12/03/2021

வாலி வதம்-------வாலி வாதம்--------இராமன் பதில்----குறள்---வெண்பாக்களாய்

 #வாலி_வதம்
#வாலி_வாதம்
#இராமன்_பதில்
#குறள்_வெண்பாக்களாய்

#வாலியின்_கேள்விகள்

மறைந்திருந்து தாக்குவதா மன்னவரின் மாண்பு
குறையுள்ளோன் யாரெனக் கூறு?!
(1)

சகோதரச் சண்டையில் சம்பந்தம் இன்றி
தகாதசெயல் செய்ததேன் சொல்?!
(2)

இராவணனின் செய்கைதான் இவ்வுலகில் தீதா?!
இராமனேவுன் செய்கை இயம்பு?!
(3)

மனைவி இழந்தால் மதிபோய் விடுமோ
எனையேன் பகைத்தாய் இயம்பு?
(4)

உன்தம்பி நாடாள உன்நாட்டைத் தந்ததுபோல்
என்தம்பி ஆளனுமா இங்கு?
(5)

என்மனைவி தாரைசொல் இப்போதே நானுணர்ந்தேன்
உன்நோக்கம் எந்தன் உயிர்!
(6)

பிறர்மனை கொண்டதாய்ப் பேசிடும் முன்னே
மறவாதே நாங்கள் விலங்கு
(7)

மனித மனத்தில்தான் மன்னிப்பும் ஏற்பும்
கனிவெல்லாம் இல்லைக் கவிக்கு
(8)

மனுகுல நீதியெல்லாம் மானிடர்க் காகும்
உணர்ச்சியால் எங்கள் உறவு
(9)

என்னோடு வந்திருந்தால் என்றைக்கோ தீர்த்திருப்பேன்
உன்செய்கை ஏனோ உரை?
(10)

#இராமனின்_பதில்கள்

இறந்துவிட்டாய் என்றேதான் ஏற்றான் முடியை
மறந்தும் தவறிழையான் மைந்து
(11)

வந்தவுடன் தந்தவனை வம்பனாய் எண்ணியே
நொந்தவனை நோகடித்தாய் நீ
(12)

கொலைசெய்யும் எண்ணத்தில் கோபமாய்த் தாக்கி
மலையொன்றில் விட்டாயே நீ
(13)

நம்பிக்கை வைத்துன்னை நம்பிய தம்பியை
நம்பாமல் பொய்த்தாயே நீ
(14)

தம்பி மனைவியை தன்மனைவி போலெண்ணி
நம்பிக்கை பொய்த்தாயே நீ
(15)

செய்யாச் செயலெல்லாம் செய்திட்ட பின்னாலே
செய்யலாம் என்கிறாய் நீ
(16)

விலங்கென்று சொல்லி விளக்கங்கள் தந்து
விலகுமா என்றும் விலங்கு
(17)

பிறப்பாலே இல்லைப் பெரியோர் சிறியோர்
மறந்தாயோ இன்றைக்கு நீ
(18)

என்றைக்கு சுக்ரீவன் என்னிடம் வந்தானோ
அன்றைக்கே ஒன்றானோம்! ஆம்!
(19)

பிறர்மனை நோக்கியப் பேடியை கொல்ல
அறத்தையும் மீறினேன் ஆம்!
(20)

✍️செ.இராசா

No comments: