06/06/2017

நம்ம தல தோனி



இளம் வயதில்
முதல் வேலை
இந்தியன் இரயில்வேயில்...

ஒரு பக்கம் பணி ஓட்டம்
மறு பக்கம் கிரிக்கெட் ஆட்டம்
இரண்டிலுமே கால்வைத்து
இளைப்பாற நேரமில்லை...

ஒரு சமயம் பணியினிலே .
பிறர் செய்த தவறொன்று
தன்தலையில் விழுந்துவிட...
பழிச்சொல்லின் வார்த்தைகள்
இளநெஞ்சில் தைத்துவிட....
இடிவிழுந்த மரம்போல
இதயத்திலே ஐயத்துடன்
இனியென்ன செய்வதென?
பலவாறு தான் குழம்பி
பலநேரம் தனிமையிலே
பலகையிலே அமர்ந்திருந்தார்...

பக்கத்திலே ஓர் உருவம்
பகவானாய் வந்தமர்ந்து
வாழ்க்கையின் விளையாட்டை
விளையாடும் வழியதனை
ஒவ்வொன்றாய் கூறியது;

வாழ்க்கையும் கிரிக்கெட்டும்
விளையாடும் முறையொன்றே!
பிரச்சனைகள் பந்துகளாய்
பறந்தே வந்துவிடும்!
ஒவ்வொன்றும் ஒருவிதமாய்
யுக்தியுடன் ஆட வேண்டும்!

சில பந்தை அடித்திடனும்...
சில பந்தை தவிர்த்திடனும்..
தவிர்க்கும் பந்துகளை
அடித்திட நினையாதே!
அடுத்திடும் பந்துகளை
கணித்திட மறவாதே!

சிலநேரம் பிறர்நேரம்
சிரமத்தை பொறுத்துவிடு!

உன்நேரம் வரும்நேரம்
உதிரத்தில் சக்தியினை
உடனடியாய் கூட்டிவிடு!

மூத்தவர் கங்குலியின்
வார்த்தைகள் ஒவ்வொன்றின்
உள்ளர்த்தம் புரிந்ததுமே
உள்ளத்திலே பதித்துவிட்டார்
உயரத்தையும் அடைந்துவிட்டார்....

தலைமையைத் துறந்தாலும்
தலையினில் ஏற்றாத
தன்மையால் என்றென்றும்
தலையாய்த் திகழ்கின்றார்...

நம்ம தல தோனி.....

தொக்கி நிற்கும் கேள்விகள்



நாலுபேரு சொல்லிவிட்டால்
பொய்யும் மெய்யாகுமா?
காசுபணம் கூடிவிட்டால்
நட்பும் எதிர்ப்பாகுமா?


பொறாமையும் போட்டியும்
குடும்பத்தில் வேண்டுமா?
பொல்லாங்கு சொல்லுதல்
எவருக்கும் அடுக்குமா?

பெரியண்ணன் சொல்வதெல்லாம்
வேத வாக்காகுமா?
பெருங்குடும்பம் கலைந்துவிட்டால்
மரியாதை கிடைக்குமா?

உணவினை தடுப்பது
அறச் செயலாகுமா?
உறவினை கெடுப்பது
மறப் பண்பாகுமா?

நண்பனின் நண்பனாய்
இருந்திடல் வேண்டாமா?
நம்பினோர் வயிற்றினில்
அடித்திடல் நியாயமா?

வாழ்வின் சக்கரமும்
சுழல்வது தெரியுமா?
வாழ்வதும் வீழ்வதும்
கணித்திட முடியுமா?

05/06/2017

போதை


மயக்கும் கள்ளும் போதை!
நயக்கும் சொல்லும் போதை!

குருட்டு பக்தியும் போதை!
திருட்டு உறவும் போதை!

அளவில்லா பணமும் போதை!
அதிகாரப் பதவியும் போதை!

கர்வம்தரும் கல்வியும் போதை!
கண்ணைக்கட்டும் களிப்பும் போதை!

அகங்கார அறிவும் போதை!
அலங்காரப் பெண்ணும் போதை!

எந்நேரம் முகநூல் போதை!
எழுதுகின்ற கவிதை போதை!

சிலநேரம் கிரிக்கெட் போதை!
பலநேரம் சினிமா போதை!

சிலருக்கோ கணினி போதை!
பலருக்கோ கைப்பேசி போதை!

'திராவிடம்' சொல்லே போதை!
தமிழனுக்கு தமிழே போதை!

தமிழனின் மறதியும் போதை!
தனிமனிதத் துதிகளும் போதை!

அளவை மீறும் அனைத்தும் போதை!
அறிவை மயக்கும் அனைத்தும் போதை!

முகநூல் விண்ணப்பம்



 ஒருநாளில் பலநேரம்
பலநாளில் சிலநேரம்
முகநூலில் கழிக்கின்றேன்!

பலநூல்கள் கற்காமல்
மின்நூல்கள் துணையோடு
அறநூல்கள் சிலபயின்று
முகநூலின் பயிற்சியினால்
கவிநூலைத் தொகுத்திடவே..
மனநூலில் போட்டுள்ளேன்!

என்நூலும் என்றேனும்
தனிநூலாய் வெளிவரவே...
தமிழ்நூலில் அந்நூலும்
நன்நூலாய் சிறந்திடவே...
முகநூலின் நண்பர்களை
இந்நாளில் வேண்டுகின்றேன்!🙏🙏

யாரேனும் சொல்வீர்களா?/ முதியவரின் ஏக்கம்


தம்மக்கள் அனைவருமே
தலைநிமிர்ந்து நடந்திடவே
என்நேரம் உழைத்தவனை
ஏணியாய் இருந்தவனை
உறவுகள் மறந்திடுமா...?!

விண்ணோடு சென்றவிட்ட
என்னோட மனையாளின்
அன்பான தருணங்கள்...
அழியாத நினைவலைகள்
அதுமட்டும் மருந்தாகுமா....?!

உதிரத்தின் சொந்தங்கள்
எமைவந்து பார்த்திடவே
இருநூறு முறை வேண்டி
இருவிழிகள் தேடிடுதே
என்றேனும் வருவார்களா?!

இருநாட்கள் தங்கிவிட்டால்
அந்நாட்கள் நினைவினிலே
எந்நாளும் வாழ்ந்திடுவேன்
இவ்வுண்மைச் சேதியினை
யாரேனும் சொல்வீர்களா?!


(Photo courtesy Mr. Jegan Nath)

04/06/2017

முகநூல் விண்ணப்பம்



ஒருநாளில் பலநேரம்
பலநாளில் சிலநேரம்
முகநூலில் கழிக்கின்றேன்!

பலநூல்கள் கற்காமல்
மின்நூல்கள் துணையோடு
அறநூல்கள் சிலபயின்று
முகநூலின் பயிற்சியினால்
கவிநூலைத் தொகுத்திடவே..
மனநூலில் போட்டுள்ளேன்!

என்நூலும் என்றேனும்
தனிநூலாய் வெளிவரவே...
தமிழ்நூலில் அந்நூலும்
நன்நூலாய் சிறந்திடவே...
முகநூலின் நண்பர்களை
இந்நாளில் வேண்டுகின்றேன்.....

03/06/2017

தற்பெருமை


தமிழ்மறைப் பெரும் புலவன்
தன்புகழைப் பாடிடவே- ஓர்
தனிக்குறளும் படைக்கவில்லை!
தனக்காகத் தன்னாலே
தனிப்பெயரும் வைக்கவில்லை!

ஞானத்தின் கருத்தெல்லாம்
ஞாலத்தின் பார்வைக்கு
ஞானியவன் தந்தபின்னும்
தன்நாமம் இதுவென்று
எங்கேயும் கூறவில்லை!

இங்கேயாம் இரு வரிகள்
இணைத்தேதான் எழுதிவிட்டால்
இளங்கவிஞர் எண்றெண்ணி
இறுமாப்பு கொள்கின்றோம்...
இருபுருவம் உயர்த்துகின்றோம்..

தற்பெருமை கொள்ளாத
தன்மையை யாம்கற்றிடவே
தரணிக்கு புரியவைத்த
தமிழன்னைத் தலைமகனைத்
தலைதாழ்த்தி வணங்கிடுவோம்!

தற்பெருமைக் குணமதனைத்
தலையினிலே ஏற்றாது
தமிழ்க்கிழவன் வழிநின்று
தனியாகத் தெரிந்திடுவோம்!
தமிழ்போல நிலைத்திடுவோம்!

சென்னை சில்க்ஸ்- உமக்கு எம் நன்றிகள்




இடம் தீயால் எரிந்தபின்னும்
இடர் தீயின் அனல் பொருத்து
இறைத் தீயின் வினையென்றே
இத்தீயை நீர் நினைத்து-உம்
இதயத் தீயில் நீரிறைத்தீர்!

கடைத் தீயால் ஊழியர்கள்
பயத் தீயால் மனதினிலே
பசித் தீயை நினைத்தார்கள்!
கொடும் தீயது பற்றாது
உளத் தீயினில் நீரிறைத்தீர்!

வாழ்வீர் நீர் பல்லாண்டு!
மீள்வீர் நீர் பலத்தோடு!

சாமிக்குள் சாதி




ஒரு ஊரின் நடுவினிலே
கண்ணன் சாமி கோவில்!
கண்ணன் சாமி ஆட்டம் பார்க்க
ஒரே பக்தி கூட்டம்!


கழுத்தெல்லாம் மாலைகளாய்
ஒவ்வொன்றாக வீழும்!
குழந்தைகளும் குமரிகளும்
கன்னங்களில் போடும்!

அதே ஊரின் மறுதிசையில்
முனி சாமி கோவில்!
அந்த சாமி ஆட்டம்பார்க்க
அங்கும் ஓரு கூட்டம்!

முக்தியேறி போன முனி
ஊரச் சுத்தி வருது..
காலில் விழும் அனைவருக்கும்
ஆசிகளைத் தருது...

ஆடிவந்த முனிசாமி
கண்ணன்சாமியப் பார்க்க...
கண்களிலே பேசியதும்
கரங்கள் நான்கும் கோர்க்க....

இதைப்பார்த்த ஒரு மனுசன்
குய்யோ...முறையோன்னு கத்த....
என்னவென்று விளங்கவில்லை
சிறுவர்களுக்கு மட்டும்...

சாமிகளில் சாதியென்றும்
சாதிபார்க்கும் சாமியென்றும்
எதுவுமில்லை மக்கா...
எங்குமில்லை மக்கா...

கார்ப்பரேட் வேலை




கார்ப்பரேட் முதலைகளின்
காட்டுதர்பார் கண்டோர்....
கொடுங்கோலன் ஹிட்லர்கூட
பரவாயில்லை என்பர்!


காளைமாட்டில் பால்கறக்க
முடிந்தாலும் முடியும்....
கார்ப்பரேட்டில் விசுவாசம்
எந்நாளும் வேசம்!

பொதிசுமக்கும் கழுதைங்கதான்
கம்பெனியின் செல்வம்!
பொதுவுடைமை கதைத்தாலோ
கட்டம் கட்டப்படுவோம்!

பல்லாக்கு தூக்குபவன்
பதவிஉயர்வு பெறுவான்!
பணிநன்றாய் பார்ப்பவனோ
வாழ்த்துமட்டும் பெறுவான்!

போட்டுக்கொடுக்கும் அனைவருமே
நிறுவனத்தில் தங்கம்!
பொறுமைகாக்கும் அன்பர்களோ
பொழுதுப்போக்கும் தெண்டம்!

விடுமுறைன்னு போயிநின்னால்
தள்ளிப்போடு என்பான்!
விருப்பமான வேலைக்காரன்
நாமதான்னு சொல்வான்!

சம்பளத்த ஏத்தச்சொன்னால்
சரித்திரங்கள் சொல்வான்!
வரும் ஆண்டில் செய்வதாக
வாயில்வடை சுடுவான்!

பேப்பர்யாரும் போட்டுவிட்டால்
போய்விடாது தடுப்பான்!
உண்மையாக உழைப்பவனை
உடனேபோ என்பான்!

கார்ப்பரேட்டில் கருணையினை
என்னவிலை? என்பர்!
கருவாட்டில் புது ரத்தம்
எங்கே? எனக் கேட்பர்!