தன்னைப் பெரிதென்று தம்பட்டம் போடுபவர்
தன்னால்தான் வீழ்வர் தனித்து
(1)
இப்படித்தான் ஹிட்லரும் ஏதேதோ கொக்கரித்தான்
எப்படிப்பின் செத்தான் இயம்பு?
(2)
பக்சேக்கள் கூட்டமும் பைத்தியம்போல் கொக்கரித்தே
சிக்கிவிட்டார் சீக்கிரம் சேர்ந்து!
(3)
தலைகனத்த மூடரெலாம் தற்குறிபோல் பேசி
நிலைகுலைந்து போனார் நினை
(4)
குருவிகள் செய்வதுபோல் கூடொன்று செய்ய
ஒருவரும் உண்டோ உரை
(5)
கறையான்கள் புற்றைப்போல் கச்சிதமாய்க் கட்டும்
துறைஞானம் உள்ளவர்யார் காட்டு
(6)
தேனீபோல் ஓடோடி சேகரம் செய்தாலும்
வாய்நீரில் வந்திடுமா தேன்?
(7)
போகும் இடமெல்லாம் பொய்வேசம் போடாமல்
சாகும்முன் சாதனைகள் செய்
(8.)
தன்னைப் பறைசாற்றல் தற்கொலைபோல் என்றுரைத்த
கண்ணனின் மெய்ப்பொருள் காண்
(9)
இவர்போல் அவர்போல் எனச்சொன்னால் உச்சம்
எவருக்குப் போகும் இயம்பு?
(10)
செ. இராசா
#மூலப்பாடல்
நூல்: தனிப்பாடற்_திரட்டு (வெண்பா எண்: 2)
வான்குருவி யின்கூடு
.........வல்லரக்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி யாவர்க்கும்
.......செய்யரிதால் – யாம்பெரிதும்
வல்லோமே என்று
........வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன்
........றெளிது.
No comments:
Post a Comment