
பழக்கம் வேறு நட்பு வேறு
பார்த்து பழகும் உறவு வேறு
கொடுக்கல் வேறு வாங்கல் வேறு
கொடுத்துக் கெடுத்த உலகம் வேறு
ஏய்.. போடு நடையப் போடு
இன்னும் வேகத்தோடு
ஏய்....தேடு விடையத் தேடு
இன்னும் ஆர்வத்தோடு

05/12/2025

விபத்து

 


எதிர்பாரா நேரத்தில்
எதிரே நிற்கின்ற வேகத்தடை...
நிகழ்காலம் விடுக்கின்ற
எதிர்கால எச்சரிக்கை; அல்லது
இறந்த காலத் தீர்மானம்...
சிலருக்கு வாழ்வின்
திருப்புமுனை!
சிலருக்கு வாழ்வில்
திரும்பா வினை!
இது
காலன் விடும்
வக்கீல் நோட்டீஸ்! அல்லது
காலம் உணர்த்தும்
வாழ்வியல் எத்திக்ஸ்!
முன்பே தகவல் சொல்லா
அழையா விருந்தாளி!
வந்தபின்னோ?!
உடன் உரைக்கும்
உடன் பங்காளி!
பிடித்த எண்;
108
பிடித்த பானம்;
குளுக்கோஸ்
அப்போதைய தெய்வம்;
மருத்துவர்
அப்போதும் அச்சுறுத்துவது;
காசு பணம் துட்டு
மிஞ்சுவது;
வலியும்
விடுவும்
அறிவது?!
யார் நம்மவர்!
தெளிவது?!
யார் நாம்?!
இப்படிக்கு,
விபத்து
✍️செ. இராசா