17/04/2018

அறியாத அறநூல்கள்



அறியாத அறநூல்கள்
அறிகின்ற முயற்சியிலே
அறநூல்கள் நான் புரட்ட
அறிந்துகொண்டேன் ஒரு விடயம்;
அறிவிலி நானென்று.....
அறியாமைப் பதரென்று...

அறிந்தது துளியென்றும்
அறியாதது கடலென்றும்
அறிந்ததால் திகைக்கின்றேன்....

அறிந்தது பொடியென்றும்
அறியாதது அண்டமென்றும்
அறிந்ததால் வியக்கின்றேன்...

அறியஅறியத் தெரிவதெல்லாம்
அறியாத ஓர் உலகம்!
அறியஅறியப் புரிவதெல்லாம்
அறியாத பல உலகம்!

(அறியாத ஒன்றை
அறிந்ததாய் நினைப்பதும்
அறியாதது எதுவென்றே
அறியாமல் இருப்பதும்
அறியாமை என்பதாகும்)

16/04/2018

கடன்_அட்டை_தவிர்ப்போம்



கடன்பட்டார் நெஞ்சம்
கலங்கிடும் என்றார் அன்று!
கடன்அட்டை கொள்வதே (கிரெடிட் கார்டு)
கவுரவம் என்கின்றார் இன்று!

கடனில்லா வாழ்க்கையில்
களிப்புடன் வாழ்ந்தார் அன்று!
களிப்புடன் வாழவே
கடன்களை சுமக்கின்றார் இன்று!

வங்கியில் கடன் தந்தும்
வாங்கிட மறுத்தார் அன்று!
வங்கிக் கடன் வாங்க
வரிசையில் நிற்கின்றார் இன்று!

வாங்கிய கடன் அடைக்க
வாசலில் நின்றார் அன்று!
வாங்கிய கடன் கேட்டால்
வருத்தம் கொள்கின்றார் இன்று!

வருவதில் பங்கிட்டு
வாழ்ந்திடும் வாழ்வியல் அன்று!
கண்டதை வாங்கியே
கடன்படும் வாழ்வியல் இன்று!

#கடன்_அட்டை_தவிர்ப்போம்
#கடன்_இன்றி_வாழ்வோம்

13/04/2018

நான் எனும் மண்குடம்

அணிந்துரை
***************

எத்தனையோ பார்க்கிறோம்

எதுவும்
நிலா தரும் சௌந்தரயம்
நீட்டுவதே இல்லை

ஆனால்
இந்த நூல்
சூரியன்

எத்தனை மலரோ ரசிக்கிறோம்

எதுவும்
மல்லிகை தரும் மதுச்சத்தம்
பிலிற்றுவதே இல்லை

ஆனால்
இந்த நூல்
ராஜ ரோஜா

எத்தனையோ உணவு ருசிக்கிறோம்

எதுவும்
நெல்லுச் சோறு தரும்
நிஜமான ருசி
நெய்வதே இல்லை

ஆனால்
இந்த நூல்
களங்கமில்லாத தாய்ப்பால்

வரிவரியாக
சில பல இரவுகளைத்
தின்று செரித்து வாசித்தேன்

வாசித்தப் பிறகறிந்தேன்
என்
வாயெல்லாம் தேன்

எத்தனை எத்தனைத்
தலைப்புகள்

எத்தனை எத்தனைக்
கருத்துகள்

எத்தனை எத்தனைச்
சிந்தனைகள்

எத்தனை எத்தனை
மொழி நயம் மிகுந்தக் கவிதைகள்

சமூகச் சாடல்
மது எதிர்ப்பு
சாதீய எதிர்ப்பு
ஞானக் கவிதை
பல்சுவைக் கவிதை
விண்ணில் பறக்கும் இதயம்
சுயக் கவிதை
அரசியல் கவிதை
நட்பு பாசக் கவிதை
அப்துல்கலாம்
சேகுவேரா
பாரதீ கவிதை
தமிழ்க்கவிதை
காதல் கவிதை
இதிகாசம்
இப்படி
தலைப்புகள் பார்த்ததிலேயே
தலை வியர்த்தேன்
தமிழ் குளித்தேன்

மரபினைப் போல
மழை பெய்தக் கவிதைகளில்
மனம் நனைந்தேன்
உயிர் உறைந்தேன்

வானுரசும்
வார்த்தைகளின் வைத்தியத்தில்
தேனுரசியத் தும்பியாய்
தேகமல்ல
ஆன்மா சிலிர்த்தேன்

கவிதைப் புத்தகத்தைக்
கையெடுத்த போதே
அம்மாச்சி நிற்கிறார்
அருளாட்சியாய்

இதோ!
ராஜமாணிக்கம் வரிகள் அழைக்கிறேன்

"அம்மாச்சி என்றாலே என்
அகக் காட்சி விரியுதம்மா"

அம்மையைக் கூட
அனாதை இல்லம் விடும் நாளில்
அம்மாச்சியை நேசிக்கும்
ஆழமான இவ் அகத்தை
ஆராதிக்காமல் வேறென்ன செய்வது

இலகுவானவர் போல
ஈரமானவர் போல
என்றெண்ணி
அடுத்த பக்கம் அவிழ்த்தால்
"ரௌத்திரம் பழகு" என
ரஞ்சிதப் பூவாய்க் கூப்பிடுகிறார்

வரிகள் இதுதான்

"எங்கெங்கு காணினும் லஞ்சம் லஞ்சம்
என்றுதான் தீருமோ மக்கள் பஞ்சம்"

இந்தக் கொந்தளிப்பில்
என் அப்பன்
பட்டுக்கோட்டை
பட்டு வேட்டிக் கட்டி
நிற்பது போலவே
நினைக்கத் தோன்றுகிறது

தமிழரைப் பற்றிச்
தாகமுறச் சொல்கிற போது
"கடந்து வந்தப் பாதையினை
மறந்து விட்டத் தமிழினமே"
என்கிறார் கவிஞர்

வாசிக்கிற போதே
வழிகிறதெனக்குக் கண்ணீர்

சுதந்திர இந்தியாவின்
சூட்சமம் அறியாமல்
எப்படியெல்லாம்
இடர்பட்டுப் போயாயிற்று
நம்
இனம் என்பதறிந்து
இரத்தம் உதிர்க்கிறதென் உயிர்

இன்று நம்
தமிழ் தேசம்
தண்ணீர் இன்றி
தணலாக வேகிறதென்பது
தவிர்க்கவியலா உண்மை

அதைக்
கவிஞர் எழுதுகிறார் கேளுங்கள்

"தண்ணீர் இன்றியே நன்னெஞ்சே-இன்றும்
கண்ணீர் வடித்து நின்றோமே"

மாற்றம் ஒன்றே
மாறாத ஒன்றென்பது
மாறா உண்மையென்கிறது
மண்ணாய்ந்தத் தத்துவம்

ஆனால்
கவிஞர்
வேறுவிதமாக படம் வரைகிறார்

"மாற்றங்கள் இங்கே வருவதற்கு-நாம்
மாற்றத்தை நமக்குள் புகுத்திடுவோம்"

இந்த வரிகளில்
இறந்து போன சாக்ரடீஸ்
மாறுவேடம் அணிந்து வந்தானோ என
மருண்டு போய் நிற்கிறேன்

யாவற்றிற்கும் பதில் தர
இறைவனால் கூட ஏலாது

செயல் யாவிற்கும் விளக்கம் இட
சிறந்தவன் யாராலும் ஆகாது

ஆனால்
காலம் பதில் சொல்லும்

இதைக்
கவிதை செய்திருக்கிறார்
நம் கவிஞர்

ஊழியரின் மன ஓட்டமென்ன
உணர முடியுமா நமக்கு

கவிஞர்
களமிறங்கிப்
பதில் சுமக்கிறார் பாருங்கள்

"அடிமைப் படுத்திடும் எண்ணம் கொண்டு
அடக்கிட யாரையும் எண்ணாதே"

மட்டுமல்ல

பன்னாட்டு நிறுவனப்
பன்னாடைகளைச் சொல்லும்
வெப்பம் பாருங்கள்

"கொடுங்கோலன் ஹிட்லர் கூட
பரவாயில்லை என்பீர்"

இன்றைய பள்ளிக்கூடங்களின்
இழிவுநிலை
ஒவ்வொரு பெற்றோரும்
உணர்ந்த ஒன்றுதான்

கவிஞர் வரிகளின்
கந்தகம் பாருங்கள்

"பணத்தைப் பறிக்கின்ற பள்ளிகளில்- நல்ல
பண்பை படிக்கின்ற எண்ணமில்லை"

"பணமே குறியாய் நினையாமல்-நல்ல
படிப்பைத் தருவதே அறமாகும்'

இதை
ஒவ்வொரு வீட்டின் நெற்றியிலும்
ஒட்ட வைப்பதே சால்புடைத்து

ஆறெல்லாம்
முன்பு
ஓடம் ஓடும்

இன்றோ
லாரி ஓடுகிறது

இதில்
பவுன் சம்பாதிக்கிறது
அரசும்
அரசு சார்ந்த ரௌடியினமும்

இதைக்
கவிஞர் சொல்கிறார் கேளுங்கள்

" ஒரு லோடு மணலின் விலை
ஒரு பவுனுக் காசாம்"

மட்டுமல்ல

கொசு என்ற
சின்னஞ்சிறு ஒன்றால்
டெங்குவரை சென்று
இழந்த உயிர்
ஒன்றல்ல ரெண்டல்ல

அதை

"கொலை செய்யாக் கொசுவாலும்
கொசு செய்யும் கொலையாலும்
அரசுக்கே அவமானம் சேரும்'

என்ன ஒரு
சமூக அக்கறை பாருங்கள்

மதுவின் தீமையினையும்
மதுவெடுப்போர் நிலையினையும்
பொட்டிலடிக்கும்
வரி பாருங்கள்

" குடங்குடமா குடித்த பின்னே
குடி மறக்க மாலை போட்டு
குடிக்காம தான் இருந்தீக"

மாலையிட்டவர்களெலாம்
மண்டியிடும் தருணம் இது

குடி பற்றி
வள்ளுவனே
வாய் திறக்காதது
சொல்லுகிறார் பாருங்கள்

"கள்ளும் சினமும் குணத்தால் ஒன்றே
சொல்லும் நாக்கும் புரளும்"

எத்தனை
எதார்த்தமான உண்மை பாருங்கள்

அது மட்டுமல்ல
அழிக்கும் சாதி பற்றி
அவர்
அறிவிப்பதென்ன தெரியுமா

"சாதியச் சங்கம் தேவையெனில்-நம்
தமிழைச் சாதியாய் மாற்றிடுவோம்"

அடடா
கம்பன்
பாரதி
பாரதிதாசன்
காணாத சிந்தனை இது

"நான் எனும் மண்குடம்"
என்பது
கவிஞரின் தலைப்பு

பார்த்ததும்
பரிதவித்து விட்டேன்

இது
சித்தர்கள் பேசிய
ஸ்ரீஞான செய்தியாயிற்றே என

புத்தனே
அறிக்கையிட்ட
பொருள் பொதிந்த அறிவிப்பாயிற்றே என

"மட்கலம் போலவே மனிதர்களும்
மறந்தனர் கடலெனும் கடவுளையே"

பாம்பாட்டிச் சித்தரின்
பாடல் வரியொன்று
ராஜமாணிக்கம் வரிகளில்
ராட்டினம் ஆடுவதாகவே உணர்கிறேன்

உயிரின் பிறப்பை
ஒரே வரியில்
உற்பவிப்பது பாருங்கள்

"உயிரணு போட்டியின் வெற்றியிலே
உயிராய் உலகில் ஜனித்திடுவோம்"

மதம் குறித்து இவரெண்ணம்
மலைக்க வைக்கிறதெனில்
மாற்றமே இல

"மலையின் உச்சியை அடைந்திடவே
பாதைகள் பலவாய் உள்ளது போல்
மறைபொருள் உண்மை அறிந்திடவே
மத்ங்களை உலகில் படைத்தனரோ"

அடடா
ஆழ்வார்கள்
நாயன்மார்கள்
கவிஞர் உருவில்
கருத்துச் சொல்கிறாரோ என
கவனித்து ரசிக்கிறேன் நான்

வாழ்க்கையைப் பற்றிக் கூட
வாளிப்பானச் சிந்தனையோடு
வளர்ந்தெழுந்து நிற்கிறார்
கவிஞர்

"இன்றைய தோல்வி வலிப்பதன் காரணம்
நேற்றைய வெற்றியால் துள்ளியதே"

அடப்பாவிப் பயலே

கவியரசர் கண்ணதாசனைத்
தூக்கித் தின்ன
முயற்சித்திருக்காயேடா

"கடலளவு வந்தாலும்
மயங்க மாட்டேன்-அது
கையளவே ஆனாலும்
கலங்க மாட்டேன்"

என்
ஞானத் தகப்பனின் வரிகளை
ஞாபகத்தில் கொண்டு வருகிறது
கவிஞரின்
சமகால வரிகள்

உலகவியலைச்
சொல்வது
உண்மையிலேயே
வியப்படைய வைக்கிறது

"எங்கெங்கு காணினும் நல்லவரா
என்றெனில் நீயொரு அப்பாவி
எங்கெங்கு காணினும் கெட்டவரா
என்றெனில் நீயொரு பெரும்பாவி"

இதைவிட
வாழ்வியலை யாரும்
வனைந்துவிட முடியாதென
திடமாக நம்புகிறேன்

"மதம் தாண்டிய
மனிதம் வேண்டும்"
என்பதில் புரிகிறது
அவரின்
வள்ளலார்ச் சிந்தனை

எழுதுகோல் பேசுவதாக
கவிஞரே பேசுகிறார்
கவனியுங்கள்

"கரங்கள் இரண்டாலும்
கற்களில் செதுக்குகின்ற
கல் உளியாய்ப் பிறந்தவன் நான்"

பாரதி சொன்னானே

"கவியரசு இல்லையெனும்
இழிநிலை என்னால்
கழிந்த தின்றே"

பாரதி சொன்னதைப்
பத்திரப்படுத்துகிறது
கவிஞரின் வரிகள்

அம்மன்பட்டி என்ற
அவரூர் சொல்கிற போது
ஆடைகட்டி
ஆடுகிறது அவர் தமிழ்

"பன மரத்து நுங்கு திங்க
படயோட கெளம்பிடுவோம்"

கால்சட்டைக் கால வாழ்வைக்
கண்ணுக்குள்
வரவைக்கும் கவிதை அது

மட்டுமல்ல

இதிகாசம்
புராணங்களை
எழுதிய அவர்
எளிமை கண்டு
இதயம் இனிக்க நிற்கின்றேன்

காரணம்
கர்ணனை அவர்
காட்டிய விதம்
ஆச்சரியப் பூச்சொரிவின்
அகழ்வாராய்ச்சி எனில் மிகையன்று

"நட்பென்று சொன்னாலும்
கொடையென்று சொன்னாலும்
சிந்தையிலே வரும் நாமம்
கர்ணனென்றத் திருநாமம்"

மட்டுமல்ல

சீதை
திரௌபதியை
ஒப்பிட்ட அவர் தமிழ்
உப்பின்டவரை
உடைத்துவிட இயலா ஒன்று

மகாபாரத
திருதிராஷ்டிரனை
கவிஞர் சொல்வது கேளுங்கள்

"புறக்கண்கள் மறைந்ததில்
இல்லை விசித்திரம்
அகக் கண்கள் மறைந்ததுதான்
அவன் சரித்திரம்"
என
புராணங்களுக்கே
புது உரை எழுதுகிறார் கவிஞர்

இவர் தொகுப்பு
பழமை
புதுமை
ஞானம்
கல்வி
அரசியல்
சமூகம்
இலக்கியம்
புராணப்
என
அனைத்தும் புனைந்த
அழகானப் பொட்டலப் பொக்கிஷம்

இவரெழுத்தில் உணர்கிறேன்
எதிர்காலச் சூரியன்
இடுப்பில் அமரும் நிலா
ஓடிவரும் வானம்
உடுத்தி வரும் காற்று
கையணைக்கும் பூமி
கடல் நிறைந்த நீர்

அற்புதமான
கவிதைகளின் தொகுப்பு இது

அவசியம்
ஒவ்வொருவரும்
வாசிக்க வேண்டிய படைப்பு இது

கவிதை உலகில்
இந்தத் தம்பிக்கு
இனிப்பான வெளிச்சமுண்டு

அதனால்
இப்போதே
வாழ்த்தி வரவேற்கிறேன்

தமிழ் மக்கள்
இந்தக்
கவிதை நூலை
வாங்கி
வாசித்து மகிழுமாறு
அன்போடு அழைக்கிறேன்

இந்தப் புத்தகம் படியுங்கள்

இன்னொரு பாரதி
அறிவீர்கள்

வாழ்க தம்பி.ராஜமாணிக்கம்

அன்பன்
விக்டர்தாஸ்





12/04/2018

முருங்கை_மரமும்_நானும்



எங்கிருந்து வந்தாயோ?!
எப்படிநீ வந்தாயோ?!
யாதொன்றும் அறியாமல்
யாமுன்னை நேசித்தேன்....

நீரில்லா தேசத்தில்
நீ நின்றாய்த் தனியாக
நீர் வார்க்கும் நல்லன்பில்
நான் வந்தேன் துணையாக..

பாசநீர் காட்டாமல்
பாவிநான் மறந்துவிட்டால்
பசலையால் பரிதவித்து
பசுமையைத் துறக்கின்றாய்!

அருகிலே நான்வந்து
அன்புநீர் தந்துவிட்டால்
அருவத்தின் மொழியாலே
அன்பினைக் காட்டுகின்றாய்!

வாடி நீயும் நிற்கையிலே
நாடி நானும் வந்துவிட்டால்
அரும்புகின்ற புன்னகையை
முருங்கையே நானறிவேன்....!!

#முருங்கை_மரமும்_நானும்

11/04/2018

காவிரி கிடைக்கலையே



பச்சை காட்டச்சொல்லி
பச்சோந்தி சொல்லுகின்றான்!
கருப்பு நிறமென்றால்
காவிக்குப் பிடிக்காதாம்!

உண்ணா விரதமென்று
ஊருக்குச் சொல்லிவிட்டு
உணவு இடைவெளியில்
ஊரை ஏப்பம் விடுகின்றான்

அடிமை அகதிகளின்
எடுபிடி அரசியலால்
காவிரி கிடைக்கலையே..
கவலையும் தீரலையே..

10/04/2018

நீர்க்குமிழி



அழகாய் உள்ளதற்கு
ஆயுள்காலம் குறைவு
நீர்க்குமிழி

எதிர்மறைச் சிந்தனை

குறுகிய ஆயுளிலும்
குறைவில்லாப் பேரழகு
நீர்க்குமிழி

நேர்மறைச் சிந்தனை

எழுந்தே நீ உயர்ந்தால்தான்
எழிலாகத் தெரிந்திடுவாய்

தன்னம்பிக்கைச் சிந்தனை

நிலையில்லா நீர்க்குமிழியாய்
நிலையற்ற மனித வாழ்வு

🔆தத்துவார்த்தச் சிந்தனை🔆

✍️செ.இராசா

09/04/2018

தமிழ்-4


எப்படி இத்தனை காலங்களாய்-நீ
இப்படிப் பொலிவுடன் திகழ்கின்றாய்?!
எப்படி இத்தனை முதுமையிலும்-நீ
இப்படி இளமையாய்த் தெரிகின்றாய்?!

எங்கும் இடர்கள் வருகையிலும்-நீ
எங்ஙனம் இப்படி சிறக்கின்றாய்?!
எங்கும் மூடர்கள் பெருகையிலும்-நீ
எங்ஙனம் உயரத்தில் உலவுகின்றாய்?!

கற்களில் சொற்களை தடம்பதித்து-நீ
காட்டினாய் உன்பெயர் தமிழென்று!
பனையின் ஓலையில் கவிபாடி-நீ
படைத்தாய் சாதனை அதுசான்று!

ஆங்கில மோகக் காலத்திலும்-நீ
அற்புதம் படைப்பது அதிசயமே!
முகநூல் மோகக் காலத்திலும்-நீ
முதன்மையில் நிற்பது அதிசயமே!

தரணியில் தனியாய்த் தெரிகின்ற-என்
தமிழே நீயென்(றும்) அதிசயமே!
தன்னிக ரில்லா மொழியான-என்
தாயே நீயென்(றும்) அதிசயமே!

—— செ. இராசா—-

நீயே வா... நதியே--100வது களஞ்சியம் கவிதைப் போட்டி (வெற்றிக்கவிதை)

100வது களஞ்சியம் கவிதைப் போட்டி- (வெற்றிக்கவிதை)
***********************************
கிடைத்த இடம்: மூன்றாமிடம்
நடுவர்: திரு. வசந்த் சுப்பையா அவர்கள்
குழுமம்: தமிழ்ப்பட்டறை
தலைவர்: திரு. சேக்கிழார் ஐயா
🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼

 

நீயே வா... நதியே
*****************
தடுப்பணை போட்டு தடுத்தியே நிறுத்தி
பிடித்து வைத்த கயவர்களே- நீர்
தடுப்பது மடைமை விடுவது கடைமை
பிடித்ததை உடனே விடுவீரோ?!

படைத்தவன் படைத்த படைப்பில் சிறந்த
படைப்பினை அறியா மூடர்களே- நீர்
தடுப்பதைத் தடுக்கும் ஆணையை மதித்து
கொடுப்பதை உடனே கொடுப்பீரோ?!

நடிப்பதில் சிறந்த நடிகர்கள் நிறைந்த
நாட்டில் பிறந்த உறவுகளே- நீர்
நடித்து நடித்து நாட்டினைப் பிடித்த
நடிகரை இனியும் நம்புவீரோ?!

திராவிடப் போர்வையில் திராவகம் வீசிய
திராவிட நாட்டின் தலைவர்களே- நீர்
திராவிடம் மறந்த திராவிடர் மூவர்க்கும்
திராவிடர் யாரெனச் சொல்வீரோ?!

கெடுப்பவர் இடத்தில் பிடிபிட்டுக் கிடந்து
கொடுத்திட நினைக்கும் காவிரியே- நீ
தடுத்திடும் கரங்களை நீயே உடைத்து
துடிப்புடன் பாய்ந்திடு பெருநதியே...

—-✍️செ.இராசா—-


https://www.facebook.com/photo.php?fbid=2114536638792414&set=gm.2010932879225618&type=3&theater&ifg=1 

08/04/2018

குறளறம்_1

அன்புடையீர் வணக்கம்,

- [அ] நான் இந்தப்பதிவை சுய விளம்பரத்திற்காகப் போடவில்லை என்பதை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். நான் பணிபுரியும் நிறுவனத்தில் உள்ள திரு. Selvam Chandran என்ற நண்பர் வருடாவருடம் பள்ளிகளில் செய்யும் அறப்பணிகளை முகநூலில் போட்டிருந்ததைக் கண்டேன். நாமும் அதேபோல் எதாவது செய்யவேண்டும் என்ற உள்ளுணர்வு எனக்குள் ஏற்பட்டது.

- [ஆ] அதன் விளைவாக, இந்த வருடம் நம்மால் முடிந்த ஒரு சிறு அன்பளிப்பாக எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், என் நண்பரும் ஆசிரியருமான திரு. Siva Thamilappan அவர்கள் பணிபுரியும் திருவேலங்குடி அரசு தொடக்கப்பள்ளியில் அனைத்து மாணவர்களுக்கும் திருக்குறள் புத்தகம் வழங்க கேட்டுக்கொண்டேன். தலைமையாசிரியர் அவர்களின் ஒப்புதலுக்கிணங்க நேற்று (07.04.2018) பள்ளியில் திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பட்டன என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் ஒரு நண்பர் வழங்கிய தமிழ்-ஆங்கில அகராதியும் திருக்குறள் புத்தகத்தோடு சேர்த்து வழங்கப்பட்டுள்ளது என்பதைக் கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். மேலும், அந்தப்பள்ளியை நவீன வசதிகள் கூடிய பள்ளியாக மாற்றும் முயற்சியில் அங்குள்ள தன்னார்வலர்கள் இறங்கியுள்ளனர் என்ற செய்தியும் மனமகிழ்வைத் தருகிறது.

- [இ] என் எண்ணத்தை செயல் வடிவமாக்கிய என் நண்பர் சிவக்குமாருக்கும், பள்ளி தலைமை ஆசிரியர் திரு. Rengasamy Rajamani அவர்களுக்கும் மற்றும் அனைத்துப் பள்ளி ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

- [ஈ] இடது கை கொடுப்பது வலது கைக்குத் தெரியாமல் செய்வதே அறம் என்பர். நான் இதைத் தெரியப்படுத்துவதற்கான நோக்கம் திருக்குறளின் முக்கியத்தவத்திற்காக மட்டுமே என்பதைக் கூறிக்கொள்கிறேன்.

- [உ] தமிழரின் புனிதநூலான திருக்குறளை இறைவனின் நூலாக மதித்து அதன்படி வாழ நம் பிள்ளைகளுக்குப் பயிற்றுவிப்போமாக.
அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.



#குறளறம்_1
#திருக்குறள்_100_புத்தகங்கள்_வழங்குதல்
#திருவேலங்குடி_தொடக்கப்பள்ளி

07/04/2018

இசை


இதயத்தின் இயக்கம் இசை
சுவாசத்தின் சுழற்சி இசை
விதையிடும் தருணம் இசை
முளைவிடும் முயற்சி இசை
பிறக்கும் சிசுவில் இசை
பறக்கும் சிறகில் இசை
கூவும் குயிலில் இசை
கரையும் காக்கையில் இசை
வீசும் காற்றில் இசை
ஓடும் நதியில் இசை
சுழலும் புவியில் இசை
சுற்றும் கதிரில் இசை
பிரபஞ்ச மூலம் இசை
பிரிவில்லா நாதம் இசை
அகரத்தில் இருக்கும் இசை
அனைத்திலும் ஒலிக்கும் இசை

இசையுன்றி இயங்காது உலகு....