17/08/2024

வெற்றி மட்டுந்தான் நம்மப்பேரைச் சொல்லுங்க

 

வெற்றி மட்டுந்தான்- நம்மப்
... பேரைச் சொல்லுங்க
கற்ற வித்தையக் காட்டி
...தட்டித் தூக்குங்க.
கால தாமதம் ஆனால்
...பொறுமை வேணுங்க
காலம் வந்துட்டா வெற்றி
...தேடி வருமுங்க...

வெற்றி வெற்றி வெற்றி வெற்றி -ஒரு
வெற்றி பெற்றால் எல்லாம் வெற்றி (2)

முட்டி மோதுறோம் ஒன்னும்
கிடைக்கவே இல்லை
தட்டிப் பாக்குறோம் கதவு
தொறக்கவே இல்லை
வாய்ப்பு தேடியே எங்க
வயசு போகுது
ஏய்ச்சு பொழைக்கிற கூட்டம்
எங்கும் வாழுது..

இந்தக் கதையெல்லாம் அட
என்றும் தொடருது..உன்
நொந்தக் கதையெல்லாம்- ஒன்னு
மறக்க வைக்குது...எது
மறக்க வைக்குது?...அதான்
வெற்றி வெற்றி வெற்றி வெற்றி -ஒரு
வெற்றி பெற்றால் எல்லாம் வெற்றி (2)

வத்தலும் தொத்தலுமாய்

 

வத்தலும் தொத்தலுமாய்
...... வந்தவர்கள் பின்நாளில்
குத்தலும் கொஞ்சலுமாய்
......கொக்கரித்தார்- உத்தமர்போல்
வக்கனையாய் எத்தனையோ
......வாக்குறுதி தந்திங்கே
தக்கவைத்தார் தன்குடியைத்
......தான்!

16/08/2024

தனையறிய முற்பட்டால்

 

தன்முனைப்பு (Ego) நீங்கத்
.....தனையறிய முற்பட்டால்
முன்னேற்றம் கிட்டும்
.....முயன்றுபார்- என்றைக்கும்
தர்மம் பிறழாமல்
.....தைரியம் குன்றாமல்
கர்மத்தில் வைப்பாயே
......கண்!

(வேதாத்திரிய சேவைக்கு மேலும் ஓர் அங்கீகாரம்... வாழ்க வளமுடன்)


15/08/2024

அடங்கிவிடுகிறது அனைத்து சுதந்திரமும்

 

அடிமைத் தளையை அறுத்தெறிந்து...
சுதந்திரம் வாங்கினோம்தான்
ஆனால் உண்மையில்
அடிமைத்தன உணர்வை
அறுத்தெறிந்தோமா?!
இல்லையே...
இருந்திருந்தால்
படித்தோர் பணிபுரியும் ஐடி முதல்
பாமரர் பணிபுரியும் பங்க்கடை வரை
நேரச் சுரண்டலுக்காய்
போராடி இருப்போமே....?!!
அட...போங்க சார்..
இங்கே இப்படித்தான்;
என்பதில் அடங்கிவிடுகிறது
அனைத்து சுதந்திரமும்...
✍️செ. இராசா
இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள் அனைவருக்கும் 🙏🙏🙏
(கத்தார் நாளிதழில் நேற்றும் இன்றும் வந்த சுதந்திர தினமலர் புத்தகங்கள் உங்களின் பார்வைக்கு)

07/08/2024

திருமாவளவன்

 


அத்துமீறி
திமிறி எழு சொன்னது யாரு
அவர்தானே எங்களோட அம்பேத்காரு

டெல்லி கிடுகிடுங்குது- அண்ணனோட
சொல்லில் வெடிவெடிக்குது!
அன்பில் உறவிருக்குது- தப்புசெஞ்சா
கண்ணில் பொறிபறக்குது!

அண்ணன்திரு மாவளவன்
அண்ணல்உரு வானவனே....
மண்ணில்இவன் போலருவன்
இன்னும்உரு வாகலையே...

டெல்லி கிடுகிடுங்குது- அண்ணனோட
சொல்லில் வெடிவெடிக்குது!
அன்பில் உறவிருக்குது- தப்புசெஞ்சா
கண்ணில் பொறிபறக்குது!

சரணம்-1
காலமுள்ள காலம்வரை கட்டுப்பட்டு கிடக்கணும்னு
கூறுகெட்ட கூட்டமொன்னு கூவிநின்ன வேலையில
கொட்டகொட்ட குனிஞ்சதெல்லாம் போதுமுன்னு சொன்னவரு
தட்டி கேட்ட அண்ணலைப்போல் நம்மகூட நின்னவரு

எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்கணுமா இல்லையா
இல்லாதோர் நல்வாழ்க்கை அடையணுமா இல்லையா
நல்லோரும் இந்நாட்டில் பொழைக்கணுமா இல்லையா
நம்மோட உரிமைக்காக
பேசனுமா இல்லையா

டெல்லி கிடுகிடுங்குது- அண்ணனோட
சொல்லில் வெடிவெடிக்குது!
அன்பில் உறவிருக்குது- தப்புசெஞ்சா
கண்ணில் பொறிபறக்குது!

அண்ணன்திரு மாவளவன்
அண்ணல்உரு வானவனே....
மண்ணில்இவன் போலருவன்
இன்னும்உரு வாகலையே...

Rap]
யாரு மேல.... யாரு கீழ..
flood வந்தா.....தண்ணி உள்ள..
மாடி வீடு...கூரை வீடு
எர்த் குவாக்கில்....இடிஞ்ச கூடு
காசு பணம் காஸ்ட்டு எல்லாம்
வேஸ்ட்டுதானே போக சொல்ல..
பின்ன எதுக்கு பிரிக்கும் பேச்சு
பிரெண்ட்ஷிப் ஆனா சரியாப் போச்சு..
நீயும் நானும் ஒன்னு - இதை
நினச்சா தொறக்கும் கண்ணு..இதில்
அண்டர் ஸ்டாண்டிங் இல்லை- அப்புறம்
நானும் என்னத்த சொல்ல?

சரணம் -2
ஊரைவிட்டு சேரிகள ஒதுக்கியது யாருங்க?
சாதிப்பேரை சொல்லிசொல்லி அடக்கியது ஏனுங்க?
சட்டத்தால மாத்தனுன்னு நினைச்சவரு யாருங்க?
அப்பக்கூட சலுகையான்னு கேக்குறது ஏனுங்க?

படிச்சாத்தான் முன்னேற்றம் கிடைக்கிமுன்னு சொன்னாரு
அதிகாரம் வந்தால்தான்
மாற்றமுன்னு சொன்னாரு... (அண்ணலு)

ஆனால்;
படிப்புக்கே போராடும் சூழ்நிலையக் கண்டாரு
வெடிச்சாரு துடிச்சாரு வெகுண்டாரு தலைவரு...

டெல்லி கிடுகிடுங்குது- அண்ணனோட
சொல்லில் வெடிவெடிக்குது!
அன்பில் உறவிருக்குது- தப்புசெஞ்சா
கண்ணில் பொறிபறக்குது!

அண்ணன்திரு மாவளவன்
அண்ணல்உரு வானவனே....
மண்ணில்இவன் போலருவன்
இன்னும்உரு வாகலையே...

04/08/2024

மலைபோல மனசுன்னு

 

மலைபோல மனசுன்னு
உயர்வாகச் சொல்வோமே
உயர்வாகச் சொல்வோமே- இப்போ
தலைகீழாப் போனதால
தடுமாறிப் போனோமே...
...தடம் மாறிப் போனோமே..

வயக்காட்ட வித்துப்புட்டு
வயநாடு வந்தோமே
வயநாடு வந்தோமே- இப்போ
கண்மூடிக் கண்திறந்தா
மண்மூடிக் கிடக்கோமே
...மலையத்தான் காணாமே

தென்பாண்டி நாட்டவிட்டு
மலைநாடு வந்தோமே
மலைநாடு வந்தோமே- இப்போ
திக்கேதும் தெரியலையே
திசைமாறிப் போனோமே
...திகைச்சேபோய் நிக்கோமே..

மலைச்சாமி கோவிலுக்கு
மறக்காம போனோமே
மறக்காம போனோமே - சாமி
மதிகோணல் ஆயிடுச்சோ
மலைகூட கரைஞ்சிடுச்சே
...‌மனசெல்லாம் உடைஞ்சிடுச்சே

03/08/2024

ஒருமீட்டர் பீஷா

 


ஒருமீட்டர் பீஷாவில் ஒவ்வோர் ரகமாய்
விரும்பிச் சுவைத்தால் வியப்பு!


குறைகாணா மனம் வேண்டும்


குறைகாணா மனம் வேண்டும்
...குணம்மாறா துணை வேண்டும்!
மறைவாகா மதி வேண்டும்!
...மனம்கோணா திடம் வேண்டும்!
முறைமீறா மதம் வேண்டும்!
...முதல்போகா செயல் வேண்டும்!
இறைநீங்கா வரம் வேண்டும்!
...இசைநீங்கா தருள் வேண்டும்!

01/08/2024

உருளைக் கிழங்கை

 


உருளைக் கிழங்கை

......உருட்டி உருட்டிச்

சுருள்வளையம் போலச்

.....சுழற்றி- அருமையாய்

எண்ணைக்குள் முக்கியதை

.....ஏதேதோ தூவியபின்

வண்ணமாய்த் தந்தார்கள்

......வார்த்து!


கண்ணாடி போட்ட

 

கண்ணாடி போட்ட
.....கருப்பான என்னைப்போய்ப்
பெண்ணெங்கே பார்க்குமென
.....பேதலித்தே...- உண்மையிலே
காதலைப் பூட்டிவைத்தே
.....காத்திருந்தக் காதலனைத்
தூதனாய் ஆக்கியதேன்
......சொல்?!

(கருவெல்லாம் கற்பனையே)