#குறளுரையாடல்_4
#ஐயா_1
எண்ணியதும் எண்ணியாங்கு
செந்தமிழில் வந்துவீழும்
கண்ணிரண்டின் சிந்தனைகள் காண்.
#நான்_2
காண்கின்றேன் ஐயா:உம் கைவண்ணம் அத்தனையும்
சான்றோனே வீழ்கின்றேன் தாள்
#ஐயா_3
தாள்வணங்கி நிற்கின்றோம் தாய்த்தமிழின் கைகளிலே
வாள்வாங்கி வென்றிடுவோம் வா
#நான்_4
வாவென்றால் வந்தென்னுள் வாழ்த்துகின்ற போதெல்லாம்
ஆ!வென்றே சொல்கின்றார் ஆம்
#ஐயா_5
ஆம்சொல்லல் மட்டுமின்றி ஆன்றோர்முன் மெய்யறிவால்
தாம்செல்லல் ஞான்றும் தவம்
#நான்_6
தவமாய்த் தவமிருந்துத் தாய்த்தமிழைக் கற்றால்
அவனியில் இல்லை அழிவு
#ஐயா_7
அழியும் அவனியின் யாதிலும் என்றும்
அழியாத் தமிழே அழகு
#நான்_8
அழகென்ற சொல்லில் அமைந்த ழகரம்
அழகென்றால் அஃதே அழகு
#ஐயா_9
அழகென்றால் பைந்தமிழின் அன்பாம் ழகரம்
பழகென்றால் நீயும் பழகு
#நான்_10
பழகப் பழக புளிக்கா தமிழால்
வியப்பில் மலரும் விழி
#ஐயா_11
விழியில் மலரும் வியப்பாந் தமிழே
மொழியில் புலரும் ஒலி
#நான்_12
ஒலியில் ஒலிசேர ஒவ்வொன்றும் மாறி
மொழியாய் மொழிகின்றோம் பார்
#ஐயா_13
பார்வைகள் யாவும் பரிமாணப் பாதைகள்
வேர்வையால் வெற்றிகளை வெல்
#நான்_14
வெல்லும்சொல் தேடியே வேண்டுகிற எல்லோர்க்கும்
நல்லசொல் கிட்டிடும் நம்பு
#ஐயா_15
நம்பிக்கை கொண்டிடு நம்மிடம்;பார் யானைக்குத்
தும்பிக்கை ஒன்றே துணை
#நான்_16
துணைக்குத் துணையாய்த் தொடர்கின்ற நட்பாய்
இணையத்தில் எல்லோரும் இன்று
#ஐயா_17
இன்றைய போதுகளை இன்றேநீ வாழ்ந்திடல்
என்றைக்கு மின்பமாம் கேள்
#நான்_18
கேள்விகள் கேட்டால்தான் கிட்டிடும் என்போரே
ஆள்வோரைக் கேட்போமா ஆய்ந்து
#ஐயா_19
ஆய்ந்தறிந்து தீட்ட அழகுக் கவிதைகள்
பாய்ந்தோடும் ஆறாகப் பார்
#நான்_20
பார்த்த விழிகளினால் பற்றுகின்ற காதல்போல்
கோர்த்த கவியென்றே கூறு
✍️ஐயாவுடன் & நான்
No comments:
Post a Comment