09/03/2021

தீ நட்பு


 

முப்பாலில் வைத்துள்ள முன்னிரெண்டைக் காணாமல்
எப்போதும் தப்பாமல் ஏற்றுகின்றார் மூன்றாம்பால்!
தப்பென்று யாரேனும் தப்பினைச் சுட்டிவிட்டால்
தப்பொன்றும் இல்லையென தற்குறிபோல் பேசுகின்றார்!

பிள்ளைகள் பார்ப்பரென பெற்றோராய்ச் சொன்னாலும்
பிள்ளைகள் அத்தனையும் பிஞ்சல்ல என்கின்றார்!
நட்பின் உரிமையிலே நல்லறம் சொல்வோரின்
நட்பை மதியாமல் நாக்கூச வைகின்றார்!

எப்பாலும் தப்பில்லை ஏற்றிடலாம் என்போரே..
எப்போதும் நேரடியாய் ஏற்றிடுதல் தப்பன்றோ?
செப்பும் முறையறிந்து செப்பிடுங்கள் தப்பில்லை.
தப்பென்று சொல்வோரைத் தப்பென்றல் தப்பென்றோ?

ஒப்பாத காரியத்தை ஓவியமாய்ச் செய்வோரும்
தப்பான காரியத்தை தப்பில்லை என்போரும்
செப்பிடும் நல்லோரைச் சீயென்று சொல்வோரும்
எப்போதும் வேண்டாம் எமக்கு!

✍️செ. இராசமாணிக்கம்

No comments: