#பந்து
கைகளால் அடித்தால் கைப்பந்தாம்
கால்களால் உதைத்தால் கால்பந்தாம்
கூடைக்குள் தள்ளினால் கூடைப்பந்தாம்
மட்டையால் விளாசினால் மட்டைப்பந்தாம்
ஆமாம்....
அது ஏன் பந்தை மட்டுமே வைத்து
இத்தனை விளையாட்டுகள்?!
ஒருவேளை
நாம் பூமிப்பந்தில் இருப்பதாலா?!
இருக்கலாம்....
சந்தேகமா?!
மேலே பாருங்கள் சூரியப்பந்து
அதோ...நிலாப்பந்து
அட..அத்தனைக் கோள்களுமே பந்துதானே..
அது மட்டுமா?
அம்மாவின் அண்டத்தில்
கருப்பந்தாய் தோன்றி
உருப்பந்தாய் உடலாகி
பனிக்குடப் பந்தில் பிறந்தோமே...
ஞாபகமில்லையா?!!
ஆம்...
ஒவ்வொரு அணுவும்
ஒவ்வொரு செல்லும்
ஒவ்வொரு துளியும்
ஒவ்வொரு கனியும்
ஒவ்வொரு பந்துக்கள் தானே...
இங்கே...
நாம் ஆடுவது மட்டுமா பந்தாட்டம்?!
நம்மை வைத்தும் ஆடுகிறார்களே..
அதுவும் பந்தாட்டம்தானே?!
சொந்தங்களைக் கூட
பந்துக்கள் என்கிறார்களே...அது ஏன்?
பந்தாடப்படுவதலா?
இருக்கலாம்...
இந்தப் பந்தை வைத்துதான்
எத்தனை அரசியல்கள்?
எத்தனை சூதாட்டங்கள்?
எத்தனை கேலிகள்?
எத்தனை கிண்டல்கள்?
இவை எல்லாம் எதற்காக?
வெற்றி தோல்விக்காகவா?
இல்லை..
இல்லவே இல்லை..
நானும் உள்ளேனென்று காட்டவே...
செ. இராசா
No comments:
Post a Comment