06/09/2022

அவன் அடங்காதவன்...

 


ஆம்...அடங்காதவன்தான்
எந்த அமைப்பிற்குள்ளும் அடங்காதவன்....
 
ஆம்...விளங்காதவன்தான்
எந்தப் பழமைவாதிக்கும் விளங்காதவன்...
 
ஆம்...கர்வமுள்ளவன்தான்
தான் தமிழனென்ற கர்வமுள்ளவன்..
 
ஆம்...பைத்தியக்காரன்தான்
துக்கத்திலும் சிரிக்கின்ற பைத்தியக்காரன்...
 
ஆம்...#சரியான கிறுக்கனேதான்...
இதிலென்ன சந்தேகம்....?!!
 
✍️செ. இராசா

தாலி

 


இருமனக் கூட்டணியின்
திருமண ஒப்பந்தத்தில்
அட்சதைகள் அங்கீகாரமிட
அடையாள அட்டை வழங்கப்படுகிறது...
இதை அணிவிக்கும் பங்குதாரர்
அதை அணிந்திடத் தேவையில்லை...
மற்றவர்க்கு மட்டும்தான்
இந்த மஞ்சள் நிற உடன்படிக்கை..
ஆனாலும்
அணிவித்தவரின் காலவிதியில் தான்
அந்த அட்டையின் காலா வதியும் உள்ளது!
எனில்;
அதற்குள் நாம் ஏன் அறுக்க வேண்டும்?!
 
ஜாக்கிரதை...
சில வீரமில்லா மணிகளிடம் மட்டும்....
 
✍️செ. இராசா

05/09/2022

ஔவைத் திங்கள் 007 சாதிகள் இரண்டு

 

சாதிகள் இல்லையென்று சத்தியம் செய்துவிட்டு
சாதிபார்த்தே ஊதிடுவர் சங்கு.
(1)
 
வர்ணங்கள் தப்பென்று வக்கணையாய்ப் பேசிவிட்டு
வர்ணக் கொடிபிடிப்பர் வந்து.
(2)
 
சாதிக் கொடுமையென்று சார்ந்தமதம் விட்டபின்னர்
சாதிச் சலுகையேன் சொல்?
(3)
 
காசுபணம் உள்ளதெனில் கண்டுகொள்ளார் சாதியினைப்
பேசுபொருள் ஆக்குகிறார் பின்பு!
(4)
 
சாதியை வேரறுத்த சாட்சியாம் என்பவரும்
சாதிக்கேத் தந்திடுவார் சீட்டு!
(5)
 
தப்பொன்று செய்துவிட்டு தண்டனைக்குத் தப்பிடவா
செப்புகிறார் ஓரினமாய்ச் சேர்ந்து?
(6)
 
பிரிவினை மூலம் பிரித்தாளும் கூட்டம்
தெரிந்தே செய்யும் வினை!
(7)
 
இனமத பேதமெனும் எல்லாமும் தாண்டி
இணக்கமாய் வாழ்ந்தால் இனிது!
(8)
 
தருபவர் மேலோர் தராதவர் கீழோர்
இருசாதி தானென்பார் இங்கு!
(9)
 
இருப்போர் இருப்பில்லார் என்பதைக் கொண்டே
இருசாதி என்றுரைப்போம் யாம்!
(10)
 
✍️செ. இராசா



02/09/2022

ஓஷோ ரஜனீஷ் அவர்களுக்காக பாடல்

 



மதங்களைக் கடந்த மனிதன் ஐயா - நீர்
மலர்களைப் போன்ற புனிதன் ஐயா
கணம் கணம் வாழ்ந்த கவிஞன் ஐயா- நீர்
கனங்களைச் சுவைத்த ருசிஞன் ஐயா
 
அறமென்ற பேரில் செய்யும்
அக்கிரமம் யாதென்றாய்?
மதமென்ற பேரில் செய்யும்
வக்கிரங்கள் யாதென்றாய்?
அந்த இசம் இந்த இசம்
அனைத்தையும் துவம்சம் செய்தாய்
ஒன்லி இசம் ஹியுமானிசம்
அதன்வசம் வாசம் செய்தாய்
 
மரபென்ற போர்வைக் குள்ளே
மடத்தனம் தீதென்றாய்
அகமுகப் பார்வைக் குள்ளே
அறிந்திடல் தீர்வென்றாய்
காமம் எங்கே? கடவுள் எங்கே?
கருத்தையும் முன்னே வைத்தாய்
சொர்க்கம் எங்கே? நரகம் எங்கே?
...எல்லாமுமே இங்கே என்றாய்...
 
✍️செ. இராசா

31/08/2022

மயிரென்பர்- கண்டாயா?

 


மண்டையில் உள்ளவரை
......மாண்புடன் காண்பவர்கள்
மண்டையை விட்டால்
......மயிரென்பர்- கண்டாயா?
மீண்டும் வரமுடியும்
.......வீழ்ந்தாலும் தப்பில்லை
நீண்ட முடியாய் விழு!
 
செ. இராசா

நண்பர் சிவாவின் புதுமனைப் புதுவிழா வாழ்த்துகள்

 


#வாழ்த்துகள்_நண்பா (நண்பர் சிவாவின் புதுமனைப் புதுவிழா மற்றும் மகன் பேகனின் காதணிவிழா சிறக்க இனிய மனமார்ந்த
வாழ்த்துகள்)

பிறந்தகம்* விட்டகலும்
.....பெண்பிள்ளை போலே
பறந்தின்று போகின்ற
.....பால்ய- உறவால்
சிறகை இழந்ததுபோல்
.....சிக்குண்ட தாலே
உறக்கம் வரவில்லை யே!
(1)
 
*பிறந்தவீடு
தந்தையும் தாயுமாய்
.....தன்னையேத் தந்தநீ
எந்தைபோல் நின்ற
.....இறையருள்- விந்தையடா
கூட்டைத் துறந்தால்
.....குயிலின்றிக் கூடுபடும்
பாட்டைப் ப(பா)டுகின்றேன் பார்‌!
(2)
 
உடலோர் இடமாய்
.....உயிரோர் இடமாய்
கடலைக் கடந்தும்
.....கதைத்தேன்- திடமாய்
வலிகள் எதுவும்
......வரவில்லை நண்பா..
வலியேனோ இன்று வருது!
(3)
 
இருவரும் ஒன்றாய்
.....இணைந்தே இருக்க
ஒருவீடு கட்டி
.....ஒருங்கே- இருக்க
முடிவொன்று செய்தே
.....முயன்றோம் இருந்தோம்
முடிந்ததா நண்பா முடிவு?!
(4)
 
கண்ணில் அருவி
.....கவியாய் வருகினும்
உண்மையில் உன்மேல்
.....ஒருபிழை- கண்டிலேன்
காலம் விடுக்கும்
.....கணக்கைப் புரிந்தவர்
ஞாலத்தில் யார்தான் இயம்பு?!
(5)
 
வள்ளுவம் சொல்கின்ற
.....நட்பியல் கூற்றுகளை
உள்ளபடி கொண்டுள்ள
.....உன்போன்ற- கள்ளமிலா
நல்லவனை நானறியேன்!
.....நல்லவனா நான்?அறியேன்!
வல்லவனாய் வாழயெம் வாழ்த்து!
(6)
 
எல்லாம் சிவமயம்
......என்றவனைச் சொல்வதுபோல்
எல்லாம் சிவாமயம்
......என்றிவனைச்- சொல்லுவதேன்?!
எல்லா இடங்களிலும்
.....எல்லாமாய்ப் போயங்கு
சொல்லாமல் நிற்பான் துணைக்கு!
(7)
 
சந்தான லெட்சுமியின்
.....சத்திய நாயகனாய்
சுந்தருக்கும் பாரதிக்கும்
.....சோதரனாய்- தந்தையாய்
நற்றமிழ் நாச்சியப்பர்
.....நல்கிய மைந்தனாய்
சுற்றமுடன் என்றும்வாழ் சூழ்ந்து!
(8)
 
பேர்போற்றும் மைந்தமையப்
.....பேகனெனப் பேரிட்டாய்
ஊர்போற்றும் வீடமைய
.....உள்ளத்தில்- வேரிட்டாய்
பார்போற்றும் வாழ்வமைய
.....பைந்தமிழை நேர்வைத்தே
சீர்போற்ற வாழ்த்துகிறேன் சேர்ந்து!
(9)
 
எத்தனையோ செய்துவிட்டாய்
.....என்னவென்று சொல்லிடுவேன்?!
புத்தனைப்போல் புன்னகைப்பாய்
.....பொய்யின்றி- சத்தியமாய்
இன்னலுறும் போதெல்லாம்
.....இன்சொல்லால் தீர்ப்பவனே..
நன்றியுடன் வாழ்த்துகிறேன் நான்!
(10)
 
✍️செ. இராசா

30/08/2022

வெண்பாவில் பாடல் எழுதமுடியுமா?

 



இதோ பொழிப்பு மோனையில் மட்டும் இரண்டாம் அடியில் சமரசம் செய்துகொண்டு எழுதியுள்ளேன். பாடுங்க...பாடலாம்)
 
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துணக்கு நான்தருவேன்..
......இன்னும் பிள்ளையாருக்கு அதேதானா?
....... கொஞ்சம் மாத்துங்கய்யா
 
ஐயா பெரியய்யா
.....அத்தனையும் உன்னதய்யா
பொய்யா எதைக்கொடுப்பேன்
......சொல்லய்யா?- மெய்யய்யா
உந்தன் குறையென்றால்
........ஓர்பொருள்தான் உள்ளதய்யா.
எந்தன் அறியாமைய் யா!
 
தேனும் திணைமாவும்
.......செஞ்சுவச்ச மோதகமும்
நானும் கொடுக்கணுமா
.......சொல்லய்யா?- நீனும்
பிடிச்ச கொலுக்கட்டைப்
.......போரடிச்சா விட்டுடய்யா
பிடிச்சத நான்தாரேன் யா!
 
மண்ணில் உருவானால்
......மண்ணேதான் தீர்வென்றா
மண்ணில் பிறந்தாயோ
......சொல்லய்யா?- எண்ணிப்
பிடிச்ச களிமண்ணின்
........பிள்ளையார் நீரய்யா?
முடி(ந்)த்ததும் நீர்தானய் யா‌..
 
✍️செ‌ இராசா

29/08/2022

பாம்பின் குரல்

 


என்னதான் நீங்க படமெடுத்தாலும்
எங்கப் படத்திற்கு ஈடாகுமா?!

உங்களுக்குத் தான்
கருப்பு வெள்ளை தாண்டிய
வர்ண பேதமெல்லாம்...
எங்களுக்கு ஒரே நிறம்தான்..

உங்களுக்குத் தான்
நகரும் நகராது என்கிற
பரிணாமமெல்லாம்...
எங்களுக்கு ஒரே அசைவுதான்...

படமெடுப்பதில் பச்சைப்பிள்ளை நீங்கள்...
படமெடுக்கவே படைக்கப்பட்டவர் நாங்கள்...

உங்க வயசு வெறும் இருநூறுதான்
எங்க வயசு..பல மில்லியன்கள்

உங்க படத்தின் முடிவு இரசிகர்கள் கையில்
எங்க படத்தின் முடிவு எங்களது வாயில்...

உங்கள் படம் வென்றால் திரை வெள்ளம்
எங்கள் படம் வென்றால் நுரை தள்ளும்

உங்கள் உடை கழன்றால் "ஏ" என்பர்
எங்கள் உடை கழன்றால் 'வாவ்" வென்பர்

உங்‌க படத்துல நிசத்துக்கு மரியாதை
எங்க படத்துல விசத்துக்கு மரியாதை

நீங்க குளோசப்ல எடுப்பீங்க
நாங்க எடுத்தாலே குளோஸ் & அப்தான்...

ஆனாலும்...
நீங்கதான் பெரிய ஆளுங்க..
ஏன் தெரியுமா?
நாங்க ஒரு சமயத்தில் ஒராளைத்தான் கொல்வோம்.....

ஆனால் நீங்க....

#பாம்பின்_குரல்

✍️செ. இராசா

ஔவைத் திங்கள் - 06 --------- சுயதம்பட்டம்



தன்னைப் பெரிதென்று தம்பட்டம் போடுபவர்
தன்னால்தான் வீழ்வர் தனித்து
(1)

இப்படித்தான் ஹிட்லரும் ஏதேதோ கொக்கரித்தான்
எப்படிப்பின் செத்தான் இயம்பு?
(2)

பக்சேக்கள் கூட்டமும் பைத்தியம்போல் கொக்கரித்தே
சிக்கிவிட்டார் சீக்கிரம் சேர்ந்து!
(3)

தலைகனத்த மூடரெலாம் தற்குறிபோல் பேசி
நிலைகுலைந்து போனார் நினை
(4)

குருவிகள் செய்வதுபோல் கூடொன்று செய்ய
ஒருவரும் உண்டோ உரை
(5)

கறையான்கள் புற்றைப்போல் கச்சிதமாய்க் கட்டும்
துறைஞானம் உள்ளவர்யார் காட்டு
(6)

தேனீபோல் ஓடோடி சேகரம் செய்தாலும்
வாய்நீரில் வந்திடுமா தேன்?
(7)

போகும் இடமெல்லாம் பொய்வேசம் போடாமல்
சாகும்முன் சாதனைகள் செய்
(8.)

தன்னைப் பறைசாற்றல் தற்கொலைபோல் என்றுரைத்த
கண்ணனின் மெய்ப்பொருள் காண்
(9)

இவர்போல் அவர்போல் எனச்சொன்னால் உச்சம்
எவருக்குப் போகும் இயம்பு?
(10)

✍️செ. இராசா

#மூலப்பாடல்

நூல்: தனிப்பாடற்_திரட்டு (வெண்பா எண்: 2)

வான்குருவி யின்கூடு
.........வல்லரக்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி யாவர்க்கும்
.......செய்யரிதால் – யாம்பெரிதும்
வல்லோமே என்று
........வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன்
........றெளிது.

அனுமதியா வேணும் அதுக்கு?

 


என்ன இருந்தா எனக்கென்ன வந்ததய்யா
ஒன்னுக்கு வந்தாக்க ஓரமா- நின்னு
மனுசப் பயலுகபோல் வந்தவுடன் போக
அனுமதியா வேணும் அதுக்கு?
 
✍️செ. இராசா