08/07/2020

அருவி



கீழே விழுந்தாலும்
வாழ வைக்கிறது
அருவி
(1)

புகை வந்தாலும்
கனல் இல்லை
அருவியில்
(2)

தரையில் விழுந்து
தாளம் போடுகிறது
அருவி
(3)

✍️செ.இராசா

கறிக்கொழம்பே






#மரிக்கொழுந்தே_மெட்டு

#கறிக்கொழம்பே ஏய் கறிக்கொழம்பே
கறிக்கொழம்பே ஏய் கறிக்கொழம்பே....ஓ
நானும் உன்னை உறிஞ்சிடவா சொல்லு சொல்லு
அப்படியே குடிச்சிடவா சொல்லு சொல்லு
கறிக்கொழம்பே ஏய் கறிக்கொழம்பே
கறிக்கொழம்பே

அப்பெல்லாம் எங்கவூரில் அத்தை மாமா வாரயிலே
அப்ப ஒரு நாட்டுக் கோழி குழம்பாக்கத் தேடயிலே
கட்டி போட்ட பொட்டக் கோழி சட்டிக்குள்ள வேகையிலே
எட்டுவூரத் தாண்டி மணம் அங்கே இங்கே
போகையிலே
உன் நினைப்பு மனச தூண்டிடுமே
உன்ருசிக்கு உசுரு ஏங்கிடுமே...
உன்ருசிக்கு உசுரு ஏங்கிடுமே...

கறிக்கொழம்பே........

✍️செ.இராசா

(என் மனைவி சமைத்த நாட்டுக்கோழி குழம்பிற்காக இப்பாடல்....
பக்கத்தில காடையும்.......😊😊😊😊😀😀
வாங்க சாப்பிடலாம்)

நீயும் நானும் சேரும் நேரம்


 
#நீயும்_நானும் சேரும் நேரம்
....நேருங் காதல் யோகம்
தீயும் தீயும் மோதும் போதில்
....தீண்டும் வேக மோகம்
பாயும் காலம் பார்க்கும் ஆவல்
‌...பாவை நெஞ்சம் ஏங்கும்
காயும் உள்ளம் காமன் வெள்ளக்
... கானம் பாடத் தோன்றும்

ஆகா ஓகோ ஆகா ஓகோ
.......ஆடும் ஆட்டம் ஜோரு
போகப் போக போங்கு செஞ்சா
.......போடு தாளம் போடு

✍️செ.இராசா

tagTag Photopin

குறளுரையாடல்_4




#குறளுரையாடல்_4

#ஐயா_1
எண்ணியதும் எண்ணியாங்கு
செந்தமிழில் வந்துவீழும்
கண்ணிரண்டின் சிந்தனைகள் காண்.

#நான்_2
காண்கின்றேன் ஐயா:உம் கைவண்ணம் அத்தனையும்
சான்றோனே வீழ்கின்றேன் தாள்

#ஐயா_3
தாள்வணங்கி நிற்கின்றோம் தாய்த்தமிழின் கைகளிலே
வாள்வாங்கி வென்றிடுவோம் வா

#நான்_4
வாவென்றால் வந்தென்னுள் வாழ்த்துகின்ற போதெல்லாம்
ஆ!வென்றே சொல்கின்றார் ஆம்

#ஐயா_5
ஆம்சொல்லல் மட்டுமின்றி ஆன்றோர்முன் மெய்யறிவால்
தாம்செல்லல் ஞான்றும் தவம்

#நான்_6
தவமாய்த் தவமிருந்துத் தாய்த்தமிழைக் கற்றால்
அவனியில் இல்லை அழிவு

#ஐயா_7
அழியும் அவனியின் யாதிலும் என்றும்
அழியாத் தமிழே அழகு

#நான்_8
அழகென்ற சொல்லில் அமைந்த ழகரம்
அழகென்றால் அஃதே அழகு

#ஐயா_9
அழகென்றால் பைந்தமிழின் அன்பாம் ழகரம்
பழகென்றால் நீயும் பழகு

#நான்_10
பழகப் பழக புளிக்கா தமிழால்
வியப்பில் மலரும் விழி

#ஐயா_11
விழியில் மலரும் வியப்பாந் தமிழே
மொழியில் புலரும் ஒலி

#நான்_12
ஒலியில் ஒலிசேர ஒவ்வொன்றும் மாறி
மொழியாய் மொழிகின்றோம் பார்

#ஐயா_13
பார்வைகள் யாவும் பரிமாணப் பாதைகள்
வேர்வையால் வெற்றிகளை வெல்

#நான்_14
வெல்லும்சொல் தேடியே வேண்டுகிற எல்லோர்க்கும்
நல்லசொல் கிட்டிடும் நம்பு

#ஐயா_15
நம்பிக்கை கொண்டிடு நம்மிடம்;பார் யானைக்குத்
தும்பிக்கை ஒன்றே துணை

#நான்_16
துணைக்குத் துணையாய்த் தொடர்கின்ற நட்பாய்
இணையத்தில் எல்லோரும் இன்று

#ஐயா_17
இன்றைய போதுகளை இன்றேநீ வாழ்ந்திடல்
என்றைக்கு மின்பமாம் கேள்

#நான்_18
கேள்விகள் கேட்டால்தான் கிட்டிடும் என்போரே
ஆள்வோரைக் கேட்போமா ஆய்ந்து

#ஐயா_19
ஆய்ந்தறிந்து தீட்ட அழகுக் கவிதைகள்
பாய்ந்தோடும் ஆறாகப் பார்

#நான்_20
பார்த்த விழிகளினால் பற்றுகின்ற காதல்போல்
கோர்த்த கவியென்றே கூறு

✍️ஐயாவுடன் & நான்

07/07/2020

இரவச்சம்



இரந்து வாழும் வாழ்வைவிட
இறந்து போதலே இனிது
இறந்து போகும் நிலையில்கூட
சிறந்து நிற்றலே இனிது

இறைக்கெனப் படைக்கும் ஒன்றைவிட
இரக்குமுன் தருதலே இனிது
இரந்தபின் கிடைக்கும் அமிழ்தைவிட
இருக்கின்ற கஞ்சியே இனிது

தன்னினம் காக்கும் சொத்தைவிட
தன்மையாய் ஈதலே இனிது
வருவதால் பெருகும் மகிழ்வைவிட
தருவதால் வருவதே இனிது

✍️செ. இராசா

#இரவச்சம்
#வள்ளுவர்_திங்கள்_118

06/07/2020

தொலைந்தது மீண்டும் திரும்பிடும் போதில்
மலைமேல் அமரும் மனம்🕴️🕺🕴️✍️

05/07/2020

சூரியனைப் பூட்ட முடியுமா



சூரியனைப் பூட்ட முடியுமா- இல்லை
சூனியத்தைக் காட்ட முடியுமா?!
பேரியக்கம் தூங்க முடியுமா- இல்லைப்
பேரையாரும் கெடுக்க முடியுமா?!

ஒலியும் ஒலியும் சேர்ந்து தானே
மொழிகள் ஆனதன்று
மொழியும் மொழியும் சேர்ந்துதானே
மொழிகள் ஆனதின்று
பழைய மொழிகள் தின்றதாலே
புதிய மொழிகள் நூறு
புதிய மொழிகள் வந்தபோதும்
பழைய தமிழைப் பாரு...

இன்னும் இன்னும் புதுமையோடு
இளமை மிகுந்த தன்மை
எங்கும் இல்லை இனிமையோடு
எங்கள் மொழியின் தொன்மை

✍️செ.இராசா

சின்னக் கவியரசர் அண்ணன் விக்டர் தாசர்



எதுகையும் மோனையுமாய்
எதேதோ எழுதிவிட்டு
தானெழுதும் அத்தனைக்கும்
வானளவில் புகழ்தேடி
தற்பெருமை கொட்டுகின்ற
தற்குறிகள் மத்தியிலே
புதுக்கவிதைச் சாயலிலே
புது விதமாய் மரபுசெய்து
அடிக்கு அடியென்று
அடிக்கடி புதுமை செய்து
முடிக்கும் வரிகளிலே
இடிபோல் அதிர வைத்து
இதுவும் கவிதையென
எண்ணுவோர் அனைவருக்கும்
இதுவே கவிதையென
இயம்புகின்ற ஓர் கவிஞர்?; அவர்

சின்னக் கவியரசர்
எண்ணப் பேரரசர்
அண்ணன் விக்டர் தாசர்
அன்பில் ஆத்ம ஈசர்!

✍️செ.இராசா

ஐந்து நாட்களுக்கு முன்பாக என் குருநாதர் விக்டர்தாஸ் அண்ணா எழுதிய #குச்சி என்ற கவிதை. அவர் பெயர் இல்லாமலே இந்தியா அமெரிக்கா,துபாய்,கத்தார்.......என் உலா வந்தது அவருக்கேத் தெரியாமல்.

பாருங்கள்... இதுதான் இணையம்...இங்கே இப்படியும் உண்டு.

எது எப்படியோ அண்ணாவின் கவிதை வரிகளை நீங்களும் படித்துப் பாருங்கள். அது நீள்கவிதை அல்லது கஜல் இரகம். தற்சமயம் இந்த வடிவம் எழுதுபவர்கள் அண்ணாவைத்தவிர யாரும் இல்லை எனலாம்‌.

ஈரோடு புத்தகக் கண்காட்சி 2018 நிகழ்வில் பார்த்திபனை வைத்துக்கொண்டே அவரின் வரிகளை இப்படி யாரோ ஒருவரின் வரிகள் என்றே சத்தியராஜ் சொல்லி முடிப்பார். பின்னர் அவ்வரிகளின் உரிமையாளன் தான் என்றும் அவை எழுதிய புத்தகத்தையும் பார்த்திபன் குறிப்பிடுவார்.

அந்த வரிகள் இவையே...

"வாழ்ந்து என்ன செய்யப்போகிறோம் செத்துத் தொலையலாமே..
செத்துதான் என்ன செய்யப்போகிறோம் வாழ்ந்தே தொலையலாமே..‌‌"

இப்படி... எண்ணங்களும் வரிகளும் உலாவிக்கொண்டுதான் இருக்கின்றன. எழுதியவரின் அடையாளம் இல்லாமலேயே.....

(தயவுகூர்ந்து மற்றவர் கவிதைகளை உருவும் போது அவர்களின் பெயர்களையும் சேர்த்து உருவுங்கள்.....)

செ.இராசா

குச்சிக் கவிதையை அண்ணணின் குரலில் கேளுங்கள்

https://youtu.be/LpSTsTgRVrw

கதிரவன் எழும்முன் கட்டிலைத் துறங்கள்




கதிரவன் எழும்முன்
கட்டிலைத் துறங்கள்

கேட்கெட்ஸ் அனைத்தையும்
தூங்க விடுங்கள்..

காலணி விடுத்து
காலார நடங்கள்...

பறவைகள் பேசும்
பாடையைக் கேளுங்கள்..

பூனையின் குறுக்கே
புன்முறுவல் செய்யுங்கள்...

நாய்களின் மொழியில்
நன்றி சொல்லுங்கள்...

எதிர்ப்படும் எதையும்
இறையென எண்ணுங்கள்...

ஒருமுறையேனும்
உங்களிடம் பேசுங்கள்...

எனில்...
எல்லா நாட்களும் வரமே‌.‌

✍️

மதுபட்ட நாவினுள் மட்டனை வைத்தால்
அதுபடும் பாடாய் அனைவரும் ஆனோம்
விடுகதை போட்டு மிரட்டிடும் வாழ்வில்
விடுமுறை தானே வரம்‌

✍️செ.இராசா

(பாடை- பாஷை-மொழி)

04/07/2020

கோபம்

கோபம் கொள்ளாதே‌ என்றால்
கோபத்தில் கொந்தளிப்பவரா நீங்கள்
எனில் சற்றே வாருங்கள்...
கோபம் கொல்வோம்

வெகுளாமை வேண்டுமென்று
வள்ளுவன் சொன்னால்
ஆறுவது சினமென்று
ஔவை சொல்கின்றார்!

கோபத்தைத் துறந்துவிட
கௌதமர் சொன்னால்
ரௌத்திரம் பழகென்று
பாரதியார் சொல்கிறார்;எனில்
கோபம் கொள்வதா?! இல்லை
கோபத்தைக் கொல்வதா?!

அதுசரி...
எதையும் பறித்த வேகத்தில்
ஏங்கி அழுகிற குழந்தைக்கு
எங்கிருந்து வந்தது கோபம்?!
குஞ்சுகளைக் காக்கிற நோக்கத்தில்
கொக்கரித்துப் பாய்கிற கோழிக்கு
எங்கிருந்து வந்தது கோபம்?!

எனில் கோபம் பிறப்புரிமை தானே?!

சாத்தான் குளங்களில்
சாமானியர்கள் சாகும்போதும்
சிவனே என்றிருந்தால்
சிவனும் மன்னிப்பானா?!

சீனாக்காரன் சீண்டுகையில்
சிப்பாய்கள் நோகும்போது
வாய்மூடி இருந்தால்
வாய்க்கரிசி கிட்டாதா?!

ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள்

பெற்றோரின் கோபம்
பிள்ளைகளுக்கு வழிகாட்டும்
கற்றோரின் கோபம்
சமூகத்திற்கு நெறியூட்டும்

எண்ணம் மிகையுற்றால் ஆசையாகும்
ஆசை தடைபட்டால் கோபமாகும்
கோபம் சிதைவுற்றால் நாசமாய்ப்போகும்
ஆனால்....
கோபம் செறிவுற்றால் ஞானமாய் மாறும்
ஆம்
#கோபம்_தெளிவுற்றால்_ஞானமாய்_மாறும்

✍️செ.இராசா
04.07.2020