மின்மினி பூச்சியின் வெளிச்சத்திலும்
மின்னலாய் மின்னிடும் என்னவளே!
எப்படி சொல்லுவேன் உன்னழகை...
என்றுமே நீயொரு பேரழகே!
காந்தமாய் இழுக்கின்ற கண்ணழகோ
காவியம் படைத்திட தூண்டுதடி!
கடலலை நளினத்தின் முன்னழகோ
கண்களில் கவிதைகள் பாடுதடி!
விருட்சமாய் விளைந்துள்ள பின்னழகோ
விருப்பத்தின் விதைகளை விதைக்குதடி!
வெள்ளொளி வெளிச்சத்தின் பல்லழகோ
உள்ளொளி வெளிப்பட வைக்குதடி!
நாணத்தில் சிவக்கின்ற மேலழகோ
வானத்துச் சூரியனை மிஞ்சுதடி!
வெட்கத்தில் சிரித்திடும் சிரிப்பழகோ
வெட்டிடும் மின்னலாய் வெட்டுதடி!
செவ்விதழ் கொஞ்சிடும் நின்மொழியோ
செந்தமிழ் பேசிடும் குறள்களடி!
செய்கையில் பேசிடும் கண்மொழியோ
செப்பிடும் ஆயிரம் கவிதையடி!
காதலி நீயில்லா நேரங்களோ
காலனின் நேரமாய் மாறுதடி!
காட்சியாய் நீவரும் நேரங்களோ
காலமே காணாமல் போகுதடி!
------செ. இராசா-------
No comments:
Post a Comment