08/07/2021

சென்னை 1995 -- முதல் பயணமே கோட்டைக்கு

 



#சென்னை_1995

#முதல்_பயணமே_கோட்டைக்கு

இப்போதெல்லாம் உலகமே நம் கைக்குள் சுருங்கிவிட்டது. ஆனால், அன்றைக்கு என்னைப்போன்ற தென் மாவட்ட கிராமவாசிகளுக்கு சென்னை போவதென்பது பெரும் கனவாகவும் இலட்சியமாகவும் இருந்தது. என் தந்தையார் அடிக்கடி சென்னைப்போய் வந்த அனுபவங்களை எங்களிடம் பகிரும்போது அவ்வளவு பிரமிப்பாய் இருக்கும். நான் என் தந்தையிடம் என்னையும் அழைத்துச் செல்ல பலமுறை நச்சரித்ததால் ஒருவழியாக சம்மதித்தார்.

1995, நான் பத்தாவது தேர்வெழுதி விடுமுறையில் இருந்தேன் என்று நினைக்கின்றேன். மதகுபட்டியில் சரியாக மாலை 7 மணிக்குக் கிளம்பிய நாங்கள் சென்னைக்கு செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தோம். ஒவ்வொரு நிறுத்தத்திலும் சென்னை வந்தாச்சா சென்னை வந்தாச்சா என்று அப்பாவிடம் கேட்டுக்கொண்டே நாங்கள் காலை 7 மணிக்கு சென்னை சென்றபோது நான் நன்றாகத் தூங்கிவிட்டேன். முதலில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள பெரியப்பா வீடு சென்றோம். எங்க பெரியப்பா 8 வயதிலேயே மலேசியாவில் குடியேறி அங்கேயே குடியுரிமை வாங்கியுள்ளவர் என்பதால், அவருடைய வீடும் அதற்கேற்றாற்போல் தான் இருந்தது. ஏறக்குறைய வெளிநாடு வந்ததுபோல்தான் உணர்ந்தேன். அவர்கள் நாக்கில் ஆங்கிலம் சர்வ சாதாரணமாக வருவது எங்கள் அனைவருக்கும் ஒரு மிரட்சியையே கொடுத்தது எனலாம். அவர்கள் வீட்டில் காலைச் சாப்பாடு முடித்துவிட்டு, எங்க ஊர் MLA முருகானந்தம் அவர்களைப்பார்க்க அப்பா அவரின் விடுதிக்கு அழைத்துச் சென்றார். என் அப்பா அன்று முதல் இன்றுவரை அவருடன் நல்ல நட்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MLA என்றால் மிகப்பெரிய வீட்டில் இருப்பார்கள் என்று நினைத்தால் அங்கே இரும்புக் கட்டில் போட்ட சிறு அறையில்தான் இருந்தார்கள். அங்கே மற்றவர்கள் தங்கவெல்லாம் இடமில்லை. ஆனாலும் எங்களை அங்கேய ஒருநாள் இருக்கச் சொன்னார்கள். அடுத்தநாள் சட்டசபைக்கு போகும் பாஸ் தருவதாகச் சொன்னார்கள். எனக்கு அதுபற்றியெல்லாம் எதுவுமே தெரியாது. அன்றைய பகல் பொழுதில் என் அப்பா அன்றைய பொதுப்பணித்துறை அமைச்சர் கண்ணப்பன் (இன்றைய போக்குவரத்துத் துறை) அவர்களைப் பார்க்க அழைத்துச் சென்றார்கள். ஒரு காலத்தில் என் தந்தையார் அவரின் வலது கரமாக இருந்தார். அது முடிந்தவுடன் மெரினா கடற்கரை எல்லாம் காண்பித்துவிட்டு மீண்டும் MLA விடுதி வந்து நன்றாக ஓய்வெடுத்தோம்.

மறுநாள் காலை சென்னை ஜெயின் ஜியோர்ஜ் கோட்டைக்கு சட்டசபை கூட்டம் காண திட்டமிட்டபடி அப்பா அழைத்துச் சென்றார்கள். வெளியே நிறைய சோதனையெல்லாம் செய்து உள்ளே அனுப்பிவைத்தார்கள். பார்வையாளர் மாடம் மேலே இருந்தது. கீழே சிகப்புக் கம்பளம் விரித்த இடத்தில நிறைய பெஞ்சுகளாய்ப் போடப்பட்டு கீழே நிறைய பேர் அமர்ந்திருந்தார்கள். அப்போது முதலமைச்சர் வருகிறார் என்று சொல்லி அனைவரும் எட்டிப் பார்த்தார்கள். புரட்சித்தலைவி வாழ்க என்கிற கோசம் வந்தது. நானும் எட்டிப்பார்த்தேன். நல்ல சிகப்பு நிறத்தில் அங்கி அணிந்தவாறு அவரின் உருவம் தெரிந்தது. "அப்படியெல்லாம் நிற்கக்கூடாது, எல்லோரும் அமருங்கள்" என்று அவ்வப்போது காவலாளி எச்சரித்தார். எனக்கென்னவோ அவர்கள் பேசுவது ஒன்றுமே புரியவில்லை. அப்பாவை நச்சரித்து அங்கிருந்து கிளம்பினோம். ஆம், அன்றைக்குத் தெரியவில்லை நாம் பார்த்த இடம் எவ்வளவு வரலாற்று முக்கித்துவம் வாய்ந்த இடமென்று....இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்கிறது.

மனமார்ந்த நன்றி அப்பா.

✍️செ. இராசமாணிக்கம்

No comments: