15/03/2021

இதழகல் வெண்பாக்கள் உதடுகள் குவியாது ஒட்டாது

 #கடவுள்_வாழ்த்து
#இதழகல்_வெண்பாக்கள்
#உதடுகள்_குவியாது_ஒட்டாது
#ம_ப_வ_உ_ஊ_ஒ_ஓ_ஔ_இனங்கள்_வராது

இயற்கையை ஆயார் இறையினைக் காணார்!
இயற்கையை ஆழத்தில் ஆய்!
(1)

அறத்தை நினையார் அகநிறை ஆகார்!
அறத்தால் அகத்தை நிறை!
(2)

அரனே அரியாய் அறியாச் சிலரே
சிரத்தில் சிறியார் தெளி
(3)

கற்றிடக் கற்றிடக் கற்றிடல் யாதெனில்
கற்றிடல் தீராக் கடல்!
(4)

#இதழகல் செய்தேன் இறையால் இனிதே
இதற்கினி சாட்சி இல!
(5)

அடியால் அளந்த அரியை நினைந்தேன்!
அடியாய் அளந்தான்! அறி!
(6)

எண்ணிய எண்ணத்தை எட்டிட எண்ணத்தால்
கண்ணனைக் கண்ணாறக் காண்
(7)

✍️செ.இராசா

தொல்காப்பியம் பற்றிய "பயப்படாதீர்கள்" என்கிற கி.வா.ஜெகந்நாதன் ஐயா அவர்களின் நூலைப்படித்தபோது அதில் உதடுகள் ஒட்டாத மற்றும் குவியாத எழுத்துக்களைப் பற்றியும் அதில் சாதித்த பலரைப் பற்றியும் எழுதியிருந்தார்கள். அதாவது, ம ப வ உ ஊ ஒ ஓ ஔ வகை எழுத்துக்களை பயன்படுத்தாமல் படைக்க வேண்டும். எனில் மொத்தம் 119 எழுத்துக்கள் அடிபடுகிறது. அப்படி உதடுகள் ஒட்டாமல் மற்றும் குவியாமல் வைப்பதை நிரோட்டகம் அல்லது இதழகல் என்கிறார்கள். இதில் பலரும் அந்தாதிகளே படைத்துள்ளார்கள (நிரோட்டக யமக அந்தாதிகள்) இவற்றை இணையத்தில் படித்து அசந்துபோனேன். யமக என்றால் திரும்ப திரும்ப ஒரே வார்த்தை வெவ்வேறு பொருளில் அடிதோறும் வருவது.

சரி நாமும் குறள் வெண்பாக்கள் எழுதுவோமே என்று முயன்றபோதே உணர்ந்தேன். ஆகா‌‌... எவ்வளவு கடினமான முயற்சியென்று. ஆம்... பெரும்பாலான வார்த்தைகள் பமவ வில்தான் வருகிறது. (சிலர் பமவ மட்டும் தவிர்ப்பார்கள் உ ஊ ஒ ஓ ஔ பற்றி கவலைப்படுவதில்லை. அது தவறென்றே நினைக்கிறேன்) வெண்பாவில் உகரமும் இல்லாமல் படைப்பது அடுத்த சவால்?...அப்புறம் கருத்தும் வரவேண்டும் எளிமையாகவும் இருக்க வேண்டும். எப்படியோ... மிகவும் கடினமான முயற்சியாலும் தமிழன்னையின் உதவியாலும் இதோ ஏழு குறள் வெண்பாக்கள் படைத்துள்ளேன்.

உண்மையில்...தமிழ் சாதாரண மொழியல்ல!!!

வாழ்க தமிழ்!

#வள்ளுவர்_திங்கள்_151

14/03/2021

அரேபிய மண்ணில் அனாதைபோல் நிற்கும்


 

மண்டையைப் பிளக்கும் வெயில்
சுருள வைக்கும் உஷ்ணக்காற்று
அலற வைக்கும் மணற்புயல்
அத்தனைக்கும் இடையில்
அரேபிய மண்ணில்
அனாதைபோல் நிற்கும்
அவனுக்குத்தான் தெரியும்....
மனதின் வலியென்பது
அதையெல்லாம் விடப்பெரிதென்று...

✍️செ. இராசா

ஐயோ.... எப்படித் தெரிந்திருக்கும்?!

 


ஐயோ....
எப்படித் தெரிந்திருக்கும்?!
அண்ணன் போட்டுக் கொடுத்திருப்பானோ
........
அம்மா திட்டுவாளோ...?
அப்பா என்ன சொல்லுவார்...?
யோசித்தவாறே சென்றாள்..
அந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் பாப்பா
தன் மதிப்பெண் அட்டையைச் சுமந்தவாறே..

13/03/2021

ஆற்று மணலள்ளி ஆற்றையே காணடித்தீர்

 


ஆற்று மணலள்ளி ஆற்றையே காணடித்தீர்
ஊற்றுப் புனலள்ளி ஊரூராய் விற்றுவிட்டீர்
கூற்றன் அரசென்றே கொன்றிட எண்ணாமல்
மாற்றம் தருவோர்யார் வந்து

✍️செ. இராசா

12/03/2021

வாலி வதம்-------வாலி வாதம்--------இராமன் பதில்----குறள்---வெண்பாக்களாய்

 #வாலி_வதம்
#வாலி_வாதம்
#இராமன்_பதில்
#குறள்_வெண்பாக்களாய்

#வாலியின்_கேள்விகள்

மறைந்திருந்து தாக்குவதா மன்னவரின் மாண்பு
குறையுள்ளோன் யாரெனக் கூறு?!
(1)

சகோதரச் சண்டையில் சம்பந்தம் இன்றி
தகாதசெயல் செய்ததேன் சொல்?!
(2)

இராவணனின் செய்கைதான் இவ்வுலகில் தீதா?!
இராமனேவுன் செய்கை இயம்பு?!
(3)

மனைவி இழந்தால் மதிபோய் விடுமோ
எனையேன் பகைத்தாய் இயம்பு?
(4)

உன்தம்பி நாடாள உன்நாட்டைத் தந்ததுபோல்
என்தம்பி ஆளனுமா இங்கு?
(5)

என்மனைவி தாரைசொல் இப்போதே நானுணர்ந்தேன்
உன்நோக்கம் எந்தன் உயிர்!
(6)

பிறர்மனை கொண்டதாய்ப் பேசிடும் முன்னே
மறவாதே நாங்கள் விலங்கு
(7)

மனித மனத்தில்தான் மன்னிப்பும் ஏற்பும்
கனிவெல்லாம் இல்லைக் கவிக்கு
(8)

மனுகுல நீதியெல்லாம் மானிடர்க் காகும்
உணர்ச்சியால் எங்கள் உறவு
(9)

என்னோடு வந்திருந்தால் என்றைக்கோ தீர்த்திருப்பேன்
உன்செய்கை ஏனோ உரை?
(10)

#இராமனின்_பதில்கள்

இறந்துவிட்டாய் என்றேதான் ஏற்றான் முடியை
மறந்தும் தவறிழையான் மைந்து
(11)

வந்தவுடன் தந்தவனை வம்பனாய் எண்ணியே
நொந்தவனை நோகடித்தாய் நீ
(12)

கொலைசெய்யும் எண்ணத்தில் கோபமாய்த் தாக்கி
மலையொன்றில் விட்டாயே நீ
(13)

நம்பிக்கை வைத்துன்னை நம்பிய தம்பியை
நம்பாமல் பொய்த்தாயே நீ
(14)

தம்பி மனைவியை தன்மனைவி போலெண்ணி
நம்பிக்கை பொய்த்தாயே நீ
(15)

செய்யாச் செயலெல்லாம் செய்திட்ட பின்னாலே
செய்யலாம் என்கிறாய் நீ
(16)

விலங்கென்று சொல்லி விளக்கங்கள் தந்து
விலகுமா என்றும் விலங்கு
(17)

பிறப்பாலே இல்லைப் பெரியோர் சிறியோர்
மறந்தாயோ இன்றைக்கு நீ
(18)

என்றைக்கு சுக்ரீவன் என்னிடம் வந்தானோ
அன்றைக்கே ஒன்றானோம்! ஆம்!
(19)

பிறர்மனை நோக்கியப் பேடியை கொல்ல
அறத்தையும் மீறினேன் ஆம்!
(20)

✍️செ.இராசா

11/03/2021

ஒரு அரபி மெட்டுக்கு தமிழில் எழுதிய பாடல்----HABIBI A NOUR EL AIN

 


 (ஒரு அரபி மெட்டுக்கு தமிழில் எழுதிய பாடல்)
HABIBI A NOUR EL AIN

யாருமே இல்லையென்று -நீ
நோகக் கூடாது
ஏனடா வாழ்க்கையென்று நீ
பேசக் கூடாது

போடா டேய் போடா டேய் நம்மிடம் என்ன இல்லை
வாடா டேய் வாடா டேய் நம்பினால் தோல்வி இல்லை

ஏற்றமும் இறக்கமும் எல்லாமும் எல்லோர்க்கும்
என்றுமே எப்போதும் மாற்றமாய் வந்திடும் (2)
என்றும் என்றும் நம்பு
என்றும் உன்னை நம்பு (2)
எண்ணம் போலே வாழ்வு

போடா டேய் போடா டேய் நம்மிடம் என்ன இல்லை
வாடா டேய் வாடா டேய் நம்பினால் தோல்வி இல்லை
எண்ணம் போலே வாழ்வு

✍️செ.இராசா

10/03/2021

படைப்பாளர் பாடுபெரும் பாடு

படைப்பினை வைத்து படைப்பை அணுகார்
படைத்தோனை வைத்தே படிப்பத னாலே
படைப்பிலே நல்ல படைப்பினைத் தந்தும்
படைப்பாளர் பாடுபெரும் பாடு
✍️

 

அனுபவப் பதிவு-11--------அஸ்ஸாம் மேகாலயா இறுதிப்பகுதி--கட்டுரை

என் முதலாளி தென்னிந்தியா வர இருப்பதாகவும் அதில் கேரளாவிலும் பெங்களூரிலும் இரண்டு வேலைகள் உள்ளதென்றும், என்னை உடனே கிளம்பி கேரளாவில் வடக்கம் பரவூரில் உள்ள சாந்தி மடம் என்ற இடத்திற்கு வரச்சொன்னார். அந்த இடம் எங்கே உள்ளது எப்படிப்போக வேண்டும் என்றெல்லாம் தெரியாது. ஆனாலும் முதலாளி கூறினால் அவரின் அன்புக் கட்டளையைத் தட்டுவதும் இல்லை. உடனே என் நண்பன் சிவாவை அழைத்துக்கொண்டு பழனி வழியாக கேரளா சென்றடைந்தேன். அங்கே வடக்கம் பரவூரில் உள்ள சாந்தி மடம் அனைவருக்குமே தெரிந்திருக்கிறது. அந்த இடம் சென்று விசாரித்தபோது முதலாளி ஒரு பெரிய ஓட்டலில் தங்கி இருப்பதாகவும் அவர் எதற்காக வந்துள்ளார் என்றும் சொன்னார்கள். அதாவது அவர்களின் தோட்டத்தில் இருந்து வென்னிலா என்ற ஒரு செடியை 35 ரூபாய்க்கு வாங்கிச்சென்று அஸ்ஸாமில் உள்ளத் தேக்கு மரத்தோட்டத்தில் ஊடு பயிராக நடுவதே அவருடைய திட்டம். இந்தச்செடியில் வரும் ஒரு வகையான பூவித்துக்களில் இருந்துதான் வென்னிலா ஐஸ்கிரீம் செய்கின்றார்களாம். ஒரு கிலோ 3000ரூபாய் வரைப் போகிறதென்றும் (2005ல்) ஒரு செடியில் வருடத்திற்கு 3-5 கிலோ வரை வருமென்றும் சொன்னார்கள். இந்தச்செடியை அனுப்பி வைத்த பிறகு பலரும் இங்கிருந்து இச்செடிவாங்கிச் சென்று ஒரு செடியை 120ரூபாய்க்கு மேல் விற்றுள்ளார்கள் என்பது கூடுதல் தகவல்.
 
அந்த வியாபார விடயத்திற்கு என்னை ஒரு மொழிபெயர்ப்பு உதவிக்காக அழைத்திருந்தார்கள். அங்கே முதலாளி ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் பேசுவதை தமிழில் நான் சொல்வேன், அவர்கள் பேசும் மலையாளத்தை நான் தமிழாக என்னுள் மாற்றம் செய்துகொண்டு அவரிடம் மொழி பெயர்ப்பேன்‌‌. ஒருவழியாக தங்கபாலுபோல் மாற்றி மாற்றி மொழிபெயர்த்தாலும் சமாளித்துவிட்டேன். எனக்குக் கேரளா சாந்தி மடத்தில் ஏகப்பட்ட மரியாதை. என்னைப் பாலக்காட்டில் உள்ள மிகப்பெரிய உணவகத்திற்கு அழைத்துச்சென்று தடபுடல் விருந்தெல்லாம் கொடுத்து இரயிலில் ஏற்றி விட்டார்கள். அந்த வேலை முடிந்த சில நாட்களிலேயே மீண்டும் பெங்களூர் அழைத்தார். நானும் ஒரு இடமும் விடுவதாக இல்லை. அவர் இழுத்த இழுவைக்கெல்லாம் சென்றேன். வேறு வேலையும் கிடைக்கவில்லையே...என்ன செய்வது?
 
பெங்களூர் சென்று மெஜஸ்டிக் பேருந்து நிலையம் அருகே அறை எடுத்து தங்கினேன். முதலாளி சிவாஜி நகரில் அவரின் தம்பி வீட்டில் தங்கி இருந்தார். அவரைச்சென்று பார்த்தபோது பெங்களூரில் உள்ள நல்மங்களா என்ற இடத்தில் ஒரு மின்சாரம் தயாரிக்கும் டீசல் ஆலையை அப்படியே இடம்பெயர்த்து மேகாலயாவில் அமைக்க வேண்டும் அதற்கு என் உதவி தேவையென்றார். நான் என்ன செய்ய வேண்டுமென்றேன். அந்த ஆலையின் வரைபடம் இல்லையாம். இப்போது உள்ளதை அப்படியே வரைந்து தரவேண்டும் என்றார். நானும் ரகீம் என்ற ஒரு தம்பியும் டேப்பால் அளந்து கையில் உள்ள மினி டிராப்டர் கருவியைக் கொண்டு ஒரே நாளில் படம் வரைந்து கொடுத்தேன். உடனேயே10000 ரூபாய் கொடுத்தார். அந்தக் காசு வந்த மகிழ்ச்சியில் மேலும் ஒருநாள் தங்கி பெங்களூரை சுத்திப்பார்த்தேன். ஐகான் கிருஷ்ணர் கோவில், சிவன் சிலை உள்ள ஒரு மால் மற்றும் கன்னடத்தில் சந்திரமுகி படம் என்றெல்லாம் பார்த்து விட்டு ஊருக்கு கிளம்புகையில் முதலாளி
மீண்டும் அஸ்ஸாம் வந்து இந்த நல்மங்களா மின்சார ஆலையை மேகலாயாவில் அமைக்க உடனே வரச்சொன்னார். என்னடா வாழ்க்கை இப்படிப்போகுதே....போவோமா வேண்டாமா என எனக்கு ஒரே குழப்பம்...
ஒன்றும் புரியவில்லை.
 
முதலாளி சொல்லும் வேலையைச் செய்துகொண்டே வெளிநாட்டுவேலை தேடுவோம் என்று ஒரு முடிவெடுத்து மீண்டும் சென்றால் அந்தத்திட்டம் நட்டமான திட்டமென்று கைவிட்டு விட்டார்கள். அதாவது டீசலில் ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க 4+ ரூபாய் செலவாகிறதென்றும் இதுவே வேறு எங்கோ விலைக்கு வாங்கினால்கூட குறைவாகவே வருகிறதென்றும் அந்த திட்டத்தை பாதியில் விட்டு விட்டார்கள் (எவ்வளவு விலை என்று சரியாக ஞாபகமில்லை). இப்போது எனக்கென்ன வேலை என்று கேட்டேன்?..எனக்கா வேலை இல்லை என்று என்னை முதலாளி தன் தொழில்நுட்ப PA போல் வைத்திருந்தார். தன் சிமெண்ட் ஆலையில் ஒரு கோவில் கட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.. ஆகா... நாம் படித்த படிப்பில் இன்றுதான் முதன் முறையாக புண்ணிய பணி வந்துள்ளதென்று மகிழ்ந்தேன். கோவிலென்றால் நம்மூர்போல் நினைக்க வேண்டாம். இது வித்தியாசமாக வடநாட்டுப் பாணியில் இஸ்லாமிய மேஸ்திரிகளால் கட்டப்பட்ட சிறிய கோவிலாகும்.
அங்கே சில மாதங்கள் உருண்டோடின. மேலும் என்னதான் வேலைபார்த்தாலும் அப்பாவின் கடன் மட்டும் தீரவே இல்லை. பொருளாதார முன்னேற்றமும் வரவே இல்லை. என்ன ஆனாலும் சரி இனியும் இங்கே தொடர்வது எனக்கு நானே வைக்கும் தடைக்கல் என்று முடிவெடுத்து அஸ்ஸாம் மேகாலயா வாழ்வை 2006 ஆம் ஆண்டு முடித்துக்கொண்டு வெளிநாட்டிற்கு வேலை தேடி தமிழ்நாடு வந்தடைந்தேன்.
 
அன்று முதல் இன்று வரை அஸ்ஸாம் நினைவுகளைச் சுமந்து கொண்டே வாழ்கிறேன். அங்குள்ள பலரிடமும் இன்னும் தொடர்பில் இருக்கிறேன். மீண்டும் ஒரு சுற்றுலா போகவேண்டும் என்று ஆசையுள்ளது. ஆனால் போகத்தான் காலம் ஒத்துழைப்பு தரவில்லை.
 
இக்கட்டுரைகளில் விடுபட்டவை நிறையவே உள்ளன. இருப்பினும் நினைவில் இருந்த முக்கியமான விடயங்களை மட்டும் பகிர்ந்து விட்டேன் என்றே நினைக்கிறேன். என் பகிர்வு யாருக்கேனும் ஏதேனும் வகையில் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்ற நம்பிக்கையில் உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்.
 
அனைவருக்கும் இனிய மனமார்ந்த நன்றி
 
----முற்றும்-----



என்னப் பெத்த தாயே நீ எங்கே

 


 (இசையமைப்பாளர் இலங்கை சுதாகரன் அவர்கள் வழங்கிய அருமையான ஒரு மெட்டுக்கு. எழுதிய பாடல்)

என்னப் பெத்த தாயே நீ எங்கே?
விண்ணை விட்டு வாராயோ நீ இங்கே
கண்ணீராலேதானே நனைந்தேனே
கானலான உனையும் நனைத்தேனே

விழிகளின்றி பார்வையா?!
வெளிச்சமின்றி காட்சியா?!
இரண்டுமின்றி பார் என்றால்
அநியாயம் இல்லையா?!

இறைவனின்றி கோவிலா?!
இரக்கமின்றி மார்க்கமா?
இதயமின்றி வாழ் என்றால்
அநியாயம் இல்லையா?!

.....என்னப் பெத்த

இருக்கிற பொழுதில் ஏனோ
புரியமறுக்குது மனசு
புரிகிற பொழுதினில் ஏனோ
இருக்கமறுக்குது உசுரு

அட போடா போடா விதி தானே வேறென்னடா
அட ஆமாம் போடா நம் தாயே தெய்வமடா

காற்றோடும் மூச்சோடும் நீதான் எங்கும் தாயே
ஊனோடும் உயிரோடும் நீதான் என்னுள் நீயே

உன்னால் தானே இங்கே நானும் தாயே....

✍️செ.இராசா

09/03/2021

தீ நட்பு


 

முப்பாலில் வைத்துள்ள முன்னிரெண்டைக் காணாமல்
எப்போதும் தப்பாமல் ஏற்றுகின்றார் மூன்றாம்பால்!
தப்பென்று யாரேனும் தப்பினைச் சுட்டிவிட்டால்
தப்பொன்றும் இல்லையென தற்குறிபோல் பேசுகின்றார்!

பிள்ளைகள் பார்ப்பரென பெற்றோராய்ச் சொன்னாலும்
பிள்ளைகள் அத்தனையும் பிஞ்சல்ல என்கின்றார்!
நட்பின் உரிமையிலே நல்லறம் சொல்வோரின்
நட்பை மதியாமல் நாக்கூச வைகின்றார்!

எப்பாலும் தப்பில்லை ஏற்றிடலாம் என்போரே..
எப்போதும் நேரடியாய் ஏற்றிடுதல் தப்பன்றோ?
செப்பும் முறையறிந்து செப்பிடுங்கள் தப்பில்லை.
தப்பென்று சொல்வோரைத் தப்பென்றல் தப்பென்றோ?

ஒப்பாத காரியத்தை ஓவியமாய்ச் செய்வோரும்
தப்பான காரியத்தை தப்பில்லை என்போரும்
செப்பிடும் நல்லோரைச் சீயென்று சொல்வோரும்
எப்போதும் வேண்டாம் எமக்கு!

✍️செ. இராசமாணிக்கம்