சுள்ளெனத் தைக்கட்டும் சொல்
12/07/2021
இகல் --- வேறுபாடு
#வள்ளுவர்_திங்கள்_167
#ஒற்றுமை_ஓங்குக
#அதிகாரம்_இகல்
#வேறுபாடு
பிரித்துப் பிரித்தேப் பிழைப்பை நடத்தும்
பிரிவினை வாதம் பிழை
(1)
ஒன்றியப் பேரரசில் ஒன்றாத சிற்றரசாய்க்
குன்றினால் என்னாகும் கூறு?
(2)
வேற்றுமையில் ஒற்றுமை வேண்டுகிற காலத்தில்
கூற்றினை யோசித்துக் கூறு
(3)
யாதுமே ஊரென்றார் யாவருமே கேளிரென்றார்
மோதும்முன் யோசித்து மோது
(4)
இனத்திற்கோர் நாடென்றால் என்னாகும் இங்கே?
மனத்திலே எண்ணத்தை மாற்று!
(5)
மொழிவாரி மாநிலமாய் முன்செய்த நாடு
வழிமாறிப் போகுமெனில் வம்பு
(6)
குறுக்கே அணைகட்டி கோலோச்சும் போக்கு
வெறுப்பைத் தூண்டும் விடு
(7)
ஓட்டிற்காய் மட்டும் ஒருபோதும் எண்ணாமல்
நாட்டிற்காய் எண்ணல் நலம்
(8)
நீர்வளம் ஓரிடத்தில் மின்வளம் வேறிடத்தில்
ஊர்நலம் ஒப்புரவில் உண்டு
(9)
நடுநிலை மாறா நடுவண் அரசாய்க்
கொடுக்கிற பங்கைக் கொடு
(10)
செ. இராசா
(இகல்--- பற்றிய பொருள் விளக்கம் முதல் பின்னூட்டத்தில் உள்ளது)
10/07/2021
புல்லாலே கட்டுதே புள்
கல்லூரி சென்றெல்லாம்
.........காலத்தைப் போக்காமல்
இல்லை நிலமென்றே
.........எங்கேயும் போகாமல்
கல்மணல் என்றெல்லாம்
........ காசினைக் கொட்டாமல்
புல்லாலே கட்டுதே புள்
செ. இராசா
(புள்- பறவை)
08/07/2021
ஊர்வலமாம் ஊர்வலமாம்
ஊர்வலமாம் ஊர்வலமாம் ஊரெங்கும் ஊர்வலமாம்
ஊர்தெய்வம் போற்றுதலே ஊர்வலத்தின் காரணமாம்
ஊர்தெய்வம் யாரென்றே ஊர்வலத்தில் பேச்சாமாம்
யார்தெய்வம் மூப்பென்றே எப்போதும் போராமாம்
ஊர்வலத்தின் ஓரத்தில் ஓருருவம் சொன்னதுவாம்
"#பார்தெய்வம்_பாருன்னுள்_பார்"
செ. இராசா
முருகனைப் போற்றல் முறை
முருகனைப் பற்றியே முன்னேறிச் சென்ற
முருகனைப் போற்றல் முறை!
வாழ்த்துகள் மத்திய அமைச்சரே....
(மீன்வளம், கால்நடை, பால்வளம், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை)
செ. இராசா
சென்னை 1995 -- முதல் பயணமே கோட்டைக்கு
#சென்னை_1995
#முதல்_பயணமே_கோட்டைக்கு
இப்போதெல்லாம் உலகமே நம் கைக்குள் சுருங்கிவிட்டது. ஆனால், அன்றைக்கு என்னைப்போன்ற தென் மாவட்ட கிராமவாசிகளுக்கு சென்னை போவதென்பது பெரும் கனவாகவும் இலட்சியமாகவும் இருந்தது. என் தந்தையார் அடிக்கடி சென்னைப்போய் வந்த அனுபவங்களை எங்களிடம் பகிரும்போது அவ்வளவு பிரமிப்பாய் இருக்கும். நான் என் தந்தையிடம் என்னையும் அழைத்துச் செல்ல பலமுறை நச்சரித்ததால் ஒருவழியாக சம்மதித்தார்.
1995, நான் பத்தாவது தேர்வெழுதி விடுமுறையில் இருந்தேன் என்று நினைக்கின்றேன். மதகுபட்டியில் சரியாக மாலை 7 மணிக்குக் கிளம்பிய நாங்கள் சென்னைக்கு செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தோம். ஒவ்வொரு நிறுத்தத்திலும் சென்னை வந்தாச்சா சென்னை வந்தாச்சா என்று அப்பாவிடம் கேட்டுக்கொண்டே நாங்கள் காலை 7 மணிக்கு சென்னை சென்றபோது நான் நன்றாகத் தூங்கிவிட்டேன். முதலில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள பெரியப்பா வீடு சென்றோம். எங்க பெரியப்பா 8 வயதிலேயே மலேசியாவில் குடியேறி அங்கேயே குடியுரிமை வாங்கியுள்ளவர் என்பதால், அவருடைய வீடும் அதற்கேற்றாற்போல் தான் இருந்தது. ஏறக்குறைய வெளிநாடு வந்ததுபோல்தான் உணர்ந்தேன். அவர்கள் நாக்கில் ஆங்கிலம் சர்வ சாதாரணமாக வருவது எங்கள் அனைவருக்கும் ஒரு மிரட்சியையே கொடுத்தது எனலாம். அவர்கள் வீட்டில் காலைச் சாப்பாடு முடித்துவிட்டு, எங்க ஊர் MLA முருகானந்தம் அவர்களைப்பார்க்க அப்பா அவரின் விடுதிக்கு அழைத்துச் சென்றார். என் அப்பா அன்று முதல் இன்றுவரை அவருடன் நல்ல நட்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
MLA என்றால் மிகப்பெரிய வீட்டில் இருப்பார்கள் என்று நினைத்தால் அங்கே இரும்புக் கட்டில் போட்ட சிறு அறையில்தான் இருந்தார்கள். அங்கே மற்றவர்கள் தங்கவெல்லாம் இடமில்லை. ஆனாலும் எங்களை அங்கேய ஒருநாள் இருக்கச் சொன்னார்கள். அடுத்தநாள் சட்டசபைக்கு போகும் பாஸ் தருவதாகச் சொன்னார்கள். எனக்கு அதுபற்றியெல்லாம் எதுவுமே தெரியாது. அன்றைய பகல் பொழுதில் என் அப்பா அன்றைய பொதுப்பணித்துறை அமைச்சர் கண்ணப்பன் (இன்றைய போக்குவரத்துத் துறை) அவர்களைப் பார்க்க அழைத்துச் சென்றார்கள். ஒரு காலத்தில் என் தந்தையார் அவரின் வலது கரமாக இருந்தார். அது முடிந்தவுடன் மெரினா கடற்கரை எல்லாம் காண்பித்துவிட்டு மீண்டும் MLA விடுதி வந்து நன்றாக ஓய்வெடுத்தோம்.
மறுநாள் காலை சென்னை ஜெயின் ஜியோர்ஜ் கோட்டைக்கு சட்டசபை கூட்டம் காண திட்டமிட்டபடி அப்பா அழைத்துச் சென்றார்கள். வெளியே நிறைய சோதனையெல்லாம் செய்து உள்ளே அனுப்பிவைத்தார்கள். பார்வையாளர் மாடம் மேலே இருந்தது. கீழே சிகப்புக் கம்பளம் விரித்த இடத்தில நிறைய பெஞ்சுகளாய்ப் போடப்பட்டு கீழே நிறைய பேர் அமர்ந்திருந்தார்கள். அப்போது முதலமைச்சர் வருகிறார் என்று சொல்லி அனைவரும் எட்டிப் பார்த்தார்கள். புரட்சித்தலைவி வாழ்க என்கிற கோசம் வந்தது. நானும் எட்டிப்பார்த்தேன். நல்ல சிகப்பு நிறத்தில் அங்கி அணிந்தவாறு அவரின் உருவம் தெரிந்தது. "அப்படியெல்லாம் நிற்கக்கூடாது, எல்லோரும் அமருங்கள்" என்று அவ்வப்போது காவலாளி எச்சரித்தார். எனக்கென்னவோ அவர்கள் பேசுவது ஒன்றுமே புரியவில்லை. அப்பாவை நச்சரித்து அங்கிருந்து கிளம்பினோம். ஆம், அன்றைக்குத் தெரியவில்லை நாம் பார்த்த இடம் எவ்வளவு வரலாற்று முக்கித்துவம் வாய்ந்த இடமென்று....இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்கிறது.
மனமார்ந்த நன்றி அப்பா.
06/07/2021
குறளுரையாடல் ---மருத்துவர் ஐயாவுடன் நான் ---- காமத்துப்பால்---கரு: பிரிவும்ஏக்கமும்
#1_ஐயா
காதற்பா வென்றால் கடிதே படைக்கும்நீர்
சாதலிலா வாழ்வுக்குச் சான்று.
(கடிதே- விரைவாய்)
#2_நான்
சான்றிதழ் வேண்டுமா சத்தியத்தின் முன்னாலே
ஊன்கலந்த நீயென் உயிர்
#3_ஐயா
உயிரில் கலந்துள்ள உண்மைத் தமிழோ
பயிலும் அகத்திணையோ பார்.
#4_நான்
பார்க்கின்ற அத்தனையும் பைந்தமிழாய் நிற்பானே
கோர்த்திடடா நீயென் கரம்
#5_ஐயா
கரம்பிடிக்குங் காலையில் காதல் திலக
வரம்வடிப்பேன் நெற்றியில் வா.
#6_நான்
வாவென்று சொன்னவுடன் "வாவ்"என்று வந்துவிட்டேன்
போவென்றால் எல்லாமும் போச்சு
#7_ஐயா
போவெனல் பண்பல்ல போய்வா எனல்பண்பு
வாவெனல் காதலின் வாழ்த்து.
#8_நான்
வாழ்த்தி வழியனுப்ப வாசலிலே வந்தவுடன்
ஆழ்த்தும் வலிமிகும் அன்பு
#9_ஐயா
அன்புதான் காதலாகும் அன்புதான் நட்பாகும்
அன்பின் வழிய(து) அறம்.
#10_நான்
அறமில்லாச் சொல்லால் அளக்கின்றார் இங்கே
மறவாமல் சீக்கிரம் வா
#11_ஐயா
வாவெனும் பண்பு வசந்தத்தின் காட்சியாம்
போவெனல் பாலைப் பொழில்
#12_நான்
பொழில்வனம் நீரில்லேல் பாலைவனம் தானே..
அழியாமல் நீகாக்க வா
#13_ஐயா
வாவென்னும் நல்வரவும்
வாழ்க வளமுடனும்
போவென்றால் போகாப் பொருள்.
#14_நான்
பொருள்தேடத் தானே புறப்பட்டேன் என்றாய்
பொருளாய் இருப்பேன்நான் போ
#15_ஐயா
போவென்னும் சொல்லின் பொருள்நான்
பொருளதுவும்
போவென்றால் போகாத போக்கு.
#16_நான்
போக்குவதைப் போக்கி பொறுமையுடன் காத்தயெமைக்
கோர்த்திடவா உள்ளதைக் கொண்டு.
#17_ஐயா
கொண்டுவந்த தொன்றுமில்லை கொண்டுசெல்லும் பண்பொன்றைக்
கண்டேன் அது-அன்பு காண்.
#18_நான்
காணும் விழிகொண்டே கைவிலங்கு போட்டபின்புப்
பேணும் கலைகற்றோர் பெண்
#19_ஐயா
பெண்னெனும் பண்பின் பெருமிதம் தாய்மைஅப்
பண்புள்ளே பேராண்மை பார்.
#20_நான்
பார்த்த முதல்நொடியே பற்றிய வேகத்தில்
வார்த்த கவிதைபோல் வா
ஓ....வானமே மனம் மாறாயா
ஓ....#வானமே_மனம் மாறாயா
மழைநீராய் நீயும் எனைத் தீண்டாயா
பாலை நெஞ்சில் விழ மாட்டாயா?
பொழில்சோலை பூக்கும் வரம் தாராயா...
ஓகோ ஓகோகோ ஓககோ
ஓகோ ஓகோகோ ஓககோ
கண்ணாலே கொய்கிறாயே
கையாலே நெய்கிறாயே
பேசாதே கொல்கிறாயே
வாராயோ அன்பே..
புவித் தீட்டா ஓவியம் நீயே
புதுத் தூரிகை ஆகிட வா
சிலை ஆகாக் காவியம் நீயே
கலைக் கோபுரம் ஆக்கிட வா
செ. இராசா
(புதிய மெட்டுக்கு எழுதிய பாடல் வரிகள்)
05/07/2021
நெஞ்சினிலே
வள்ளுவர் திங்கள் 166
03/07/2021
நெற்றிக்கண் திறப்பினும் --- வெண்பாவில் வாதம்
#நெற்றிக்கண்_திறப்பினும்
#வெண்பாவில்_வாதம்
#சிவனின்_வினா_1
என்பாட்டில் குற்றமென்றோன் எங்குள்ளான் இச்சபையில்
என்முன்னே வந்திடடா இங்கு!
#அரசனின்_பதில்_2
பண்புடன் பேசுங்கள் பாட்டுடைப் பாவலரே
கண்ணியம்தான் இச்சபையின் காப்பு
#சிவனின்_வினவல்_3
சீற்றத்தைத் தூண்டாதே செண்பகப் பாண்டியா..
கூற்றினைக் கூறியதார் கூறு
#பாண்டியனின்_பதில்_4
ஐயாப் புலவரே ஆத்திரம் வேண்டாமே..
பொய்யாப் புலவரிவர் பார்
#சிவனின்_நையாண்டி_5
அரசன் இருக்க அதிகாரம் எங்கோ?
முரணாய் இருக்குதே மாண்பு
#புலவர்களின்_பதில்_6
நற்றமிழ் சங்கத்தில் நக்கீரர் தானய்யா
கற்றோரில் மூத்த கவி
#சிவனின்_நேரடிக்_கேள்வி_7
நீர்தான் பெருங்கவியாய் நிற்கின்ற ஓர்கவியோ...!!
கோர்த்திட்ட குற்றமென்ன கூறு
#நக்கீரர்_பதில்_8
கோர்த்திட்ட பூவால்தான் கூந்தலிலே வாசமெல்லாம்
வார்த்துள்ளீர் மாறுபொருள் வைத்து
#சிவனின்_வாதம்_9
உயர்சாதிப் பெண்களுக்கும் உன்கூற்று மெய்யோ?!
உயிர்நீக்கும் நெற்றிக்கண் ஓய்!
#நக்கீரனின்_நச்சென்ற_பதில்_10
எம்மை எரித்தாலும் எம்வாக்கில் பொய்யில்லை
எம்மயிரும் ஓர்மயிரே இங்கு
செ. இராசா





