28/11/2022

ஔவைத் திங்கள்- 18 ------------- பணம் என்னடா பணம்


பணம்காசு பாராமல் பார்க்கின்ற நட்பில்
பிணக்கேதும் தோன்றாமல் பேசு
(1)
 
காசிற்கு மட்டாம் கலையென்று சொல்பவனை
தாசிபோல் வைப்பர் தரம்
(2)
 
அறமின்றி சேர்க்கின்ற அத்தனை காசும்
துறந்துவிடும் ஓர்நாள் துடைத்து
(3)
 
தேவைக்காய் சேர்த்தபின்னும் சேர்க்கின்ற செல்வங்கள்
பார்வைக்கே மட்டும் பணம்
(4)
 
கொடுக்கக் கொடுக்கத்தான் கூடிடும் என்பர்
எடுப்பதில் ஏதேனும் ஈ
(5)
 
பணம்பணம் என்றுசிலர் பைத்தியம்போல் ஓடி
கணம்கூட வாழ்வதில்லை காண்
(6)
 
பணவீக்கம் வந்தால் பணத்தின் மதிப்பும்
பிணவீக்கம் போல்தான் பிறகு
(7)
 
பணநோக்கில் மட்டும் பழகிடும் நட்பின்
குணநோக்கம் அறிந்து குறை
(8)
 
பேர்-ஆசை தூண்டிவிட்டு பேரங்கள் பேசிடுவோர்
பேராசை மாந்தரல்ல பேய்!
(9)
 
உறவுமுறை சொல்லி உருக்கமாய்ப் பேசிக்
கறப்போரின் எண்ணமெல்லாம் காசு
(10)
 
✍️செ. இராசா

No comments: