07/09/2017

சுதந்திரமே எங்கே உறங்குகின்றாய்?-----களஞ்சியம் கவிதைப் போட்டி-66 (வெற்றிக் கவிதை)


66வது களஞ்சியம் கவிதைப் போட்டியில் முதலிடம் பிடித்த கவிதை
வாய்ப்பளித்த சேக்கிழார் அப்பாசாமி அண்ணா அவர்களுக்கும், கவிதையை தெரிவு செய்த நடுவர் கவிஞர் வாலிதாசன்
அவர்களுக்கும் ஊக்கம் தந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
https://www.facebook.com/groups/1535309520121292/permalink/1890108977974676/...


உயிர்களை இழந்துபெற்ற
உரிமைச் சுதந்திரமே- நீ
உதிரத்தை உரிஞ்சுகின்ற
ஊழல் தலைவர்களால்-இங்கே
உறங்கித்தான் போனாயோ?!

தமிழின உணர்வளி(ழி)த்த
திராவிடச் சுதந்திரமே- நீ
தமிழனை வேரறுக்கும்
தீநெறித் தலைவர்களால்-இங்கே
திக்கெற்று நின்றாயோ?!

கண்ணியம் காத்திடாத
காதல் சுதந்திரமே- நீ
காமம் கழிந்தவுடன்
கழற்றிவிடும் காமுகரால்- இங்கே
கற்பினையும் இழந்தாயோ?!

சாதிகள் வளர்க்கின்ற
சாதியச் சுதந்திரமே- நீ
சமநிலை அழிக்கின்ற
சாதியத் தலைவர்களால்- இங்கே
சமத்துவம் இழந்தாயோ?

அடக்கிடத் துடிக்கின்ற
அதிகாரச் சுதந்திரமே- நீ
அமைதியைக் குழைக்கின்ற
அரசியல் தலைவர்களால்-இங்கே
அனைத்தையுமே இழந்தாயோ?!

ஊறுகள் செய்யாத
உண்மைச் சுதந்திரமே- நீ
உறவுகள் மேம்பட
உதவிகள் செய்யாமல்- இங்கே
உறங்கித்தான் போனாயோ?!

-----செ.இராசா-----
https://www.facebook.com/groups/1535309520121292/permalink/1890108977974676/ 

காலச் சக்கரத்தின் சுழற்சியில்;


கெட்டகுணம் நல்லகுணமாக மாறினால் அது மகிழ்ச்சி!
நல்லகுணம் கெட்டகுணமாக மாறினால் அது அதிர்ச்சி!
கெட்டகுணம் கெட்டகுணமாகத் தொடர்ந்தால் அது பேரதிர்ச்சி!
நல்லகுணம் நல்லகுணமாகத் தொடர்ந்தால் அது பெருமகிழ்ச்சி!

காரணம் யாரென்பீர்?!


செல்லரித்த புகைப்படத்தில்
புல்லரிக்கும் புன்சிரிப்பால்
காட்சிதரும் குழந்தையது
காண்போரின் கண்களிலே
கவிதையாக மலர்வதற்கு
காரணம் யாரென்பீர்?!

கருப்பு வெள்ளை நிறம் மறைத்து
நெருப்பு வண்ண ஒளிவீசி
கண்கவர் ஓவியமாய்
கட்டழகு காட்சியாகி
கண்களிலே விரிவதற்கு
காரணம் யாரென்பீர்?!

----செ.இராசா----

மின்மினி வெளிச்சத்தில்--களஞ்சியம் கவிதைப் போட்டியில் (64) பங்குபெற்ற கவிதை (முடிவு வரவில்லை)


மின்மினி பூச்சியின் வெளிச்சத்திலும்
மின்னலாய் மின்னிடும் என்னவளே!
எப்படி சொல்லுவேன் உன்னழகை...
என்றுமே நீயொரு பேரழகே!

காந்தமாய் இழுக்கின்ற கண்ணழகோ
காவியம் படைத்திட தூண்டுதடி!
கடலலை நளினத்தின் முன்னழகோ
கண்களில் கவிதைகள் பாடுதடி!

விருட்சமாய் விளைந்துள்ள பின்னழகோ
விருப்பத்தின் விதைகளை விதைக்குதடி!
வெள்ளொளி வெளிச்சத்தின் பல்லழகோ
உள்ளொளி வெளிப்பட வைக்குதடி!

நாணத்தில் சிவக்கின்ற மேலழகோ
வானத்துச் சூரியனை மிஞ்சுதடி!
வெட்கத்தில் சிரித்திடும் சிரிப்பழகோ
வெட்டிடும் மின்னலாய் வெட்டுதடி!

செவ்விதழ் கொஞ்சிடும் நின்மொழியோ
செந்தமிழ் பேசிடும் குறள்களடி!
செய்கையில் பேசிடும் கண்மொழியோ
செப்பிடும் ஆயிரம் கவிதையடி!

காதலி நீயில்லா நேரங்களோ
காலனின் நேரமாய் மாறுதடி!
காட்சியாய் நீவரும் நேரங்களோ
காலமே காணாமல் போகுதடி!

------செ. இராசா-------

மனிதர்களும் மாக்களும்



எத்தனை எத்தனை மனிதர்களோ
அத்தனை அத்தனை குணங்களம்மா!
எங்ஙனம் நற்குண மனிதர்களோ
அங்ஙனம் ஆனந்தம் தோன்றுமம்மா!

எளிமை பொறுமை கொண்டவரே
மனிதம் போற்றிடும் மாந்தரம்மா!
என்றும் பொறாமை கொள்பவரோ
மண்ணில் பிறந்த மடையரம்மா!

அன்பும் பண்பும் நிறைந்தவரே
அகிலம் விரும்பிடும் மனிதரம்மா!
ஆசையும் பற்றும் நிறைந்தவரோ
அனைத்தும் இருந்தும் ஏழையம்மா!

கற்பும் நட்பும் காப்பவரே
கடவுள் விரும்பிடும் புனிதரம்மா
கடமையில் கஞ்சன் ஆனவரோ
கடைசியில் வீழ்வது நிகழுமம்மா!

அனைத்திலும் நிறைகளைக் காண்பவரே
அகத்தினில் மகிழ்ந்திடும் மக்களம்மா!
அனைத்திலும் குறைகளைக் காண்பவரோ
அமைப்பினில் மனிதரெனும் மாக்களம்மா!

-----செ. இராசா----/

ஆடை----குறுங்கவிதை

ஆடை குறைந்ததால்
அகம் மகிழ்ந்தது
காந்தியவாதிக்கு!

ஆடையை நீக்கியதால்
அழ வைத்தது
வெங்காயம்!

ஆடையின் பின்னால்
ரகசியம் மறைத்தது
ஆவின் நெய்!

----செ. இராசா----

பயணம்


பயணம் செல்வது புதிதில்லை!
பலமுறை சென்றும் புளிப்பதில்லை!

பளிச்சிடும் முகங்கள் பல ரகங்கள்!
பழகிடும் முகங்கள் நம் ரகங்கள்!

பணத்தின் பயணமும் நிற்காது!
பயணத்தில் பணமும் நிற்காது!

பயணத்தின் நிகழ்வுகள் நினைவாகவும்!
பயணத்தின் நினைவே நிலையாகும்!

---செ.இராசா----

விடுமுறை



விடுகதை வினவிடும் வாழ்வில்- மனம்
விடைபெற விடுமுறை வேண்டும்!
விடுதலை வேண்டிடும் வாழ்வில்- மனம்
விடுபெற விடுமுறை உதவும்!

ஓடிடும் உழைத்திடும் எவர்க்கும்- மனம்
ஒய்வுற விடுமுறை வேண்டும்!
ஓதிடும் உரைத்திடும் நபருக்கும்- மனம்
ஓங்கிட விடுமுறை உதவும்!

சுற்றுலா சென்றிடும் பொழுதில்- மனம்
சுதந்திரம் அடைந்ததாய் உணரும்!
காட்சிகள் மாறிடும் கணத்தில்- மனம்
காட்டிடும் கவிதையாய் விரியும்!

வருடா வருடம் வரினும்- மனம்
விடுமுறை தினத்தால் மகிழும்!
வாரா வாரம் வரினும்- மனம்
விடுமுறை வந்தால் குளிரும்!

சூரியனின் சேதி கேளீர்


சூரியன் வானிடம் காதல் கொண்டிட
சுடுகின்ற வேகத்தில் கலவி கொண்டிட
செழுமை நிறத்தினை வான்மேல் ஊற்றிட.
நீலம் இழந்ததாய் வானம் சொன்னதாம்!


சூரியன் செய்ததை காகம் கதைத்திட
காகம் கதைத்தது விண்ணில் ஒலித்திட
விண்ணில் ஒலித்ததை வெண்மதி கேட்டிட
வெண்மையை மீண்டும் திருப்பித் தந்ததாம்!
----செ. இராசா----

Photography by: Mr. Riaz Ahamed

01/09/2017

என் நினைவெல்லாம்------களஞ்சியம் கவிதைப் போட்டியில் (69) பங்குபெற்ற கவிதை (முடிவு வரவில்லை)

களஞ்சியம் கவிதையில் இடம்பெற்று தீர்ப்பு வராத என் கவிதைகள்



"
என் நினைவெல்லாம் நீயென்று"
என்நாளும் சொன்னவளே...
உன் நினைவில் நானிருக்க
எமை இங்கே தவிக்கவிட்டு
எங்கே நீ சென்றாயோ?!

அன்பாலே அம்பெய்து
அடிமனதில் புகுந்தவளே
என் மனதைத் துளைத்துவிட்டு
எமை இங்கே பதறவிட்டு
எங்கே நீ சென்றாயோ?!

இன்பத்தின் மழைபெய்து
இதயத்தை நனைத்தவளே
என் உறவைக் கானலாக்கி
எமை இங்கே கலங்கவிட்டு
எங்கே நீ சென்றாயோ?

கைப்பேசி கதகதக்க
சொல்பேச்சில் மகிழ்ந்தவளே
என் பேச்சை மறந்துவிட்டு
எமை இங்கே விட்டுவிட்டு
எங்கே நீ சென்றாயோ?!

நினைவாலே கரைந்தவளே
என்னுள்ளே உறைந்தவளே
ஏனென்றே தெரியவில்லை?!
எனக்கொன்றும் புரியவில்லை?!
எங்கே நீ சென்றாயோ?!