17/09/2017

கடந்து வந்த பாதைகள்--- களஞ்சியம் கவிதைப் போட்டி-71 (வெற்றிக் கவிதை)

71வது கவிதைப்போட்டியில் என் கவிதையை முதலாவதாகப் தேர்வு செய்த நடுவர் திரு. கோபிநாத், சேலம், அவர்களுக்கு என் மனம், மொழி மற்றும் மெய்யால் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் எமக்கு வாய்ப்பளித்த தமிழ்ப்பட்டறை தளத்திற்கும், தலைவர் சேக்கிழார் அப்பாசாமி ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.












கடந்து வந்த பாதைகள்
********************
தமிழினமே! தமிழினமே!
தன்மானத் தமிழினமே!
தனிமனிதத் துதியாலே
தனைமறந்த தமிழினமே!


கடந்துவந்த பாதைதனை
மறந்துவிட்ட தமிழினமே!
நடந்துவந்த சுவடிகளை
தொலைத்துவிட்ட தமிழினமே!

அறிவு செல்வம் வீரமென்று
அனைத்திலுமே முதன்மை கொண்டு
அகிலத்தையே ஆட்டிவைத்த
ஆளுமையை ஏன் மறந்தாய்?

செறிவுநிறை நூல்கள் கொண்டு
செழுமைமிகு சிந்தை கொண்டு
செங்கோலில் தமிழ் பிடித்து
செலுத்தியதை ஏன் மறந்தாய்?

நீர் சேர்க்க அணையமைத்து
நீர் வடிய வழியமைத்து
நீர் செய்த மேலாண்மை
நீர் இன்று ஏன் மறந்தாய்?

வானுயர கோவில்கட்டி
கோனுயர கோட்டைகட்டி
ஊணுயற கூடம்கட்டி- இன்று
தானுயர ஏன் மறந்தாய்?

தமிழ்மூன்றும் கற்காமல்
தமிழ்மறையைப் பயிலாமல்
தமிழனாக நிற்காமல்
தமிழ்மரபை ஏன் மறந்தாய்?

கடந்துவந்த பாதைதனை
நினைந்திடுவாய் தமிழினமே!
குனிந்துகுனிந்து வீழாமல்
நிமிர்ந்துடுவாய் தமிழினமே!

------- செ. இராசா----
https://www.facebook.com/groups/1535309520121292/permalink/1904554636530110/ 

கனவே கனவே கலையாதே...


கனவே கனவே கலையாதே!
கானலாய் நீயும் மறையாதே!
கிழமை ஒருநாள் தவறாதே!
கீதைபோல் உரைத்திட மறவாதே! I
குணத்தின் தன்மையில் குன்றாதே!
கூறா விடயங்கள் கூறாதே!
கெட்டதை என்னுள் காட்டாதே!
கேள்விகள் கேட்பதை நிறுத்தாதே!
கைகள் கொடுப்பதைத் தடுக்காதே!
கொடுமையின் நிகழ்வுகள் கூறாதே!
கோபத்தில் வேகம் கொள்ளாதே!
கௌரவர் மாமனாய் நடக்காதே!

அப்துல்கலாம் ஐயா கண்டதெல்லாம்
ஆயிரம் அற்புதக் கனவுகளே...
இந்திய தேசம் உயிர்த்தெழவே
ஈகையின் நாயகன் கனவுகண்டார்...
உண்மையில் இளைஞர்கள் ஒளிபெறவே
ஊக்கங்கள் தந்தே மகிழ்வுற்றார்...
என்றும் கனவுகள் கலையாமல்
ஏழையின் தோழனாய் காட்சிதந்தார்...
ஐயா கனவுகள் நினைவாக
ஒவ்வொரு நாளும் முயன்றிடுவாய்....
ஓர் கனவதுவாய் கண்டிடுவாய்...
ஓளதாரியம் அஃதென வாழ்ந்திடுவாய்..

கனவே கனவே கலையாதே...
கலாம்ஐயா கனவினை மறவாதே...

எழுதுகோலுக்கு ஒரு கடிதம்


கரங்கள் இரண்டாலும்
கற்களில் செதுக்கிய
கல்உளி எழுதுகோலே...

பல்லாயிரம் கவிதந்த
பனைஓலைச் சுவடிகளின்
எழுத்தாணி எழுதுகோலே...

தொட்டுதொட்டு மை எடுத்து
தோல்துணி தொட்டெடுத்த
அக்கால எழுதுகோலே...

கழுத்தளவு மை நிரப்பி
காகிதத்தில் வடிக்கின்ற
இக்கால எழுதுகோலே...

எத்தனையோ காலங்களாய்
எழுத்துக்கள் உருவாக்கிய
எழுதுகோல் நண்பர்களே.....

எப்படி நான் சொல்லிடுவேன்?!
என்னுடைய நன்றியினை...

இப்படியே பதிக்கின்றேன்....

இப்படிக்கு,

எழுத்துக்கள்.

கடவுள்- வார்த்தையின் பொருள்


உள்ளே கடக்கின்ற உள்ளங்களே
உண்மையை உணர்ந்திட முடியுமென்று
உள்கட உள்கட என்றனராம்!

"உள்கட" என்கின்ற தமிழ்சொல்லே
"கடவுள்" என்று மருவியதாம்!

கடந்து உள்ளே செல்வதாலே
கடவுள் என்றே அழைத்தனராம்!

வெளியே வெளியே தேடாமல்
உள்ளே உள்ளே தேடிடுவோம்!

10/09/2017

{மனசு - மாசு= மனிதம்}


மனிதனின் மனது இதமானால்
மனிதம் மலர்ந்து மணம்வீசும்!
மனிதனுள் மனிதம் இருந்துவிட்டால்
மனித இனமே மகிழ்ந்தோங்கும்!

மனத்தை இதமாய் வைப்பதற்கு
மனத்தின் மாசுகள் அழித்திடனும்!
மனத்தின் மாசுகள் ஒழித்துவிட்டால்
மனிதனில் மனிதம் வெளியில்வரும்!

மறைந்துள்ள மாசுகள் அறிவதற்கு
மறைநூல் திருக்குறள் அதுபோதும்!
மறைநூல் மதிநூல் ஆகிவிட்டால்
மனநூல் மாசுகள் நீங்கிவிடும்!

------செ. இராசா----

எது கவிதை?


கசக்கி நசுக்கி அமுக்கி அழுத்தி
உருண்டு புரண்டு முரண்டு திரண்டு
உடைந்து குடைந்து நுழைந்து புகுந்து
செதுக்கி எடுப்பது கவிதையா?

இல்லை

கருத்து புதைத்து வெடித்து முளைத்து
சிலிர்த்து துளிர்த்து செழித்து வளர்த்து
மலர்ந்து விரிந்து மணந்து கனிந்து
பிறந்து வருவது கவிதையா?

07/09/2017

காதலரே....


இன்றைய தலைமுறைக் காதலரே
இன்பத்தில் எல்லையை தாண்டாதீர்!

எல்லைகள் தாண்டிடும் காதலரே
எதிலும் வரைமுறை மீறாதீர்!

வரைமுறை மீறிடும் காதலரே
வருவதை கருவதை செய்யாதீர்!

கருவதை செய்திடும் காமுகரே
கடவுளால் அழிவீர் மறவாதீர்!

பேசும் முன் யோசி




பேசிடுவீர்.....பேசிடுவீர்...
நல்மொழியில் பேசிடுவீர்
பேசுபவர் மொழியெதுவோ
அம்மொழியில் பேசிடுவீர்...

வன்மொழியோ மென்மொழியோ
கண்மொழியோ மெய்மொழியோ
எதிராளியின் மொழியெதுவோ
அம்மொழியில் பேசிடுவீர்...

சுடுஞ்சொற்கள் சொல்பவரா?
கடுஞ்சொற்கள் பேசிடுவீர்...

மென்மையாகக் கதைப்பவரா?
மெதுவாகப் பேசிடுவீர்...

பொல்லாங்கு சொல்பவரா?!
பொறுப்பாகப் பேசிடுவீர்..

அகங்காரம் பிடித்தவரா?!
அலட்சியமாய்ப் பேசிடுவீர்...

அரசியல் கதைப்பவரா?!
அளவாகப் பேசிடுவீர்...

ஆண்மீகம் அறிந்தவரா?!
ஆழமாகப் பேசிடுவீர்...

நாடகமாய் நடிப்பவராக?!
நாசூக்காய்ப் பேசிடுவீர்...

பொய்பேசித் திரிபவரா?
மெய்பேச்சை தவிர்த்திடுவீர்...

பொறாமை கொண்டவரா?!
பொருளிருப்பை மறைத்திடுவீர்

வீண்பேச்சு கதைப்பவரா?!
விலகியே இருந்திடுவீர்...

தம்பட்டம் அடிப்பவரா?!
தம்குறையைச் சொல்லாதீர்...

உண்மையாக இருப்பவரா?!
உரிமையோடு பேசிடுவீர்...

கருத்தாகச் சொல்பவரா?!
கவிதையாலே பேசிடுவீர்...

(தொடரும்)

----------செ. இராசா----------

அன்பு செய்


அன்பு சிறுத்த உள்ளத்திலே
தவறு பெரியதய்யா...
அன்பு பெருத்த உள்ளத்திலோ
தவறு சிரியதய்யா...

தவறு செய்யா மனிதர்களே
உலகில் இல்லையய்யா....
தவறை உணரா மனிதர்களோ
உலகில் தொல்லையய்யா....

மன்னிக்கின்ற மனிதர்களே
மண்ணில் தெய்வமய்யா....
மன்னிக்காத மனிதருக்கோ
மாண்பு மறையுமய்யா...

அன்பு என்ற ஆயுதமே
அதிகத் தேவையய்யா...
அன்பு மட்டும் இல்லையென்றால்
அகிலம் இல்லையய்யா...

அன்பில் நகைக்கும் மனிதருக்கு
ஏது துன்பமைய்யா....
அன்பாய் வாழும் மனிதருக்கு
எதுவும் இன்பமைய்யா....

---செ. இராசா---

புரிதல் (புரிந்தவர்களுக்கு மட்டும்)


 

அவனா அப்படி நடந்தான்?
அவனும் அப்படி நடந்தான்
அவனே அப்படி நடந்தான்.

ஆமாம், அவனேன் அப்படி நடந்தான்?

அன்பின் மிகுதியால் பணிந்தான்
பணிந்ததால் அதிகமாய் குனிந்தான்
குனிந்ததால் நிறையவே இழந்தான்
இழந்தபின் உண்மையை உணர்ந்தான்
உணர்ந்ததால் மெய்யினை அறிந்தான்
அறிந்ததால் அப்படி நடந்தான்.

ஆனாலும்...
அவனேன் அப்படி சொன்னான்?

தீயென்று சொன்னான்...
அதனாலென்ன?
தீதொன்றும் அறியாத ஒருவன்
தீயென்று சொன்னால்தான் என்ன?!

வார்த்தைகள் பலவாறு சொன்னான்.....
அதனாலென்ன
அவன்தானே சொன்னான்?

சொற்களின் பொருள்கள்
சொல்பவனைப் பொருத்தும் வேறுபடும்!
சொல்பவன் மனநிலை பொருத்தும் வேறுபடும்!
சொல்லும் காலத்தைப் பொருத்தும் வேறுபடும்!

அவனேன் அப்படி நடந்தான்?!
.........
நிழலாய் தொடர்ந்தால் தெரியும்
நிஜமே அசலெனப் புரியும்

------செ. இராசா-------