08/12/2022

எதையோ தொலைச்சுபுட்டு துடிக்கிறேன்‌..

எதையோ தொலைச்சுபுட்டு துடிக்கிறேன்‌..
எதுன்னு புரியாமல் தவிக்கிறேன்...
அதையே நினைச்சுகிட்டு புலம்புறேன்..
அதுன்னு தெரியாமல் கலங்குறேன்..
 
ஏன்னு தெரியல
......எனக்கும் புரியல
காலம் கனியல
......நேரம் அமையல
 
அண்ணா மலை சாமி- நான்
என்ன செய்ய show me......ஏய்
அல்லேலுயா சாமி- நான்
அச்சா நகி Save me.....
 
✍️செ. இராசா

திருமாவளவன்

 


*பல்லவி*
************
அன்புக்குத்தான் கரங்கொடுப்போம்
அடக்கவந்தா எகிறிடுவோம்
அனைவருமே சரிசமம்தான் அண்ணாத்த...
உரிமைக்குத்தான் குரல்கொடுப்போம்
உறவுக்காக கைகொடுப்போம்
 
அதிலயென்ன தவறிருக்கு அண்ணாத்த...
தலைவரோட பாதையில அண்ணாத்த
தலைநிமிர்ந்து நடைநடப்போம் அண்ணாத்த
அண்ணலோட பாதையில அண்ணாத்த
அண்ணனோடு நடைநடப்போம் அண்ணாத்த- திருமா
அண்ணனோடு நடைநடப்போம் அண்ணாத்த
 
*சரணம்-1*
***********
கீழ மேல என்று பேசுறது யாருங்க
வேலை வெட்டியின்றி பொழைக்குமந்த கூட்டங்க
சாதி பேரச் சொல்லி சாடுறது யாருங்க
வானம் பார்த்தபடி துப்புகின்ற கூட்டங்க...
நீயும் நானும் இங்கே
வந்தவழி எங்கேங்க?
அன்னைவழி தானே
வந்தோமுனு சொல்லுங்க..
தலைவரோட பாதையில அண்ணாத்த
தலைநிமிர்ந்து நடைநடப்போம் அண்ணாத்த
அண்ணலோட பாதையில அண்ணாத்த
அண்ணனோடு நடைநடப்போம் அண்ணாத்த- திருமா
அண்ணனோடு நடைநடப்போம் அண்ணாத்த
 
*சரணம்-2*
*************
வீறு கொண்ட வேகம் போகுறதப் பாருங்க
நாமும் கூடநின்னு ஒத்துழைக்க வேணுங்க
கொண்ட கொள்கைக்காக தன்னைத் தந்ததாருங்க?
ஐயா திருமாதான் வாழும் காமராஜருங்க...
மேல மேல ஏறிப்
போகவழி என்னங்க?
அண்ணல் சொன்ன படியே
படிக்கிறது தானுங்க...
தலைவரோட பாதையில அண்ணாத்த
தலைநிமிர்ந்து நடைநடப்போம் அண்ணாத்த
அண்ணலோட பாதையில அண்ணாத்த
அண்ணனோடு நடைநடப்போம் அண்ணாத்த- திருமா
அண்ணனோடு நடைநடப்போம் அண்ணாத்த
 
 
சமத்துவமே சரித்திரமே
.....தலைவனிலோர் தனித்துவமே!
அமரனுமே உயரனுமே
.....அண்ணலைப்போல் அடையனுமே!
சமயமெல்லாம் தெளியனுமே
......சகலருமே சரிசமமே!
சுமந்ததெல்லாம் புரியனுமே
..... சூழ்நிலைய ஜெயிக்கனுமே...
 
வந்தாரு வந்தாரு அண்ணன் வந்தாரு- எங்க
அண்ணன் வந்தாரு....
அண்ணலோட பாதையிலப் போகச் சொன்னாரு
---மெதுவாப் போகச் சொன்னாரு
அப்புறமும் கேட்கலைன்னா மீறச் சொன்னாரு
---அத்து மீறச் சொன்னாரு

07/12/2022

சட்டை

 

அரைக்கை சட்டை
முழுக்கை சட்டை
பொத்தான் வச்ச சட்டை
பொத்தானே இல்லாத சட்டை
பருத்தி சட்டை
பட்டுச் சட்டையென்று
சட்டைகளாய் வாங்குகிறோமே
சட்டையின் வரலாறுபற்றி என்றாவது
சட்டை செய்திருக்கிறோமா?!
 
நம் மன்னர்கள் உட்பட
முன்னோர்கள் யாரும்
சட்டையே போட்டதில்லையாம்..
சந்தேகமெனில்...
தஞ்சாவூர்வரை வந்த
மார்க்கோபோலாவைக் கேளுங்கள்...
 
அட..
அவ்வளவு ஏங்க...
அடிக்கிற வெயிலுக்கு
சட்டை எதுக்குன்னு
சட்டை போடாத நம்மாள பார்த்து
சட்டையே போடமாட்டேன்னு
சட்டையைத் துறந்தாரே காந்தி...
அதை என்ன சொல்றீங்க?
 
ஆங்கிலேயன் வந்ததும்
அங்கி மட்டுமா வந்துச்சு?!
சாதிக்கு உள்ளேயும்
சட்டை வந்துச்சு...
 
ஒருத்தன் சட்டைய மேல போட்டால்
அவன் மேலயாம்...
அவனே சட்டைய அக்குள்ள வச்சால்
அவன் கீழயாம்... 
 
இவ்வளவு ஏன்?
சில சாதிப்பெண்கள் சட்டைபோட
வரி கேட்ட வரலாறு தெரியுமா?
 
எப்படித் தெரியும்?
 
பண்டிகைக்கு மட்டும் சட்டை தச்ச
நமக்கே தெரியாதப்ப
பணமிருந்தாலே சட்டை வாங்குற
நம்ம பசங்களுக்காத் தெரியப்போகுது?
 
✍️செ. இராசா

05/12/2022

சிந்தையெழும் நேரமெல்லாம் சிங்கம் ஆகிறேன்

 


சிந்தையெழும் நேரமெல்லாம்
......சிங்கம் ஆகிறேன்!
விந்தைசெயல் செய்வதற்கே
......வீறு கொள்கிறேன்!!
முந்தையதைத் தாண்டிடவே
......முயன்று பார்க்கிறேன்
பந்தயத்தை வென்றிடவே
......பதுங்கிப் பாய்கிறேன்!
 
நண்பரென்று நம்பிநம்பி
.....நானும் செல்கிறேன்!
உண்மையில்லை என்றதுமே
.....உள்ளம் நோகிறேன்!
சொந்தமென்று பந்தமென்று
.....தோளில் வைக்கிறேன்!
வந்தபின்னே தள்ளிவிட்டால்
.....வாடிப் போகிறேன்!
 
சோகமென்ன சோகமென்று
....சோர்வைப் போக்கியே
தாகமுள்ள காளையைப்போல்
.....தாண்டப் போகிறேன்!
சாகுமுன்னே யாருயென்று
......சான்று காட்டவே
ஆகுமுன்னே சொல்லிடாமல்
...... அன்று சொல்லுவேன்- அதை
.......வென்று சொல்லுவேன்!
 
✍️செ. இராசா

ஔவைத் திங்கள் - 19 (உன்னையே நீ அறிவாய்)

 


தன்னை உணராமல் தற்குறிபோல் பேசுபவர்
தன்னால்தான் வீழ்வர் தனித்து!
(1)
 
அகத்தவம் செய்யாமல் ஆர்ப்பரிக்கும் பேர்க்கு
சகம்போகும் போக்கு தவறு!
(2)
 
தன்குடும்பம் தானென்று தன்னெல்லை தாண்டாதோர்
முன்னேறிச் செல்லார் முயன்று!
(3)
 
அன்பை விரிக்க அகிலத்தை நேசிக்க
தன்னைப் பழக்கும் தவம்!
(4)
 
சங்கரர் சொன்னதும் சாக்ரடீஸ் சொன்னதும்
தங்களைத் தானறிதல் தான்!
(5)
 
மோனத்தில் உட்கார்ந்து மூலத்தை ஆராய்ந்தால்
ஞானவொளி காட்டும் வழி!
(6)
 
வந்தவழி எண்ணி வரும்வழியை சீராக்கி
அந்தவழிச் செல்லல் அழகு!
(7)
 
தானே பெரிதென்று தம்பட்டம் செய்பவர்கள்
வீணே எனப்போவர் வீழ்ந்து!
(8)
 
தன்னை மதியார்முன் தானென்றும் செல்லாமல்
தன்நிலையில் நிற்றல் தரம்!
(9)
 
தன்னை மதியாமல் தானே நடந்துகொண்டால்
என்செய்வர் மற்றோர் இயம்பு?!
(10)
 
✍️செ. இராசா

03/12/2022

பூரி வெண்பா

 


வார்த்த வடிவுகண்டு
.....வாயிடுக்கில் நீரூற
கோர்த்த விரல்கூடிக்
.....கொஞ்சியுள்- சேர்க்கும்முன்
செஞ்ச மசாலாவைச்
.....செல்லமாய்த் தொட்டனுப்பப்
பஞ்சாய் பறக்கும்
.....பசி!
✍️செ. இராசா

01/12/2022

இந்த விளையாட்டுக்கும் எனக்கும்

 

இந்த விளையாட்டுக்கும் எனக்கும்
எந்த சம்பந்தமும் இல்லை...
காரணம்..
இந்த விளையாட்டைக் காண
எனக்கு எந்தத் தகுதியுமில்லை..
இந்த விளையாட்டில் பங்கேற்க
எம் நாட்டிற்கும் தகுதியில்லை..
 
என்ன சொல்கிறாய்?!
 
நீங்களே சொல்லுங்கள்...
அந்தக் காலத்தில்
இந்த மாதிரி விளையாட்டுகளில்
கண்ணாடி போட்டவர்களால்
கலந்துகொள்ள முடியுமா?
அப்படியே கலந்துகொண்டாலும்
கண்ணாடி உடைந்துவிட்டால்
உடனே வீட்டில் வாங்கித் தருவார்களா?
 
எனில்...
கண்ணாடிதான்
உன் விளையாட்டைத் தடுத்ததா?!!
இதெல்லாம் வெறும் சப்பைக்கட்டுகள்..
இப்போதேன் காண வந்தாய்?
 
When you are in Rome,
Be Romanian
அதாவது...
ரோமில் இருக்கும்போது
ரோமானியனாய் இரு என்பார்கள்
அதற்காக...
கத்தாரில் இருக்கும்போது
கத்தாரியாக இருக்க முடியுமா?
அதெப்படி?
அதுபோல்தான் நானும்
என்னதான் நான் போனாலும்
எனக்கிதில் எந்த சம்பந்தமும் இல்லை...
 
எனில் ஏன் போகிறாய்...?!!
 
ஆடுபவர் ஒருபக்கம்..
ஆட்டுவிப்பவர் மறு பக்கம்..
ஓடுபவர் ஒருபக்கம்..
ஒத்தூதுபவர் மறுபக்கம்...
அட...
சாட்சியாய் இருப்பதற்கு
சம்பந்தம் தேவையா என்ன?!!
ஆம்‌..
வெறும் சாட்சியே நான்...
 
✍️செ. இராசா

29/11/2022

பந்து

  


#பந்து

கைகளால் அடித்தால் கைப்பந்தாம்
கால்களால் உதைத்தால் கால்பந்தாம்
கூடைக்குள் தள்ளினால் கூடைப்பந்தாம்
மட்டையால் விளாசினால் மட்டைப்பந்தாம்
ஆமாம்....
அது ஏன் பந்தை மட்டுமே வைத்து
இத்தனை விளையாட்டுகள்?!

ஒருவேளை
நாம் பூமிப்பந்தில் இருப்பதாலா?!
இருக்கலாம்....

சந்தேகமா?!
மேலே பாருங்கள் சூரியப்பந்து
அதோ...நிலாப்பந்து
அட..அத்தனைக் கோள்களுமே பந்துதானே..

அது மட்டுமா?
அம்மாவின் அண்டத்தில்
கருப்பந்தாய் தோன்றி
உருப்பந்தாய் உடலாகி
பனிக்குடப் பந்தில் பிறந்தோமே...
ஞாபகமில்லையா?!!

ஆம்...
ஒவ்வொரு அணுவும்
ஒவ்வொரு செல்லும்
ஒவ்வொரு துளியும்
ஒவ்வொரு கனியும்
ஒவ்வொரு பந்துக்கள் தானே‌...

இங்கே...
நாம் ஆடுவது மட்டுமா பந்தாட்டம்?!
நம்மை வைத்தும் ஆடுகிறார்களே..
அதுவும் பந்தாட்டம்தானே?!

சொந்தங்களைக் கூட
பந்துக்கள் என்கிறார்களே...அது ஏன்?
பந்தாடப்படுவதலா?
இருக்கலாம்...

இந்தப் பந்தை வைத்துதான்
எத்தனை அரசியல்கள்?
எத்தனை சூதாட்டங்கள்?
எத்தனை கேலிகள்?
எத்தனை கிண்டல்கள்?
இவை எல்லாம் எதற்காக?
வெற்றி தோல்விக்காகவா?

இல்லை..
இல்லவே இல்லை..
நானும் உள்ளேனென்று காட்டவே...

✍️செ. இராசா

28/11/2022

ஔவைத் திங்கள்- 18 ------------- பணம் என்னடா பணம்


பணம்காசு பாராமல் பார்க்கின்ற நட்பில்
பிணக்கேதும் தோன்றாமல் பேசு
(1)
 
காசிற்கு மட்டாம் கலையென்று சொல்பவனை
தாசிபோல் வைப்பர் தரம்
(2)
 
அறமின்றி சேர்க்கின்ற அத்தனை காசும்
துறந்துவிடும் ஓர்நாள் துடைத்து
(3)
 
தேவைக்காய் சேர்த்தபின்னும் சேர்க்கின்ற செல்வங்கள்
பார்வைக்கே மட்டும் பணம்
(4)
 
கொடுக்கக் கொடுக்கத்தான் கூடிடும் என்பர்
எடுப்பதில் ஏதேனும் ஈ
(5)
 
பணம்பணம் என்றுசிலர் பைத்தியம்போல் ஓடி
கணம்கூட வாழ்வதில்லை காண்
(6)
 
பணவீக்கம் வந்தால் பணத்தின் மதிப்பும்
பிணவீக்கம் போல்தான் பிறகு
(7)
 
பணநோக்கில் மட்டும் பழகிடும் நட்பின்
குணநோக்கம் அறிந்து குறை
(8)
 
பேர்-ஆசை தூண்டிவிட்டு பேரங்கள் பேசிடுவோர்
பேராசை மாந்தரல்ல பேய்!
(9)
 
உறவுமுறை சொல்லி உருக்கமாய்ப் பேசிக்
கறப்போரின் எண்ணமெல்லாம் காசு
(10)
 
✍️செ. இராசா

27/11/2022

ஓட்டைப் புல்லாங்குழல்
நிரப்ப முடிகிறது
யாசகனின் பசி